புதன், 7 டிசம்பர், 2016

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவாக.....

எத்தனை பெரிய மனிதராயினும் மரணம் எய்திய ஒருவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் பிரார்த்தனை செய்வதும் வரவேற்கத்தக்க மனித நாகரிகம் எனினும் அவற்றால் பயனேதுமில்லை என்பது என் எண்ணம். அத்தகையோர் நினைவாக மரண பயத்தைக் குறைக்கவும், மரணத்தைத் தள்ளிப் போடுவதற்குமான ஆய்வுகளில் ஈடுபடுவது மனித குலம் ஆற்ற வேண்டிய அரிய பணியாகும்.

அம்மையார் தமிழகத்திற்கு ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து இப்பதிவை முன்வைக்கிறேன்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதை நம்பாதவர்கள்கூட, மரணத்தை எண்ணி அஞ்சவே செய்கிறார்கள். அவர்களில் எளியவனான நானும் ஒருவன். அடிக்கடி மரணம் குறித்துச் சிந்திப்பதாலோ என்னவோ, அது குறித்துக் கொஞ்சம் பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றுக்கான சிறு பட்டியலையும் [பழையவை] தந்திருக்கிறேன். அவற்றை ஏற்கனவே படித்தவர்களும் படிக்க விரும்பாதவர்களும் அவற்றைப் புறம்தள்ளி மேலே தொடரலாம்.

அ] http://kadavulinkadavul.blogspot.com/2013/05/blog-post_5539.html

ஆ] http://kadavulinkadavul.blogspot.com/2011/08/27.html

 இ] http://kadavulinkadavul.blogspot.com/2011/09/28.html
தோன்றுவதும் அழிவதுமாகப்  பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். இந்நிலையில், நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோமே அது ஏன் என்று எண்ணி எண்ணி மயங்கி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை......................

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் இன்றியமையாத் தேவைகளாகும்.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ’உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, ஓர் உடம்பைப் பெற்று, மண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பிறந்து வளர்ந்து வாழ்வதன்  மூலம், ‘தற்காலிகமாக’  அவை ’அழிவிலிருந்து’ தப்பிப் பிழைக்கின்றன.

வாழ்ந்து முடித்து..................................
அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்த அவை, உடம்பு அழியும்போது நிரந்தரமாக அழிந்து போகின்றன.
பல கோடி உயிரணுக்களும் சினை முட்டைகளும் தோன்றிய சில கணங்களிலேயே அழிந்து போக, விதிவிலக்காக, அவற்றினும் மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உயிரணுக்களும் சினை முட்டைகளும் இரண்டறக் கலப்பதன் மூலம் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றனவே தவிர, அவை அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை.

ஆக, தோற்றம் கொண்ட அனைத்து உயிரணுக்களும் சினை முட்டைகளும் ஏதோ ஒரு நிலையில் அழிந்து போவதென்பது தவிர்க்கவே இயலாத ஒன்று என்பது தெளிவாகிறது.

இதுவே இயற்கை நியதி.

உண்மை இதுவாக இருக்கையில், ‘உயிர் என்றும் அழியாதது; உடம்பு அழியும் போது அது அங்கிருந்து வெளியேறுகிறது என்று நம்புவது அடிப்படை ஆதாரங்களற்ற அனுமானம்தான்.

இம்மாதிரியான அனுமானங்களைச் செய்வதற்கும் அவற்றை நம்புவதற்கும் அடிப்படைக் காரணம்........................

ஏதேனும் ஒரு வடிவில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆசைதான்.

ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது. அது ‘உண்மை’ ஆவது சாத்தியமா?

 அறிவியலால் அது சாத்தியப்படும் காலம் வருமா?

அதற்குக் 'காலம்’தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரை,  கடவுள், பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறுபிறப்பு என்று எதைஎதையோ நம்பி எண்ணற்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி, இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை  வீணடிக்காமல், தமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
***********************************************************************************************************************



4 கருத்துகள்: