'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Monday, March 13, 2017

சாத்தான் எழுதிய கதை!!!

“நீங்க கடவுளை நம்புறதில்லதான். அதுக்காக இப்படியெல்லாம் கதை எழுதணுமா?”...கீழ்வரும் கதையைப் படித்த என் மனைவி கேட்ட கேள்வி இது! நான் பதில் சொல்லவில்லை. அவரும் அதை எதிர்பார்க்கவில்லை! இது, 2012ஆம் ஆண்டுக் கதை.

உள்ளூர் நண்பரின் விமர்சனம்: “இதை எழுதினது நீங்க அல்ல; உங்களுக்குள் புகுந்துவிட்ட சாத்தான்.”
வீடு திரும்பிய தந்தையும் தாயும் தன்னருகே வந்து அமர்ந்ததும் சந்திரன் கேட்டான்: “வக்கீலைப் பார்த்தீங்களா?”

அவன் அப்பா மட்டும் “இல்லை” என்பதாகத் தலையாட்டினார்.

“அப்படீன்னா இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீங்க?”

அப்பா தலை குனிந்தார். அம்மா சொன்னார்:  “கோயிலுக்கு.”

“எதுக்கு?”

“ஏம்ப்பா இப்படிக் கேள்வி கேட்டு எங்களை நோகடிக்கிறே? உனக்கு நோய் குணமாகணும்னு வேண்டிக்கத்தான் போனோம்.”

“வேண்டுதல் நிறைவேறிச்சா?”

“நிறைவேறுதோ இல்லையோ, ஏதோ கொஞ்சம் நிம்மதி கிடைக்குது.”

“நிம்மதி கடவுளை வேண்டிக்கிற உங்களுக்குத்தான். தீராத நோயால் பாதிக்கப்பட்ட எனக்கல்ல. என் உடம்புல எதிர்ப்புச் சக்தி ரொம்பவே குறைஞ்சுட்டுது. நோவு அதிகரிச்சிட்டே போகுது. டாக்டர்கள் கை விட்ட என்னை எந்தக் கடவுளும் காப்பாத்தாதுன்னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்காம, கடவுள் கைவிட மாட்டார்... மாட்டார்னு கண்ட கண்ட கோயிலுக்கெல்லாம் போறீங்க; தலைமுடி வளர்த்துத் தாடி மீசை வெச்சவன் காலில் எல்லாம் விழறீங்க. இந்த நிலைமை நீடிச்சா நான் சாகறதுக்குள்ளே உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுடும்.”

“அப்படியெல்லாம் சொல்லாதேப்பா” -குரல் தழுதழுக்கச் சொன்னார் அப்பா.

“சொன்னா என்ன? நடக்கக் கூடாததையா நான் சொன்னேன்? புருஷனை இழந்த எதுத்த வீட்டு அமுதா மாமியோட பத்து வயசுப் பொண்ணு ஆறு மாசம் முந்தி காணாம போச்சு. போலீசில் சொன்னாங்க; எல்லாப் பேப்பரிலும் விளம்பரம் குடுத்தாங்க. பொண்ணு திரும்பக் கிடைக்கல. கண்ட சாமியார் காலில் எல்லாம் விழுந்தாங்க. கோயில் கோயிலா அலைஞ்சாங்க. பலன் இல்ல. மனசைத் தேத்திக்கணும். செய்யல. அது அவங்களால் முடியலேன்னும் சொல்லலாம்.  “கடவுளே எங்க மகளை மீட்டுக் கொடு..... மீட்டுக் கொடுன்னு சோறு தண்ணி இல்லாம தியானத்தில் மூழ்கிக் கிடந்தாங்க. என்னாச்சு?..............

..............என் மகளைப் பார்த்தீங்களா, பார்த்தீங்களா சாமி’ன்னு எதிர்ப்பட்டவங்களை எல்லாம் விசாரிச்சுட்டுப் பைத்தியமா அலைஞ்சிட்டிருக்காங்க...........”

கொஞ்சம் இடைவெளியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட சந்திரன் தொடர்ந்தான். “நீங்களும் அந்த நிலைமைக்கு ஆளாயிடக் கூடாதுன்னுதான் ரெண்டு பேரையும் வக்கீல்கிட்டே அனுப்பினேன்” என்றான்.

அம்மா சொன்னார்:  “வக்கீல் மூலமா, உன்னைக் கருணைக் கொலை செய்யக் கோர்ட்டில் அனுமதி வாங்கணும்னு சுலபமா சொல்லிட்டே. இதுக்கு உன்னப் பெத்த எங்க மனசு இடங்கொடுக்குமா ராசா?” -அவர் கண்களில் தங்குதடையின்றிச் சரம் சரமாய்க் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது.

“இடம் கொடுக்காதுதான். வேற வழி இல்லையேம்மா. இப்போ ஓரளவுக்கு நோவைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கு. நாளாக ஆக, தாங்குற சக்தி குறையக் குறைய வேதனை அதிகமாகும். அப்புறம் அணு அணுவா துடிச்சிச் சாக வேண்டிய பரிதாப நிலைக்கு நான் ஆளாயிடுவேன். அப்படியொரு நிலைக்கு ஆளாகாம இப்பவே நிம்மதியாச் செத்துடணும்னு ஆசைப்படுறேன். என் விருப்பத்தை இனியாவது நிறைவேத்தப் பாருங்க...........

...........அப்பா, அம்மா வேண்டாம். ஒரு தாய் மனசு எந்த வகையிலும் இதுக்கெல்லாம் சம்மதிக்காது. நீங்க மட்டுமே போங்க. நான் சொன்ன வக்கீலைப் பாருங்க. செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செஞ்சி முடிங்க. நான் சீக்கிரமா சாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்” என்றான் சந்திரன்.

அதிகம் பேசிவிட்ட களைப்பில் கண்மூடி மயக்கத்தில் ஆழ்ந்தான்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9 comments :

 1. மனதை கனக்க வைத்து விட்டீர்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. இன்னும் விரிக்கலாம்
  வாழ்த்துகள் செமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி Mathu

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. 'அழுதால் என்ன தொழுதால் என்ன நடக்கிற கதைதான் நடக்குதப்பா' என்பதை சந்திரனைப் போல, அனைவரும் உணர்ந்தால் நல்லது :)

  ReplyDelete
  Replies
  1. ஒரு கும்பல் உணரவிடாமல் தடுக்கிறது பகவான்ஜி. நன்றி.

   Delete
 5. Replies
  1. விதியோ சதியோ எல்லோரும் மதியைப் பயன்படுத்தி வாழும் காலம் வரவேண்டும். நன்றி தனபாலன்.

   Delete