எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 3 அக்டோபர், 2025

வேண்டாம் மத்தியப் போலீஸ்; வேண்டும் வேண்டும் துணை ராணுவம்!!

//கரூர் ரசிகர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து நிலவும் பதற்றமான அரசியல் சூழலில், நடிகர் விஜய்க்கு வழங்கப்படும் மத்திய போலீஸ் பாதுகாப்பை இரு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது// -இது இன்றைய ஊடகச் செய்தி.

தன்னலம் துறந்து, தமிழர் நலன் காக்க வீராவேசத்துடன் எழுச்சிப் பயணம் மேற்கொண்டிருக்கும் புதுயுகப் புதிய புரட்சித் தலைவர் ‘விஜய்’ அவர்களின் பாதுகாப்புக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

எதிரிகளால் இந்த வீரத் தமிழரின் உயிருக்குப் பங்கம் நேரலாம் என்பதை ரகசியப் புலனாய்வுக் குழுக்கள் மூலம் அறிந்த மோடி அவர்கள், இவருக்காக மத்தியப் போலீஸ் பாதுகாப்பை இருமடங்கு ஆக்கியிருப்பது போதாது.

பிரதமர் அண்மையில் மணிப்பூருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது துணை ராணுவத்தைப் பாதுகாப்புக்காக அனுப்பியது போல, வெற்றிக் கழகத் தலைவரின் பாதுகாப்புக்கும்[2026 தேர்தல் முடிந்து இவர் தமிழ்நாட்டு முதல்வராகப் பதவி ஏற்று, ‘பாஜக’வுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும்வரை] துணை ராணுவம் அனுப்பப்படுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.

நம் கோரிக்கையை மிக்கப் பரிவுடன் மோடி பரிசீலிப்பார் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.

நன்றி மோடிஜி!