திங்கள், 3 மார்ச், 2025

ஜெய் ஜோதிர்லிங்கம்! அடுத்த நம் பிரதமரும் மோடிஜியே!!

கீழே, நம் பிரதமர் மோடிஜி அவர்கள் சோம்நாத்[குஜராத்] கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்திற்குப் பூஜை, சிறப்பு அபிஷேகம்[வேறு எவரையும் அண்டவிடாமல் தானே தனியராய்ச் செய்வது?] எல்லாம் செய்து வழிபட்ட காட்சி[காணொலி] இடம்பெற்றுள்ளது.

பல்வேறு மதத்தவரும், மதச் சார்பு இல்லாதவர்களும், நாத்திகர்களும், கடவுள் சிந்தனையே இல்லாத அனாதைகளும் இரண்டறக் கலந்து வாழும் இந்த மதச்சார்பற்ற[என்று சொல்கிறார்கள்] நாட்டில், வழிபாட்டைப் பிறர் அறியாமலும், யூடியூப் காணொலியாகப் பதிவு செய்து வெளியிடாமலும் இவர் நிகழ்த்தியிருக்கலாமே என்று கேட்கத் தோன்றியதே தவிர கேட்பது சாத்தியப்படவில்லை.

காரணம்.....

100% மனம் ஒன்றிய நிலையில்[அருகில் அணுகுண்டு வெடித்திருந்தாலும் அவர் கவனம் சிதறியிருக்காது] ஜோதிர்லிங்கத்திற்கு மலர்கள் தூவி,  வாசனைத் திரவியங்கள் சொரிந்து, நெய்யும் பாலும் பெய்து மோடிஜி அதை வழிபட்டார் என்பதே.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் பக்திச் சிரத்தையுடன், வேதமந்திரங்கள் ஒலிக்க  இவர் செய்த பூஜை ஏறத்தாழ ஒரு நாத்திகனான அடியேனின் முழு நெஞ்சையும் நெகிழ்வித்தது.

இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையாக உள்ள அத்தனை இந்துக் குடிமக்களும் மோடிஜியின் வழிபாட்டை, விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு கண்டு மெய் சிலிர்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

இதன் பயனாக, இந்தப் புண்ணியப் பூமியில் அடுத்து நடைபெறும் தேர்தலிலும் நம் மோடிஜியே வெற்றி பெற்றுப் பிரதமராகி நல்லாட்சி நடத்துவார் என்பது உறுதி.

ஜெய் பாரதம்! ஜெய் ஜெய் மோடிஜி!!

                                       *   *   *   *   *
உள்மன உறுத்தல்!
அனைத்து உலகங்களையும் அதில் வாழ்கிற அனைத்து உயிர்களையும் அரவணைத்துப் பாதுகாக்கிற ஜோதிர்லிங்கத்தை வழிபடும் கடவுளின் வாரிசான[கடவுளின் குழந்தை] மோடிக்கு, கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் பாதுகாப்புத் தேவையா?