செவ்வாய், 15 நவம்பர், 2016

நம்பாதீர், நம்பாதீர்.....ஜோதிடத்தை நம்பாதீர்!

http://naanmaanudan.blogspot.com என்னும் ஒரு புதிய வலைப்பக்கத்தில் வெளியான பதிவின் நகல் இது. அதன் உரிமையாளருக்கு நன்றி.


விண்ணில் உலவும்  கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை பற்றிய தங்களுக்குள்ள அரைகுறைப் புரிதலுடன் நீண்ட நெடுங்காலமாய் மக்களை ‘அறிவிலிகள்’ ஆக்கிகொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.

நீங்கள் ஜோதிடம் பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், கீழ்க்காணும் கேள்விகளை அவர்களிடம் கேட்டுவையுங்கள். சிலரேனும் திருந்தக்கூடும்.


                                                        கேள்விகள்:
ஒன்று:
கோள்கள் வரிசையில் உள்ள ராகுவையும் கேதுவையும் ‘நிழல் கோள்கள்’ என்கிறீர்கள். அவை பூமி, சந்திரன் ஆகியவற்றின் நிழல்கள்தான்.  நீங்கள் சொல்வதுபோல், ‘நிழல் கோள்கள்’ என்று எவையும் இல்லை. அவற்றையும் கணக்கில் கொண்டு நீங்கள் பலன் சொல்வது தவறு அல்லவா? 

இரண்டு:
பூமியும் ஒரு கோள்தான். இதைக் கணக்கில் கொள்ளாமல் மக்களுக்குப் பலன் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இதனால் அவர்களுக்குப் பெரும் தீங்குகள் விளையும் என்பதை அறிவீர்களா?

மூன்று:
திங்கள்[சந்திரன்] என்பது பூமியைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள். அதை முதன்மையான ஒரு கோளாகக் கருதிப் பலன் சொல்லுகிறீர்கள். இது தவறு என்பதை நீங்கள் உணர்ந்தது உண்டா? இல்லையெனில், இனியேனும் உணர்வீர்களா?

நான்கு:
மற்ற கோள்கள் தெறித்து விலகித் திசை கெட்டு ஓடிவிடாதவாறு அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது ஞாயிறு[சூரியன்],  அந்த ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்று ஜோதிட முன்னோடிகள் அறியாமையால் சொன்னதையே இந்த அறிவியல் யுகத்திலும் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். திருந்தவே மாட்டீர்களா? ஜோதிடத் தொழிலைக் கைவிடவே மாட்டீர்களா?

ஐந்து:
யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டிருக்கின்றன. உங்கள் ஜோதிடக் கணக்கில்  இவை இடம்பெறவில்லை.  இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் எப்படி ஜாதகம் கணிக்கிறீர்கள்?

ஆறு:
செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களுக்கும் துணைக்கோள்கள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இவற்றையும் நீங்கள் கணக்கில் கொள்வதில்லை.

உங்களின் ஜோதிடக்கலை முன்னோடிகள் தங்களுக்கிருந்த அரைகுறை வானிலை அறிவைப் பயன்படுத்தித்தான் ஜோதிடக் கணக்கை வகுத்துவிட்டுப் போனார்கள் என்னும் உண்மை இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இனியும் பொய்யான பலன்களைச் சொல்லி மக்களின் வாழ்க்கையை வீணடிக்கப் போகிறீர்களா?

இக்கேள்விகளை என் கணினியிலேயே நகல்கள் எடுத்து அவ்வப்போது, அறிந்தவர் அறியாதவரிடமெல்லாம் வினியோகித்து வருகிறேன். எனக்கான பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று!
===========================================================================================================
உதவி: ‘பெரியார் சாத்தித்ததுதான் என்ன?’, தமிழ்க்குடி அரசுப் பதிப்பகம், சேப்பாக்கம், சென்னை - 600 005.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக