எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

12 வயதுச் சிறுமி> தேர்வில் தோல்வி> கடத்தல்> விபச்சாரம்> மீட்பு... எதிர்காலம்?!?!

//மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் என்ற இடத்தில் சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடப்பதாகப் போலீஸாருக்குத் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 12 வயதுச் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது அவரது சொந்த நாடு பங்களாதேஷ் என்று தெரியவந்தது.

அப்பெண்ணை இந்நிலைக்குத் தள்ளியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்ததில், பள்ளியில் படித்தபோது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாகவும்,  இதனால் பெற்றோருக்குப் பயந்து தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், அப்பெண் தன்னை இந்தியாவிற்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடத்தல்காரர்களிடம் சிக்கியதில் அவர்கள் தன்னைக் குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்திற்கு அழைத்துச்சென்றதாகவும், அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும், அப்போது 3 மாதத்தில் 200 பேர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்// -இது விகடன் செய்தி[https://www.vikatan.com/crime/mumbai-200-people-sexually-assaulted-a-12-year-old-bangladesh-girl-who-ran-away-from-home?pfrom=short-news].

[இணையப் படம்]

இந்தக் கொடூரமான  சோகச் செய்தி வாசிப்போரில் பலரையும், “ஐயோ பாவம் அந்தப் பெண்” என்று அனுதாபப்பட வைக்கும்.

இந்தப் புண்ணியப் பூமி பாவிகள் நடமாடும் பாவத்தின் விளைநிலமாக ஆகிவிட்டது” என்று வயதில் பெரியவர்களைப் பச்சாதபப்படத் தூண்டும்.

வாலிபர்களை, அந்த 200 பேரையும் தேடிக் கண்டுபிடித்து நடுதெருவில் நிறுத்திக் குஞ்சை நறுக்க வேண்டும்; கொட்டைகளை நசுக்க வேண்டும்” என்று கொந்தளிக்கச் செய்யும்.

பொதுமக்களில் சிலரை, “அத்தனை விபச்சாரப் புரோக்கர்களையும் இந்த ஈனத் தொழில் செய்வோரையும் தெருவில் வரிசைகட்டி நிறுத்திக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்று பொங்க வைக்கும்.

சமூக ஆர்வலர்களை, “ஆட்சி மாற வேண்டும். தன்னலமற்ற நல்லவர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும். தீயவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்று ஆதங்கப்படத் தூண்டும்.

அடியேனைப் போன்ற இணையப் பதிவாளர்கள், ‘அடி நெஞ்சு துடிக்கிறது; பாழ் நெஞ்சு பதறுகிறது. அறம் செத்துவிட்டது. ஓர் அப்பாவிச் சிறுமியின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுவிட்டது’ என்றெல்லாம் பத்தி பத்தியாக எழுதி வாசிப்போரின் பாராட்டை பெறத் துடிப்பார்கள்.

எது எப்படியோ, அந்தச் சிறுமியின் எதிர்காலம்?

விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட அவள் வங்காள தேசத்திலுள்ள அவளின் பெற்றோரிடம் சேர்க்கப்படுவாள்.

மீளாத துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் அவளின் தாயும் தந்தையும், படிப்பு வராமல் ஓடிப்போய், சீரழிக்கப்பட்டு, உடம்போடு மனமும் சிதைந்துபோன மகளை வீட்டோடு வைத்துப் பாதுகாப்பார்கள்.

அவள் சும்மா இருந்தாலும், காலம் ஓடிக்கொண்டே இருப்பதால் அவளின் வயதும் கூடிக்கொண்டே போகும்.

கல்யாணம் கட்டி வைத்து அவளை வாழவைக்க ஆசைப்படுவார்கள் பெற்றவர்கள்.

அது அத்தனை எளிதான காரியமா?

ஊர் வாய் நடந்ததை ஊதிப் பெருக்குமே.

எதையும் கண்டுகொள்ளாமல், அரும்பாடுபட்டு அவள் கழுத்தில் தாலி ஏற்ற முயன்றாலும், அந்த அப்பழுக்கற்ற பெண் மனம் சம்மதிக்குமா?

“நான் அசிங்கப்பட்டவள். என்னைக் கட்டிக்கொள்ளச் சம்மதிக்கும் நல்ல மனசுக்காரனுக்கு நான் துரோகம் செய்யமாட்டேன். கல்யாணத்தில் எனக்குச் சம்மதம் இல்லை” என்பாள்.

பெற்றோரின் முயற்சி தோல்வியில் முடிந்தால்.....

கல்யாணம் இல்லாமல் கொஞ்சம் ஆண்டுகள் கழிக்கலாம்; காலமெல்லாம் அது சாத்தியமா?

என்னதான் களங்கப்பட்டவளாக இருந்தாலும், முற்றும் துறந்த அக்கால முனிவர்களைப் போல் இச்சையைக் கட்டுப்படுத்தி வாழ்வது எளிதல்லவே.

பாவம் அந்தப் பதின் பருவ வங்களதேசத்து அப்பாவிப் பெண்!