ஞாயிறு, 29 மே, 2016

‘புகழ்’ பெறத் துடிக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு.....

கருப்பொருள் எதுவாயினும், வாசகரின் மனம் கவரும் வகையிலும் அவர்களுக்குப் பயன்படும் வகையிலும் எழுதினால் புகழ் பெறலாம் என்பது உண்மைதான். புனைகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில் அது சாத்தியமாவதற்கு    நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. தவிர்க்க வழியே இல்லையா? உண்டு என்பதே நம் பதில். படியுங்கள்.
மேலே, 'எதையும்’ என்றதில் ‘பாலுணர்வுக் கதை’களைச் சேர்க்க வேண்டாம்.

இவ்வகைக் கதைகளைத் தனிமையில் படித்து மனதுக்குள் சிலாகித்தாலும், பொது இடங்களில் பழித்துப் பேசுவதே நம்மவரில் மிகப் பெரும்பாலோர் வழக்கம். 

விறுவிறு நடையில் மண் மணம் கமகமகமக்கும் அற்புதமான புனைகதைகளைப் படைத்தளித்த, கரிசல் காட்டு எழுத்தாளர்  கி. ராஜநாராயணன், கொஞ்சம் பாலுணர்வுக் கதைகளையும்[பாலுணர்வைப் பதப்படுத்துபவை அல்ல; தூண்டுபவை!] எழுதியதற்காகக் [’தாய்’ என்னும் வார இதழில் வெளி வந்தன; நூல் வடிவமும் பெற்றது] கடும் கண்டனங்களுக்கு  ஆளானார் என்பது வாசகர் பலரும் அறிந்ததே.

சிறந்த நாவல்களும் சிறுகதைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கிய, எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன், ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ தொகுத்ததற்காக எழுந்த எதிர்ப்பலையில்  எதிர் நீச்சல் போட்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் பாலுணர்வைத் தூண்டும் படைப்புகளைத் தரும் எண்ணம்  வேண்டவே வேண்டாம்.

வேறு எதை எழுதுவதாம்?

குடும்பக் கதைகளும் மர்மக் கதைகளும் பேய்க் கதைகளும் எழுதுவதற்கு நம்மில் ஏராள எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சரித்திரக் கதைகளுக்கும் அறிவியல் கதைகளுக்கும் நகைச்சுவைக் கதைகளுக்கும் கடும் பஞ்சம் நிலவுகிறது.

சாண்டில்யனுக்குப் பிறகு வரலாற்றுக் கதைகள் எழுத ஆட்கள் இல்லை. 

அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குத் தமிழில் எழுதத் தெரிவதில்லை. எழுதத் தெரிந்தவர்களுக்குப் போதிய அறிவியல் அறிவு இல்லை. எனவே, தமிழில் அறிவியல் கதைகள் உதிப்பதற்கான தருணம் எப்போது மலருமோ தெரியாது.[சுஜாதா, இத்துறையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை]

கல்கி, தேவன், துமிலன், சாவி போன்றோருக்குப் பிறகு, நகைச்சுவைக் கதைகளை எழுதிக் குவித்தவர் ‘அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ்’ பாக்கியம் ராமசாமி மட்டுமே.

இவரும் காலமாகிவிட்டார்[தகவல் அளித்த நண்பர் பகவான்ஜிக்கு நன்றி].]

இவரையடுத்து......................

தமிழ்ப் புனைகதை உலகில் ஒரு பரந்த வெற்றிடமே தென்படுகிறது.

நீங்கள் எழுத்தாளராக இருந்தால், ஏதாவது ஒரு தளத்தில் முதல் ஆளாகக் கால் பதிக்கலாம். 

குறிப்பிடப்பட்ட மூன்றில் நகைச்சுவையாக எழுதுவது சற்றே எளிது. ஆனால் அதற்கும்கூட, ஆழ்ந்த நகைச்சுவை உணர்வும் தளராத மன உறுதியும் கடின உழைப்பும் அவசியத் தேவை.

எனக்கும் ஆசை இருந்தது; இருக்கிறது; போதிய உழைப்பு மட்டும் இல்லை. அதனால்தான் இந்தப் ‘பரிந்துரை’ப் பதிவு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இது, புதுப்பிக்கப்பட்ட பதிவு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக