கடவுளின் மரணம் குறித்துக் கவலைப்படுவதற்கு முன்பு 'அனுமானம்' என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம். இதை 'யூகம்', அல்லது, 'உய்த்துணர்தல்' என்றும் சொல்வார்கள்.
'Inference is the act or process of deriving logical conclusions from premises known or assumed to be true' என்கிறது Wikipedia, the free encyclopedia. தமிழில்..........
'அனுமானம்' என்பது, 'உண்மை' என அறிந்தவற்றிலிருந்து அறியாதன பற்றி 'விவாதித்து' ஒரு முடிவுக்கு வருதல்'.
நெருப்பிலிருந்து புகை வெளியாவதைப் பார்க்கிறோம். இது ஒரு காட்சி அனுபவம். புகையை மட்டுமே காண நேர்கிற போதுகூட அதற்கு ஆதாரமாக நெருப்பு இருப்பதை அறிகிறோம் அல்லவா? இதற்கு 'அனுமானம்' என்று பெயர். பொருளின் 'தன்மை' பற்றியது இந்த அனுமானம்.
பூவின் வாசம் நம் மூக்கைத் துளைக்கிற போதெல்லாம் அதை வெளிப்படுத்தும் மலர்கள் அருகில் இருத்தல் வேண்டும் என நினைக்கிறோமே, இதுவும் அனுமானம்தான். இது, பொருளின் 'குணம்' குறித்தது.
பொருள்களின் 'தோற்றம்' குறித்தும் அனுமானங்கள் செய்யப்படுவதுண்டு.
ஒரு குயவர் மண், நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தண்டச்சக்கரம், தட்டுப் பலகை ஆகிய துணைக் கருவிகளைக் கொண்டு பானை வனைவதைப் பார்க்கிறோம். இது, நம் கண்களால் காணுகிற ஓர் உண்மை நிகழ்வு ஆகும்.
இங்கே பானை என்பது செயற்கையான ஒரு பொருள். அதாவது, செய்யப்பட்டது.
மண்ணால் செய்யப்பட சிலை; உலோகத்தால் உருவாக்கப்பட்ட பாத்திரம்; பேருந்து; கடிகாரம்; செல்போன்......இப்படி எத்தனையோ செயற்கைப் பொருள்கள் இம்மண்ணில் உள்ளன. இம்மாதிரி செயற்கைப் பொருள்கள் அனைத்தும் மனிதரால் செய்யப்பட்டவை என்பது நாம் அறிந்த உண்மை. அல்லது, பிறர் மூலம் அறிந்த நம்பத்தக்க உண்மை.
இந்த உண்மை அனுபவம், நம்மால் அறியப்படாத ஒரு பொருளின் தோற்றம் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுவது உண்டு.
வானில் 'பறக்கும் தட்டு' அல்லது, அது போன்ற ஒன்று உலவுவதைப் பார்க்க நேரிட்டால், அது வழக்கமாக நாம் காணும் இயற்கைப் பொருள்களில் ஒன்றல்ல; முற்றிலும் செயற்கைப் பொருள்தான் என்று நம்புகிற போது அதைச் செய்தது யாராக இருக்கும் என்று சிந்திக்கிறோம்.
அது மனிதர்களின் செயலல்ல என்பதை அறிகிறோம். மனித அறிவினும் மேம்பட்ட அல்லது அதற்கு இணையான அறிவு படைத்த வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கமாக இருக்கலாம் என எண்ணுகிறோம். இதுவும் 'அனுமானம்' எனப்படுகிறது. பொருளின் தோற்றம் குறித்த அனுமானம் இது.
இந்த அனுமானத்தை, ஆன்மிகவாதிகள் 'கடவுள் இருக்கிறார்' என்று சாதிப்பதற்குப் பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள்.
செயற்கை பொருளான பானையைப் 'படைப்பு' என்றார்கள். ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவன் இருந்தே தீரவேண்டும் என்றார்கள்.
இக்கருத்தைத் துணையாகக் கொண்டு, 'இந்தப் பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்றார்கள்; என்கிறார்கள்.
மேம்போக்காகப் பார்த்தால் அவர்கள் வாதம் சரி என்பது போல் தோன்றும். கொஞ்சம் யோசித்தால்..........
ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவர் யார் என்று அனுமானிக்க முயற்சி செய்யலாம். அதற்கு முன்னதாக, அது 'படைக்கப்பட்ட' பொருள்தானா என்று கண்டறிவது முக்கியம்.
பிரபஞ்சம் படைக்கப்பட்ட ஒன்றா?
இக்கேள்விக்கு விடை கண்ட பிறகல்லவா படைத்தவர் கடவுளா வேறு எவருமா என்று யோசிக்க வேண்டும்?
இது பற்றிச் சிந்திக்க ஆன்மிகவாதிகள் ஒருபோதும் முன்வந்ததில்லை. முதலில் கடவுள் என்று ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, 'பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்று சொல்லிச் சொல்லிச் சொல்லிப் பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.
நம்ப மறுப்பவர்களைத் தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கிறார்கள்.
'கடவுள்' படைக்கவில்லையென்றால் வேறு யார் படைத்தது? கல்லும் மண்ணும் மரமும் மனிதர்களும் பிறவும் தாமாகவே தோன்றினவா?' என்று கேள்வி கேட்டு, கேள்வி கேட்பவரின் வாயை அடைக்க முயலுகிறார்கள்.
'அணுக்களின் சேர்க்கையால் பொருள்கள் தோன்றுகின்றன. அவற்றின் இணைப்பிலேதான் உணர்ச்சிகள் பிறக்கின்றன; உயிர்கள் தமக்குரிய சக்தியை /அறிவைப் பெறுகின்றன. மனிதன் ஆறறிவு பெற்றதும் இவற்றின் சேர்க்கையால்தான். இவை விஞ்ஞானம் கண்டறிந்த உண்மைகள். இவற்றிற்கும் மேலான உண்மைகளை அது எதிர்காலத்தில் கண்டறியும் என்பது உறுதி.
அணுக்களைத தோற்றுவித்ததே கடவுள்தான் என்று அவர்கள் சமாளித்தால், 'கடவுளைத் தோற்றுவித்தது யார்?' என்று வழக்கமாக முன்னிறுத்தப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் அவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். காலங்காலமாய் அந்தவொரு கேள்வியைக் கண்டுகொள்ளாமலே கடவுளின் இருப்பை வலியுறுத்த, 'பானையைக் குயவன் படைத்தான். பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார்' என்று மக்களை மூளைச் சலவை செய்துகொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
அவர்கள் பயன்படுத்திய அதே அனுமான உத்தியைப் பயன்படுத்திக் கீழ்க்காணுமாறு ஒரு முடிவை நம்மால் அறிவிக்க முடியும்.
பானை என்பது ஒரு படைப்பு. அது அழியக்கூடியது. படைப்பாளியான குயவனும் அழிந்து போவான். அது போல, பிரபஞ்சம் அழியக்கூடியது. அதைப் படைத்த 'படைப்பாளி'யான கடவுளும் ஒருநாள் அழிவது உறுதி.
******************************************************************************************************************** கீழ்க்காணும் மேற்கோள்கள் இப்பதிவுக்கு வலிமை சேர்ப்பவை ஆகும்:
'.....பானை இருந்தால் குயவன் என்பது போல், இந்த உலகம் இருப்பதால் அதனைப் படைத்த இறைவன் உண்டு என்று வாதிடும் ஆன்மீகத் தத்துவத்தை ஏற்க இயலாது. குயவனைக் கண்டறிய இயலும். ஆனால், இறைவனை எங்கே கண்டறிவது?' - சார்வாகர்கள்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
2014 இல் எழுதப்பட்டது.