வியாழன், 17 மார்ச், 2016

காதல் கலப்புத் திருமணங்களும் ‘தலித்’ இளைஞர் படுகொலைகளும்!

காமத்தின் இன்னொரு பெயரே காதல்[திருமணத்திற்குப் பிறகு காணாமல் போகிற பருவ மயக்கம் இது] என்பதை உணராமல், இதை உன்னதமானது என நம்புகிறார்கள்  நம் இளைஞர்களில் மிகப் பெரும்பாலோர். இதற்குத் தலித் வாலிபர்களும் விதிவிலக்கல்லர்.

இதன் விளைவு, தலித் அல்லாத ஆதிக்க ஜாதிப் பெண்களைக் காதலிப்பதோடு கடிமணமும் புரிகிறார்கள்; ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள் 

இதன் தொடர்ச்சிதான் உடுமலையில் சங்கர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு.
‘சாதிபேதமற்ற சமுதாய மறுமலர்ச்சி’க்கு எதிரான இக்கொடுஞ் செயலைக் கண்டித்து, அரசியல் தலைவர்களும் சமுதாய நல ஆர்வலர்களும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்; சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.

சங்கர் கொல்லப்பட்டது ஒரு குற்றச் செயல். இம்மாதிரியான குற்றங்கள் புரிவோரைத் தண்டிக்க இப்போதுள்ள சட்டங்களே போதுமானவை. இவற்றின் மூலம் தூக்கிலிடுதல் என்ற அதிகப்ட்ச தண்டனையே வழங்கலாம்.

சங்கரைக் கொலை செய்தவர்களுக்குத் தாங்கள் செய்யவிருக்கும் குற்றங்களுக்கான தண்டனை என்ன என்பது முன்கூட்டியே தெரியும். தெரிந்தே குற்றம் செய்தார்கள். காரணம், பக்குவப்படாத மனம்; அடங்காத ஜாதிவெறி.

இவர்களைப் போன்றவர்கள் மனம் திருந்தாதவரை, எந்தவொரு சட்டத்தாலும் இத்தகைய கொடூரக் கொலைகள் நிகழாமல் தடுப்பது சாத்தியமல்ல.

உண்மை இதுவாயின், ஆதிக்க ஜாதிப் பெண்ணை மணக்கிற ஒரு தலித் இளைஞன், தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள  வழியே இல்லையா?

உண்டு.

அவன் [தன் காதல் மனைவியுடன்] வெளியே செல்லும்போது தன் வசம் ஒரு கைத்துப்பாக்கி வைத்துக்கொள்வது [தற்காப்புக்காக] அதற்கான  சிறந்த வழியாகும்

எதிரிகளின் திட்டமிடலைப் பொருத்துச் சில நேரங்களில் சாத்தியப்பபடாவிடினும், பெரும்பாலான நேரங்களில் அது அவன் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். [செல்வந்தர்களும் அரசியல் பிரமுகர்களும் தற்காப்பிற்காக அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருப்பதைக் கருத்தில் கொள்க].

தலித் இளைஞர்கள் என்றில்லை, கலப்பு மணம் புரிந்து, அச்சுறுத்தலை எதிர்கொள்கிற பிற ஜாதி இளைஞர்களுக்கும் இப்பரிந்துரை ஏற்புடையதே.

அரசாங்கம் இது குறித்து உடனடியாக ஓர் ஆணை பிறப்பிக்கலாம்; ‘தவறாகப் பயன்படுத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற நிபந்தனையுடன் இவர்களுக்கு இலவசமாகக் கைத்துப்பாக்கிகளை வழங்கலாம்.

ஆட்சிபீடத்தில் இருப்போர் பரிசீலிப்பார்களா?
=============================================================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக