மதங்கள் பலவும் ‘ஆன்மா’ இருப்பதாகச் சொல்கின்றன.
அது இருப்பதாக நம்பப்படுவது மனித உடம்புக்குள்.
இந்த உடம்பு இருந்துகொண்டிருக்கவும் இயங்குவதற்கும் காரணமான இதயம், மூளை என்று பல உறுப்புகள் பற்றி விரிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்; ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆன்மிகர்களால் இதே உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ‘ஆன்மா’ பற்றியும் அவர்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கக்கூடும்.
இன்றளவும் ஐம்புலன்களாலோ[பார்த்தோ கேட்டோ தீண்டியோ சுவைத்தோ நுகர்ந்தோ.....], ஆறாவது அறிவால் சிந்தித்தோ அறிய இயலாத ஆன்மா இருப்பது உண்மை என்பதை நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை.
என்றேனும் ஒரு காலக்கட்டதில் அது சாத்தியப்படுமா என்னும் கேள்விக்கும் விடை அறிந்தார் இல்லை.
மனித உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ஆன்மாவைக் கண்டறிவதே இப்போதைக்குச்[எப்போதைக்குமே?] சாத்தியம் இல்லை என்னும்போது, எல்லை அறியப்படாத அண்டவெளியிலும், அதிலுள்ள அனைத்திலும்[பொருள்கள், உயிர்கள்& பிற] இரண்டறக் கலந்திருப்பவர் என்று சொல்லப்படும் கடவுளை ஐம்புலன்களால் அறிவது, அல்லது ஆறாம் அறிவால் உணர்ந்தறிந்து உறுதிப்படுத்துவது சாத்தியம் ஆகுமா?
ஆகுமோ ஆகாதோ, இருக்கும்வரை அமைதியாகவும், இயன்றவரை மன நிறைவுடனும் வாழ முயலுங்கள்; பிறர் அவ்வாறு வாழ்வதற்கும் உதவுங்கள்.