மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Saturday, March 19, 2016

காதலா, காமமா, வயிற்றுப்பசியா?...வலிமையானது எது?

‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ‘காதல் மலர்ந்தாலோ காமம் வலை விரித்தாலோ, பசியென்ன, மானம் மரியாதை சுயகௌரவம் என்று எல்லாமே காணாமல் போகும்’ என்பது இன்றைய எதார்த்தம்.

“மனிதர்கள்தான் காதலுக்கும் காமசுகத்துக்கும் பலியாகிறார்கள்    என்றால் மற்ற உயிரினங்கள் எப்படி?” என்று எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. எனினும், விடை தேடும் முயற்சியில் தீவிரம் காட்டியதில்லை.

பழைய விகடனில்[27.05.2001] ‘பல்லி’க்கூடம் என்னும் தலைப்பிலான ஒரு குட்டிக்கதையைப்[போட்டியில், ரூ3000/= பரிசு பெற்றது] படித்தபோது, அதன் ஒரு பகுதி என் கவனத்தை ஈர்த்தது. கொஞ்சம் மாற்றங்களுடன் அதைப் பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள்
#.....நள்ளிரவில் மாதவன் வருவான். தன் மேல் உயிரையே வைத்திருக்கும் கிழவிக்குத் தெரியாமல் அவனுடன் ஓடிப்போக இருப்பது யமுனாவுக்கு வேதனையைத் தந்தது. 

மல்லாந்து படுத்துக் கிடந்த அவளின் பார்வை, சுவரின் மேற்பரப்பில்  படர்ந்தது. அங்கே.....

இரைக்கான தேடலில் ஈடுபட்டிருந்தது ஒரு பல்லி. சில கணங்களில் இன்னொரு பல்லி அங்கு வந்தது. அது, இரை தேடும் பல்லியின் பின்புறமாகச் சென்று அதனைத் தழுவ முற்பட்டது. எனவே, அது   ஆண் பல்லி என்பது புரிந்தது.

பெண் பல்லியோ ஆண் பல்லியிடமிருந்து தப்பித்துப் போக்குக் காட்டியது; அதனை அலைக்கழித்தது.

சற்று நேரம் கழித்து, ஆண் பல்லி மீது பரிதாபம் கொண்டதோ என்னவோ ஆணின் தழுவலை எதிர்பார்த்து அசையாமல் நின்றது. ஆண் பல்லியும், அதுவரையிலான அலைக்கழிப்பை மறந்து புணர்ச்சி விருப்புடன் பெண் பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து.....

எங்கிருந்தோ பறந்துவந்த பூச்சியொன்று பெண் பல்லிக்கு முன்பாக அமர்ந்தது.

அதுவரை காதல் மயக்கத்தில் திளைத்து, கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த பெண் பல்லி, கிளர்ந்தெழுந்த உணர்ச்சிப் பெருக்கிலிருந்து கணப்பொழுதில் விடுபட்டுப் பூச்சியின் மீது பாய்ந்தது; ‘லபக்’கென்று அதைப் பிடித்துச் சுவைக்கத் தொடங்கியது.

ஆண் பல்லி ஏமாற்றத்துடன் நின்றது.

பல்லிகளைப் பொருத்தவரை, காதலை விடவும் காமத்தை விடவும் ‘பசி’ வலிமையானது..........

.....யமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். ‘வேலை இல்லாத மாதவனால், தன்னை வைத்துப் பாதுகாக்க முடியாது. அவனுக்கு வேலை கிடைக்கட்டும். அப்புறம் கிழவியிடம் அழுது கதறிச் சம்மதம் வாங்கிவிடலாம். இப்போது அவனுடன் ஓடிப்போக வேண்டாம்’# .
*****************************************************************************************************************************************************
நன்றி: குட்டிக்கதையின் ஆசிரியர் வ.ந.கிரிதரன்

No comments :

Post a Comment