கடந்த ஆண்டில், குமுதம் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலக்கிய கதை இது. இதைப் பிரசுரிக்க[க்கூட] ‘இயலாமைக்கு’ அதன் ஆசிரியர் பெரிதும் வருந்தியிருக்கக்கூடும். நீங்கள் வருந்துவீர்களா, மகிழ்வீர்களா? படியுங்கள்.
சமையல்காரியையும் மற்ற பணியாட்களையும் முன்கூட்டியே அனுப்பிவைத்த தனசேகர், தனக்கான அறையில் கண்மூடிப் படுத்திருந்த மகள் வான்மதியை நெருங்கினார்; வாஞ்சையுடன் அவளின் தலை வருடி, “சின்ன வயசிலேயே தாயை இழந்த உன்னைக் கண்கலங்காம வளர்த்தேன். இருந்தும் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கே. அதுக்கான காரணம் பிடிபடல. நீ எழுதிவைத்த குறிப்பைப் படிச்சதில், எவனோ உன்னைக் காதலிச்சிக் கைவிட்டிருப்பானோன்னு சந்தேகம் வருது. அதுதான் நடந்ததுன்னா, அப்படியொரு துரோகத்தைச் செஞ்சவன் யாருன்னு சொல்லு. அவன் எங்கிருந்தாலும் இழுத்துட்டு வந்து உன் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன். சொல்லுடா, யார் அவன்?” என்றார்.
சமையல்காரியையும் மற்ற பணியாட்களையும் முன்கூட்டியே அனுப்பிவைத்த தனசேகர், தனக்கான அறையில் கண்மூடிப் படுத்திருந்த மகள் வான்மதியை நெருங்கினார்; வாஞ்சையுடன் அவளின் தலை வருடி, “சின்ன வயசிலேயே தாயை இழந்த உன்னைக் கண்கலங்காம வளர்த்தேன். இருந்தும் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கே. அதுக்கான காரணம் பிடிபடல. நீ எழுதிவைத்த குறிப்பைப் படிச்சதில், எவனோ உன்னைக் காதலிச்சிக் கைவிட்டிருப்பானோன்னு சந்தேகம் வருது. அதுதான் நடந்ததுன்னா, அப்படியொரு துரோகத்தைச் செஞ்சவன் யாருன்னு சொல்லு. அவன் எங்கிருந்தாலும் இழுத்துட்டு வந்து உன் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன். சொல்லுடா, யார் அவன்?” என்றார்.
வான்மதி ஏதோ சொல்ல நினைத்தாள். பொங்கி வழிந்த அழுகையினூடே வார்த்தைகள் உருப்பெறுவது சாத்தியம் இல்லாமல் போனது.
“உன்னைக் காதலிச்சி இந்த நிலைமைக்கு ஆளாக்கின அயோக்கியன் யாரு? தயங்காம சொல்லு.”
வான்மதி கண்களைத் துடைத்துக்கொண்டாள். அழுகை சற்றே வடிந்து விம்மலாக மாறியிருந்தது.
கலைந்த ஓவியமாகக் கிடந்த மகளின் முகத்தை மெலிதாக வருடித் தன் பக்கம் திருப்பி, “நீ அஞ்சு வயசுக் குழந்தையா இருந்தபோது உன் அம்மா செத்துப்போனா. போறதுக்கு முன்னாடி உன்னைக் கண்கலங்காம பார்த்துக்கணும்னு என்கிட்டே சத்தியம் வாங்கினா. நான் சத்தியம் தவறலாமா? நீ அழலாமா? உன்னை அழவிடுவேனா?” என்ற தனசேகர், குரல் உடைந்து, தழுதழுத்துத் தானும் அழுகைக்கு ஆயத்தமாவதை உணர்ந்து பேசுவதை நிறுத்தினார்; சற்று நேரம் மௌனத்தில் புதையுண்டார்.
வான்மதியின் அன்னை சத்தியவதிக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத் தனசேகர் செய்த தியாகம் கொஞ்சநஞ்சமல்ல. மறுமணம் செய்துகொள்ளவில்லை; தகுதி இருந்தும் ஊருக்கொரு சின்னவீடு வைத்துக்கொள்ளவில்லை
வான்மதி கேட்டதையெல்லாம் வாங்கித் தந்தார்; கேட்க நினைத்ததையெல்லாம் கொண்டுவந்து குவித்தார்; கேட்க நினையாத பரிசுகளால் அவளைக் குளிப்பாட்டினார். சுருங்கச் சொன்னால், வான்மதி உறங்கும்போதுகூட அவள் வதனத்தில் புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டார். அவர் செய்த ஒரே தவறு, ஒரு கன்னிப் பெண்ணுக்குத் தேவையான குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளைக்கூட விதிக்காமல்போனதுதான்.
அதன் விளைவு, அவர் கொஞ்சமும் எதிர்பாராத அந்த விபரீதம் நடந்துவிட்டது. ஒரு மாலைப் பொழுதில், தனியறையில், கதவைத் தாழிட்டுக்கொண்டு, துப்பட்டாவில் சுருக்கு வைத்துத் தொங்கிவிட்டாள் வான்மதி..
சிற்றுண்டி கொண்டுபோன சமையல்காரி ஜன்னல் வழியாக இந்தக் காட்சியைக் கண்டு பதறிக் கூச்சலிடப் பணியாட்கள் திரண்டு வந்து கதவை உடைத்து அவளை விடுவித்தார்கள். டாக்டரை வரவழைத்து, தனசேகருக்குத் தகவல் கொடுத்து...எந்தவொரு சேதாரமும் இன்றிக் காப்பாற்றப்பட்டாள் வான்மதி.
மகளின் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்ற நிலையில்தான், ஒரு வெள்ளைத் தாளில் அவள் எழுதிவைத்த ,’காதல் கொன்றுவிடு’ என்னும் குறிப்பு பற்றி யோசித்தார் தனசேகர்; தன் செல்ல மகளை எவனோ காதலித்துக் கைவிட்டிருக்கிறான் என்று அனுமானித்தார்.
”அவன் யாருன்னு சொல்லுடா. இருபத்துநாலு மணி நேரத்தில் கட்டி இழுத்துட்டு வந்து உன் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறேன்” என்றார் மகளின் முன்நெற்றியை வருடியவாறு.
இருபத்திநான்கு மணி நேரத்தில் என்றது சாத்தியம் இல்லாமல் போனாலும், தனசேகர் வெறும் வாய்ச்சொல் வீரரல்ல. ஒரு வாரமோ ஒரு மாதமோ சொன்னதைச் சாதித்துவிடும் பிடிவாதக்காரர்; பிரபலமானவரும்கூட.
“யாரம்மா அவன்? உன் கிளாஸ்மேட்டா? ஒரு நாள் உன்னைக் கல்லூரியில் விட வந்தபோது அறிமுகம் பண்ணிவெச்சியே சசிகுமார், அவனா வான்மதி?”
வான்மதியிடம் தேம்பல் மிச்சமிருந்தது; பதிலில்லை.
தொடர்ந்தார் தனசேகர்:
“கண்ணப்பனா...கார்த்திகேயனா...சிவநேசனா...சொல்...சொல்...”
சொன்னாள் வான்மதி. “அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி இவங்கள்ல யாரும் என்னைக் காதலிக்கல; கைவிடவும் இல்ல. நான்தான் இவங்க மாதிரியான வயசுப் பையங்களைக் காதலிச்சேன்...இல்ல இல்ல...காதலிக்கிற மாதிரி நடிச்சேன்....”
“என்னம்மா சொல்றே?” -நா குழறியது தனசேகருக்கு.
''அப்பா, ஏழைப் பொண்ணுகளைப் பொருத்தவரை காதல் ரொம்பப் புனிதமானது. என்னை மாதிரி பணக்காரப் பொண்ணுகளுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நான் நெறையப் பையன்கள்கூடப் பழகினேன். சிலரோட நெருங்கிப் பழகினேன். பழக்கம், காதலாகி, ‘இனி கல்யாணம்தான்’கிற கட்டத்தை நெருங்கும்போது, ‘காதல் கொன்றுவிடு’ன்னு ஒரு மெஸேஜ் அனுப்பிக் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுடுவேன். என்னைக் காதலிச்சவன் நொறுங்கிப் போவான். அப்படி நொறுங்கிப் போனவங்கள்ல சரவணனும் ஒருத்தன். நல்ல பையன். படிப்பைப் பாதியில் விட்டுட்டு, முகத்தில் தாடியும் உடம்பெல்லாம் அழுக்குமா கவிதை எழுதிட்டு அலையறான்னு கேள்விப்பட்டேன்..”
தனசேகர் மௌனம் போர்த்திருந்தார்.
“என் காதல் நாடகத்தால், கட்டிய பெண்டாட்டி கைக் குழந்தையோட பிறந்தகத்துக்குக் கோவிச்சிட்டுப் போக, அரைப் பைத்தியமாய் அலைஞ்சிட்டிருக்கார் பேராசிரியர் சற்குணம். எனக்கு ரத்தத்தில் காதல் கடிதம் எழுதின வினோத் எங்க போனான்னே தெரியல. அவனுடைய விதவைத் தாய், மகன் மீதான நம்பிக்கைகளைக் கண்ணீரில் கரைச்சுட்டுப் பத்துப் பாத்திரம் தேய்ச்சி வயித்தைக் கழுவிட்டிருக்காங்களாம். இப்படி என்னைக் காதலிச்சவங்க எல்லாம் பாதிக்கப்படுவதைக் கேள்விப்பட்ட அப்புறம்தான் சிந்திக்க ஆரம்பிச்சேன். நான் செய்திட்டுவந்த குற்றம் புரிய ஆரம்பிச்சுது. அப்பாவி இளைஞர்களோட வாழ்க்கை சீரழிஞ்சி போவதைப் பார்த்து விபரீதமான இந்த விளையாட்டையும் நிறுத்தினேன். ஆனா, விதி, என் வாழ்க்கையில் வேறு மாதிரி விளையாடிச்சி.” -கண்மூடி மௌனத்தில் ஆழ்ந்தாள் வான்மதி. மூடிய இமைகளுக்குள்ளிருந்து கண்ணீர்த் துளிகள் வெளிப்பட்டன.
தொடர்ந்தாள்: “பையன்க வாழ்க்கையைப் பாழடிச்ச என் காதல் விளையாட்டுக்கு நானே பலியாயிட்டேன். என்னோட படிச்ச விவேக்கைத் தீவிரமா காதலிச்சேன். ஆனா, அவன் என்னைக் காதலிக்கல. என்னைக் காதலிச்சவங்களுக்கு நான் எப்படிக் ‘காதல் கொன்றுவிடு’ன்னு குறுஞ்செய்தி அனுப்பினேனோ அதே மாதிரி அவனும் எனக்கு அனுப்பினான். அது தந்த அதிர்ச்சியில் ரொம்பவே உடைஞ்சி போனேன்; செத்துடறதுன்னு முடிவு பண்ணினேன்....நீங்க கொடுத்த சுதந்திரத்தைத் தப்பான வழியில் பயன்படுத்தி அதுக்கான தண்டனையையும் அனுபவிச்சிட்டேன்; உங்க கௌரவத்துக்கும் பங்கம் உண்டுபண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா.”
-சொல்லி முடித்து, மீண்டும் குமைந்து குமைந்து அழ ஆரம்பித்தாள் வான்மதி.
அவள் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தார் தனசேகர்.
===============================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக