எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 2 நவம்பர், 2025

வேண்டாம் கண்ணீர் அஞ்சலி! வேண்டும் பிறந்த நாள் வாழ்த்து!!

செய்தித் தாள்களில் ‘கண்ணீர் அஞ்சலி’ விளம்பரங்கள் இடம்பெறாத நாளே இல்லை. ஊர்தோறும், நாற்சந்திகளிலும் முச்சந்திகளிலும் இம்மாதிரியான அஞ்சலித் தட்டிகளை அடிக்கடி காண இயலுகிறது.

அஞ்சலி செலுத்தப்படுபவர்கள் பெரும்பாலும் வயது அறுபது... எழுபதுகளைக் கடந்த கிழங்கள்.

அஞ்சலிக்காரர்களில், 'கிழம் ஒழிந்தது' என்று குதூகளிப்பவர்களுக்கிடையே உண்மையாகக் கண்ணீர் வடிப்பவர்கள் மிக மிக அரிது.

கிழம் இறந்த செய்தியைச் சொந்தபந்தங்களுக்குத் தெரியப்படுத்த, ‘செல்பேசி[உரிமையாளன் செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் செல்வது] உள்ளது. அப்புறம் எதற்கு ரூபாய் ஆயிரக்கணக்கிலான செலவில் கண்ணீர் அஞ்சலி விளம்பரம்?

காரணம், ‘வெட்டிப் பந்தா’; விளம்பரம் பார்ப்பவர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. 

இது ஒரு தொற்றுநோய்.

ஆண்டுதோறும் சாமிகளுக்கான விழாக்களில், அதே சாமி பொம்மையை, அதே தேர்களிலும் சப்பரங்களிலும், அதே அலங்காரத்துடன் சுமந்து வீதி உலா வருவதை, செம்மறி மந்தைகளாய் வந்து குழுமி[செத்தொழிபவர்களை எந்தவொரு சாமியும் கண்டுகொள்வதில்லை]க் கும்பிடும் குருட்டு நம்பிக்கை போன்றதுதான் இதுவும்.

இந்தக் கூமுட்டைத்தனத்திலிருந்து விடுபட்டு, எழுபது என்பது வயதுகளிலும் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் முதியவர்களை, மனதார  வாழ்த்தி விளம்பரப்படுத்திப் பிறரையும் அறியச் செய்யலாம்.

செய்தால், இவர்களைப் போல் தாங்களும் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள்; உடல்நலம் பேணுவார்கள்; மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வார்கள்.

திருந்துமா இந்தப் போலிக் ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்தும் குருட்டு நம்பிக்கை கூட்டம்?