May 26, 2017

உருகுது நெஞ்சம்! பெருகுது கண்ணீர்!!

இதை எழுதியவன் நான். பலமுறை படித்துக் கண் கலங்கியவனும் நானே[!?!?!]. ஏற்கனவே படித்தவர்களும் கலங்கியிருத்தல்கூடும்! நீங்கள்.....?

ரைவாசி திறந்திருந்த தட்டிக் கதவு தட்டப்பட்டது.

“வாங்க.” வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து அழைத்தாள் கனகா. கதவு தட்டியவர் திரும்பிப் போய்விடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு.

‘சரக்கு’ ஏத்திக்கொண்டு சைக்கிள் மிதித்து, ’சரக்கு’ லாரியில் அடிபட்டுச் செத்தான் மாணிக்கம். அவளுக்கு அவன் புருஷன்; அவளின் ‘பலான’ தொழிலுக்குப் புரோக்கரும் அவனே. அவன் பரலோகம் போனதால் தொழில் வெகுவாகப் பாதித்தது.

வீடுவீடாகப் போய்ப் பத்துப்பாத்திரம் தேய்த்தவளைப் ‘பரத்தை’ ஆக்கியவனே அவன்தான். குடித்துப் பழகிய கொஞ்ச நாளில் குடிப்பதே தொழில் என்றான பிறகு, பெண்டாட்டி சம்பாதனை குடும்பச் செலவுக்கும் ‘குடி’ச் செலவுக்கும் போதுமானதாக இல்லை. ‘குட்டி’ தேடும் ’குஷால்’ பேர்வழிகளை அடிக்கடி தன் குடிசைக்கு அழைத்து வந்தான்.

ஆரம்பத்தில், அவனைக் கண்டித்த அவள், ஒரு நாள் முழுக்க வேர்வை சிந்திச் சம்பாதிக்க முடியாததை ஒரு மணி நேரத்தில் சம்பாதித்துவிடும் கலை அது என்பது புரிந்தபோது இணங்கிப்போனாள்.

அப்புறம் அதுவே பழகிப் போனது.

நல்ல துணிமணி, மூன்று வேளையும் வயித்துக்கு உணவு  என்று வாழ்க்கை ஓடியது.

அவளுடைய போதாத காலமோ என்னவோ, மாணிக்கம் செத்துப்போனான்.

புதிய நபர்களின் வரவு  தடைபட்டது. தெருவில், பலான தொழில்காரிகளின் எண்ணிக்கை கூடியதால், வாடிக்கையாளர்களின் வருகையும் மட்டுப்பட்டது. கனகா கவலையில் மூழ்கினாள்.

சரிந்துகொண்டிருந்த மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்துவது எப்படி என்று அடிக்கடி யோசிக்கலானாள். அப்படி ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அவள் குடிசையின்  தட்டிக் கதவு தட்டப்பட்டது.

வெளியே தயங்கி நின்றவருக்கு, “உள்ளே வாங்க” என்று மீண்டும் அழைப்பு விடுத்தாள் கனகா.

அவளைத் தேடி வந்தவர் ஒரு நடுத்தர வயதுக்காரர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் போலவும் தெரிந்தார்.

சல்லடைப் பார்வையால் கனகாவின் வயதையும் உடல் வாகையும் வனப்பையும் ஆராய்ந்தார்.

முகத்தில் திருப்தி பரவி நிலை கொள்ள, அங்கிருந்த ஒரேயொரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து, “வெய்யில் வறுத்தெடுக்குது. குடிக்கத் தண்ணி கொடு” என்றார்.

தடுப்புச் சுவரைக் கடந்து உள்ளே போன கனகா, ‘ஆள் புதுசு. இவரை அனுப்பிச்சது யாராயிருக்கும்?’ என்று யோசித்தாள். ‘அவர் போகும்போது கேட்டுக்கலாம்’ என்று முடிவெடுத்தாள்.

அவருக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்து உபசரித்தாள்.

தரையில் பாய் விரித்தாள்; “என்னைப் பிடிச்சிருக்குதானே?” -பவ்வியமாய்க் கேட்டாள்; முந்தானை விலக்கிக் கவர்ச்சி காட்டினாள்; ‘இனி என்னைக் கையாளலாம்’ என்பது போல மேலாடை நெகிழ்த்து, மெல்லிய புன்னகையை அவர் மீது படர விட்டாள்.

மாதக் கணக்கில் பெண் வாசனையே நுகராதவர் போல, அவளைத் தாவி அணைத்தார் அவர்; செயலில் வேகம் காட்டினார். கனகா அவருக்கு ஈடுகொடுத்தாள். தான் கற்று வைத்திருந்த சாகசங்களால் அவரைத் தன்வயம் இழக்கச் செய்தாள்.

நிமிடங்கள் கரைந்தன.

தாபம் தணிந்ததும், ‘இருந்த’ நேரத்தைக் கணக்குப் பார்க்காமல், சில நூறுகளைக் கனகாவிடம் நீட்டினார் அவர். அவளும் திருப்தியுடன் பெற்றுக் கொண்டாள்.

அவர் வெளியேற முனைந்த போது, கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டாள் கனகா: “எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடிச்சீங்க?”

”தெரு முனையில் நின்னுட்டு ’நோட்டம்’ விட்டுட்டிருந்தேன். ஒரு பொடியன், ‘சார் பொம்பளை வேணுமா?’ன்னு கேட்டான்;  இந்த இடத்தையும் காட்டினான்” என்று சொன்னதோடு, சிறிது தொலைவில், ஒரு வேம்பின் நிழலில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனைச் சுட்டிக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

அந்தச் சிறுவன்..........

பத்து வயதுகூட நிரம்பாத, கனகாவின் செல்வ மகன்!

அதிர்ச்சியில் கனகாவின் சப்த நாடிகளும் அடங்கின. அவள் இதயம் கட்டுப்பாடு இழந்து தாறுமாறாய்த் துடிக்கலாயிற்று. நெஞ்சு கனத்தது; மூச்சுத் திணறியது.

“ஐயோ.....அவனா?..... என் புள்ளையா?....என் உதிரமும் சதையுமான நான் பெத்த புள்ளையா எனக்கு ஆள் பிடிச்சி அனுப்பினான்? ஈனத் தொழில் செஞ்சி, நான் சம்பாதிக்கிற பாவத்தில் இனி அவனுக்கும் பங்குண்டா?.....கடவுளே, என்னை எதுக்கய்யா ஒரு மனுஷியா பிறக்க வெச்சே?.....என்னை எதுக்.....” -நாடித் துடிப்பு அடங்கும்வரை, இப்படி ஈனஸ்வரத்தில் ஏதேதோ முனகிக்கொண்டிருந்தாள் கனகா.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000