Mar 21, 2013

அவள் அழகியல்ல! ’செக்ஸி’யானவளும் அல்ல!! ஆனால், புத்திசாலி!!!

அவன், தன் தங்கைக்காகக் காம இச்சையைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தான்! அது அன்று உடைந்து சிதறியபோது.....

கதைத் தலைப்பு:                            வேகத் தடை

ரந்தாமன், பல ஆண்டுகளாகக் கட்டிக் காத்த பிரமச்சரியம் கொஞ்ச நாட்களாகவே ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது.

“முதலில் தங்கையின் கழுத்தில் தாலி. அப்புறம்தான் இந்த அண்ணனின் கல்யாணம்” என்று சங்கல்பம் செய்துகொண்டதோடு, ’பெண்  சகவாசமே’ வேண்டாம் என்று ‘முழுப் பட்டினி’ கிடந்ததெல்லாம் இப்போது முட்டாள்தனமாகப் பட்டது.

தீர்த்தகிரி அடிக்கடி சொல்வான்:  “டேய் பரந்தாமா, உன்னையும் என்னையும் மாதிரி தலைச்சனாய்ப் பிறந்து, பெத்தவங்களையும் பறி கொடுத்த ஆண்பிள்ளைகளுக்குக் கல்யாணம் என்பது கானல்நீர். பொம்பளை சுகத்துக்கு ‘அந்த மாதிரி’ பொண்ணுகளைத்தான் தேடிப் போகணும்.”

நண்பனின் பேச்சு எத்தனை எதார்த்தமானது என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்தது பரந்தாமனுக்கு.

தீர்த்தகிரி சொல்லி, டைரியில் குறித்து வைத்த மோகனாவின் முகவரியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.

ஒரு தடவை, அவள் வீட்டு வாசல்படி வரை போய்விட்டு, மனசாட்சி முரண்டு பிடிக்கவே வீடு திரும்பினான்.

'சேலத்துக்காரர்கள், தங்கை பொன்மணியைப் பெண் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களின் பதில் பாதகமா இருந்தா விரதத்துக்கு அழுத்தமாய் ஒரு முற்றுப்புள்ளி’ என்று முடிவெடுத்திருந்தான்.

அவர்களின் பதில் பாதகமாகவே இருந்துவிட்டது.

“உடம்பை வித்துப் பிழைச்சாலும் மோகனா ரொம்ப டீஸண்ட்டானவள்..மாதம் தவறாம மெடிக்கல் செக்கப் செஞ்சுடுவா. வி.டி., எயிட்ஸுன்னு பயந்து சாகாம அவளைக் கையாளலாம்” என்று தீர்த்தகிரி அளித்த சான்றிதழ், பரந்தாமனிடமிருந்த கொஞ்சநஞ்ச தயக்கத்தையும் விரட்டியடித்தது.

கைபேசியை எடுத்தான்.

“ஹலோ...மோகனாவா...?”

“ஆமா...நீங்க....?”

“நான் பரந்தாமன்...தீர்த்தகிரி ஃபிரண்டு”

“சொல்லுங்க சார்.”

“அது வந்து...வந்து...”

வஞ்சனையில்லாமல் சிரித்தாள் மோகனா. “பாவம் சார் நீங்க. பயந்து பயந்தே வாலிப் பருவத்தை வீணடிச்சுட்டீங்க. தீர்த்தகிரி உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கார். யூ ஆர் வெல்கம்.” தேன் தடவிய குரலில் பரந்தாமனைக் கிறங்கடித்தாள் மோகனா.

பரந்தாமன் தங்கையை அழைத்தான்.

‘ஒருத்தரைப் பார்க்கணும். வெளியே போய் வர்றேம்மா.”

“அவர் யாருண்ணா?”

“அவர் நீ தெரிஞ்சிக்க வேண்டிய ஆளல்ல.”

“நீங்க எப்பவுமே இப்படிப் பூடகமா பேசினதில்ல. இன்னிக்கி உங்க நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு. காலையில் டிபனுக்கு ரசம் கேட்டீங்க. எப்பவும் என்னோடு சேர்ந்துதான் சாப்பிடுவீங்க. இன்னிக்கி நீங்க பாட்டுக்குத் தனியாவே சாப்பிட்டீங்க......”

திடுக்கிட்டான் பரந்தாமன். “அது வந்து...ஏதோ ஞாபகத்துல...” வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

“எல்லார்த்தையும்விட பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? இன்னிக்கி என் பிறந்த நாள். என் பிறந்த நாள் அன்னிக்கித் தவறாம கோயிலுக்கு அழைச்சிட்டுப் போவீங்க. அதையும் செய்யல.” அழுகையைக் கட்டுப்படுத்தி வெறுமனே சிரித்தாள் பொன்மணி.

“நீங்க உங்க ஃபிரண்டோட போனில் பேசினதை அரைகுறையாக் கேட்டேன். உங்க குழப்பத்துக்கான காரணத்தை ஓரளவு புரிஞ்சிட்டேன். இப்போ நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்.......” தொடராமல் சற்றே இடைவெளி கொடுத்தாள் பொன்மணி.

பேசினாள்: ”ஒடிசலான தேகம்; ஒடுங்கிய கன்னம். இரண்டு உதடுகளையும் ஒட்டவிடாம தடுக்கிற தூக்கலான பல்லுங்க. அட்டக் கறுப்பு. இதுதான் நான். அழகு ரசனையுள்ள எவனும் கத்தை கத்தையாப் பணம் கொடுத்தாலும் என்னைக் கட்டிக்க மாட்டான். அப்படியே ஒருத்தன் சம்மதிச்சாலும், கொடுக்க நம்மகிட்டப் பணம் இல்ல. அதனால, இனி எனக்கு மாப்பிள்ளை தேடுறதை நிறுத்திடுங்க...” சொல்லி நிறுத்தி, பரந்தாமன் மீது பார்வையைப் படர விட்டாள்.

அவன் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தான்.

தொடர்ந்தாள் பொன்மணி:  “வீட்டை ஒட்டியிருக்கிற நம் காலி மனையில் சின்னதா ஒரு செட் போட்டு ’டெய்லரிங் கடை’ போட்டுக் கொடுங்க. என்னால முடிஞ்சவரை உங்க குடும்பத்துக்கு ஒத்தாசையா இருந்து காலம் கழிச்சுடுவேன். உடனே ஒரு தரகரைப் பார்த்து உங்களுக்குப் பெண் தேடச் சொல்லுங்க.”

மவுனமாய்த் தலையசைத்தான் பரந்தாமன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000