புதன், 19 பிப்ரவரி, 2025

பாடாய்ப்படுத்தும் பதின்பருவப் பாலியல் பலவீனங்கள்!!![இரவல் பதிவு]

கடந்த வாரம், கைவசம் தரமான ‘கருப்பொருள்’ இல்லாத நிலையில், இணையத்தில் தேடித் திரிந்தபோது முன்பு அறிந்திராத https://kathaippakkam.blogspot.com என்னும் தளம் கண்ணில் பட்டது. நுழைந்து துலாவியதில் 10 கதைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. முதல் கதையே நெஞ்சைக் கலங்கச் செய்தது. திருத்தம் ஏதும் செய்யாமல் சுட்டெடுத்ததை இப்போது இங்குப் பதிவு செய்திருக்கிறேன்[சில நாட்கள் கழித்து மீண்டும் அதில் நுழைய முயன்றபோது, ‘நீங்கள் தேடும் வலைப்பதிவு இல்லை’ என்று பதில் வந்தது].

சுட்ட கதை:

ள்ளி இறுதி வகுப்பில் தோல்வியடைந்த நாளிலிருந்தே டவுனில் இருந்த நூலகம் செல்வதும் நின்றுபோனது.

ஆனாலும், அங்கே போவதாக அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு,  மனம்போன போக்கில் சைக்கிளில் ஊர் சுற்ற ஆரம்பித்தேன். கூட்டம் அதிகம் இல்லாத சாலையோரக் கடைகளில் தேனீர் குடித்துவிட்டு பொழுதைக் கழிப்பதும், அதுவே பின்னர் வயசுப் பெண்கள் நடத்தும் கடைகளில் நேரம்போவது தெரியாமல் அவர்களின் அழகில் கிறங்கிக் கிடப்பதும்,  வேறு கடை தேடி அலைவதும் வாடிக்கையானது.

இந்தக் கெட்ட பழக்கம் கவலையை மறக்க உதவிய அதே நேரத்தில், விபரீதமானதொரு அனுபவத்தைப் பெறவும் காரணமானது.

அது விபரீதமானதல்ல, வளரிளம் பருவத்தில் இயற்கை நிகழ்த்தும் விந்தை என்பது அப்புறம் புரிந்தது.

நான் ‘விந்தை’ என்று குறிப்பிடுவது, நாகரிகமாகச் சொன்னால்  ஆண்மையின் வெளிப்பாடு. பெண்ணழகைத் தன்வயம் இழந்து ரசிக்கும்போது உடலெங்கும் பரவும் புத்தம் புதியதொரு சுக அனுபவம்.

அது சுகமானதுதான் என்றாலும் அதை அனுபவித்து முடிக்கும்போதெல்லாம் அது அசிங்கமானது, மிகவும் தப்பானது என்று உள்மனம் எச்சரித்தது.

‘எனக்குத் தெரிந்த என் வயசுப் பையன்களெல்லாம் தேர்வில் தோற்றிருந்தாலும் எப்போதும் போல கவலையில்லாமல் திரிந்துகொண்டிருக்க நான் மட்டும் ஏன் இப்படி? இத்தனைப் பலவீனமான நான் மீண்டும் தேர்வில் வெற்றி பெற்று மேல் படிப்புப் படிப்பதென்பது பகற்கனவுதானா?’ என்னும் கேள்விகள் அடிமனதைக் குடையலாயின.

பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலைங்களிலும்கூடத் தேவதைகளைத் தேடி அலைந்தபோதெல்லாம், பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேர்ந்து பேண்ட்&சட்டையும் கையில் கடிகாரமும், முகத்தில் பெருமிதக் களையுமாகக் காட்சியளித்த சக வயதுக்காரர்களைப் பார்த்து மனம் வெதும்பினேன்; “அடுத்து வரும் தேர்வில் தேர்ச்சி பெறுவேன்” என்று சபதம் மேற்கொள்வதும், ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கவர்ச்சிக் கன்னிகளைக் கண்டுவிட்டால் நின்று ரசிப்பதும் தவிர்க்க முடியாதவையாக இருந்தன.

சாலையோர மர நிழல்களில் சைக்கிளை நிறுத்திவிட்டு, நேரம் போவது தெரியாமல் கண்ணீர்விட்டுத் தேம்பித் தேம்பி அழுததும் உண்டு.

புதிய இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து  விடுபடவே முடியாதோ என்றெண்ணித் தவிப்பது வழக்கமாகிப்போனது.

நாட்கள் கரைந்தன.

இடைவிடாத உணர்ச்சிப் போராட்டத்துக்கு உள்ளானதாலும் சரியாக உணவு உட்கொள்ளாததாலும் உடம்பு மிகவும் மெலியலாயிற்று.

“என்ன ஆச்சி உனக்கு? கன்னமெல்லாம் குழி விழுந்து துரும்பா இளைச்சிட்டே. செவச்செவன்னு இருந்த உடம்பு கறுத்துப்போச்சு. படிக்கலேன்னா பரவாயில்லை. ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம். கலைப்படாம வீட்டோடு இரு” என்று கண்கள் கலங்கச் சொன்னாள் அம்மா.

அம்மாவின் அந்தக் கண்ணீர் எனக்குள் புதிய உத்வேகத்தை உண்டுபண்ணியது. “படிச்சிடுவேன்மா. நல்ல உத்தியோகத்துக்குப் போகணும்கிற உன் ஆசையை நிறைவேத்துவேன்” என்றேன் உறுதியான குரலில்.

“நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது. சிரமத்தைப் பார்க்காம பத்து நாள் டவுன்ல இருக்கிற மலைக்கோயிலுக்குப் போய்,  சாமியைத் தரிசனம் பண்ணிட்டு வா. நல்லதே நடக்கும்” என்று நம்பிக்கையூட்டினார் அம்மா.

அம்மா சொன்னபடியே மலைக் கோயிலுக்குப் போவதென்று தீர்மானித்தேன்.

அவர் வற்புறுத்தியும் கேளாமல், காலையில்  காலி வயிற்றோடு ஒன்பது நாட்கள் அந்த உயரமான மலையில் குடியேறியிருந்த ஈஸ்வரக் கடவுளை கண்ணாரக் கண்டு தரிசித்தேன். 

பத்தாவது நாளும் காலையில் வெறும் வயிற்றோடு, பல நூறு படிகள் ஏறித் தரிசனம் முடித்துத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருந்ததால் சுமார்  நூறு படிகளே எஞ்சியிருந்த நிலையில், அங்கிருந்த கல்மண்டபத்தின் ஒரு தூணை ஒட்டிய கற்பலகை மீது நீட்டிப் படுத்தேன்.

நேரம் போவது தெரியாமல் படுத்துக் கிடந்த என் தோள் தடவிப் பெயர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது, முகத்தில் புன்னகை தவழ, அன்று  என் நல்ல நடத்தைக்காக அடிக்கடி பாராட்டிய  என் வகுப்பு ஆசிரியை நின்றுகொண்டிருந்தார்.

“சட்டெனப் புன்னகை மறைய, சாமி கும்பிட வந்துட்டு ஏன் இப்படிச் சோர்ந்துபோய்ப் படுத்துக் கிடக்கிறே?” என்று கேட்டதோடு, அழகுப் பையனா தளதளன்னு இருந்த நீ இப்படிக் கறுத்துட்டியே. ரொம்பவே மெலிஞ்சுட்டியே. தேர்வில் தோத்துட்டமேன்னு ரொம்பத்தான் கவலைப்பட்டுட்டியா? வேற காரணம் எதுவும் இருக்கா?” என்று அருகே அமர்ந்து பரிவுடன் என் தலை வருடினார். “நானும் சாமி கும்பிடத்தான் வந்தேன். அப்புறம் ஒரு நாள் வர்றேன். சாமி கோவிச்சுக்காது” என்று சிரித்தவர், என் கை பற்றி “வா போகலாம்” என்றார்.

மலை அடிவாரத்தில் நிறுத்தியிருந்த அவர் காரில் என்னை ஏற்றிக்கொண்டார்.

டவுனை ஒட்டியிருந்த அவர் வீட்டுக்குப் போகாமல், என் ஊருக்குக் காரைச் செலுத்தினார்.

அம்மாவிடம் நலம் விசாரித்துவிட்டு, “தேர்வில் பெயிலான பத்து மாணவர்களை என் வீட்டின் மாடியில் தங்க வைத்துப் பயிற்சி கொடுத்துட்டிருக்கேன். இவனை அழைச்சிட்டுப் போறேன். தேர்வு முடிஞ்சிதான் இங்கே அனுப்புவேன். இவனோட அப்பாகிட்டே சொல்லிடுங்க” என்றார்.

அம்மா நன்றி ததும்பும் பார்வையுடன் வழியனுப்ப இருவரும் காரில் புறப்பட்டோம்.

இது என் வாழ்க்கையில் இடம்பெற்ற எதிர்பாராத திருப்பங்களில் ஒன்று.

அப்புறம் நடந்ததெல்லாம் நல்லவையே என்று சொல்ல ஆசைதான்.

ஆசைப்படுவதெல்லாம் நடக்கிறதா என்ன?

நல்ல புத்தியோடு வாழ முடிந்தால் மீண்டும் சந்திப்போம்.