'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Saturday, April 18, 2015

அன்று அக்கினி பகவான் நடத்திய வேட்டையும் தப்பிப் பிழைத்த தளிர்களின் பேட்டியும்!

பொழுதுபோக்காகப் பழைய ‘விகடன்’[01.08.2004] இதழ் ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ‘தப்பிப் பிழைத்த தளிர்கள்!’ என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த அந்தச் சிறுமிகளின் பேச்சு என்னைக் கண்கலங்க வைத்தது. படியுங்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் பள்ளியொன்றில் 90 குழந்தைகள் தீயில் கருகிய  அந்தக் கொடூரம் உங்கள் மனக்கண் முன் விரியும்; கண்களைக் குளமாக்கும்.
புஷ்பராணி[7ஆம் வகுப்பு]:
“கிளாஸ் ரூமில் ஒக்காந்திருந்தோம். உஷா டீச்சர் வந்து, ‘சீக்கிரம் ஓடுங்க...ஓடுங்க’ன்னு எங்களைப் படியிலே இறக்கிவிட்டாங்க. என் ஃபிரெண்டு அனிதாவோட தம்பி அருணைப் பார்த்தேன். ‘டேய் வாடா’ன்னு அவனை இழுத்தேன். ‘உள்ளே பை கிடக்குக்கா’ன்னு அதை எடுக்க உள்ளே ஓடினான். அவன் அங்கேயே செத்துப் போய்ட்டான்.”

எம்.சரண்யா[7ஆம் வகுப்பு]:
“அருணோட அக்கா அனிதா என் கிளாஸ்மேட்தான். தீப்பிடிச்சதும் எல்லாரும் ஓட ஆரம்பிச்சோம். ஆனா, அருண் உள்ளே ஓடறதைப் பார்த்ததும், ‘ஐயோ அருணு’ன்னு தம்பியைக் கூட்டிட்டு வர்றதுக்காக புகைக்குள்ள ஓடினா. தம்பியைக் காப்பாத்தப் போன அவளும் செத்துட்டா.”

சுகன்யா[8ஆம் வகுப்பு]:
“டிஃபன் பாக்ஸ், புக், பை எல்லாத்தையும் எடுத்துட்டு ஓட முடியல. அப்படியே போட்டுட்டேன். படிக்கட்டு எங்கே இருக்குன்னு பார்த்து இறங்க முடியல. ஒரே புகை. கண்ணு இருட்டிருச்சி. மூச்சிவிட முடியல. மூனாங்கிளாஸ் ஜன்னலையெல்லாம் யாரோ அண்ணனுங்க உடைச்சாங்க. எரியுது...எரியுதுன்னு ஒரே சத்தம். எப்படியோ நான் ஓடிவந்துட்டேன்.”

ரேவதி[6ஆம் வகுப்பு]:
“என் டியர் ஃபிரெண்டு நந்தினி. நாங்க ரெண்டுபேரும்தான் வேன்ல பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து வருவோம். கடையில் மிட்டாய் வாங்கி டப்பாவுல போட்டுகிட்டு மதியம்வரை வெச்சிருந்து திம்போம். இப்போ அவ தீயில் சிக்கிச் செத்துப் போய்ட்டா. எனக்குப் பயமா இருக்குண்ணே.”

ஸ்ரீவித்யா[6ஆம் வகுப்பு]:
மோனிகாதான் என் ஃபிரெண்டு. அவள விட்டு நான் வேற யார்கூடவாவது பேசினாக்கூட சண்டை போடுவா. ஆனா, ரொம்ப நல்லவ. ‘எல்லாரும் ஓடுறாங்க, வாடீ’ன்னு இழுத்துகிட்டு வந்தேன். நடுவுல எல்லாரும் இடிச்சித் தள்ளினாங்க. ரொம்ப நேரம் என்கூடதான் இருந்தா. நடுவுல எங்க போனான்னு தெரியல. அவளும் வெளியே வந்திருப்பான்னு தேடினேன். ஆனா, அவ தீயில் சிக்கிச் செத்துட்டா.”

ஆர்.சரண்யா[7ஆம் வகுப்பு]:
“தப்பிச்சி ஓடி வர்றப்ப என்கூட ரோஜாவும் வந்தா. ரெண்டுபேரும் அழுதுகிட்டே கேட்வரைக்கும் போய்ட்டோம். திடீர்னு, ‘ஐயோ...பாரதி எப்படீடி வருவா’ன்னு மறுபடியும் மூனாவது மாடிக்கு ஓடினா. பாரதிக்குக் காலு சரியில்ல...அவளால ஒழுங்கா நடக்கவே முடியாது. ‘ரோஜா...பாரதி’ன்னு அழுதுகிட்டே நின்னேன். என்னைப் புடிச்சி யாரோ வெளியே தள்ளிட்டாங்க. வீட்டுக்கு அழுதுட்டே வந்துட்டேன். அப்புறம்தான் சொன்னாங்க...’ரோஜா, பாரதி ரெண்டு பேரும் சேர்ந்தே தீயில் சிக்கிச் செத்துப் போய்ட்டாங்க’ன்னு.”

இளந்தளிர்களின் பாசப் போராட்டங்களைப் பார்த்தாவது அக்கினி பகவான் தன் வேட்டையை ஒத்திப்போட்டிருக்கலாம். அற்ப மனிதர்களால் அவருக்கு ஆணையிட முடியுமா என்ன?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000No comments :

Post a Comment