அண்மையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த 'ஆவத்துவாடி' கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இது, இன்றைய[04.03.2018] நாளிதழ்ச் செய்தி.
ஆண்டுதோறும், இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் இந்த ஊர் மக்களிடம் ஒரு விசித்திரப் பழக்கமும் உண்டு.
அலங்கரிக்கப்பட்ட கரகத்தைப் பூசாரி ஊர்வலமாக எடுத்துவரும்போது, பூசாரியின் பாதங்களில் மஞ்சள் நீர் ஊற்றி, குங்குமமும் பூவும் வைத்துப் பெண்கள் வணங்குவார்கள். பின்னர், கோயிலின் முன்பு, பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள்[ஆண்களும் பெண்களும்] நீண்ட வரிசையில் படுத்துக்கொள்வார்கள்.
கரகம் ஏந்திய பூசாரி அவர்களின் மீது நடந்து செல்வார். இது அக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
''திருவிழாவில், பக்தர்கள்மீது கரகம் சுமந்துவரும் பூசாரி நடந்தால் திருமணம் கைகூடிவரும்; குழந்தைப்பேறு வாய்க்கும். இது ஐதீகம்'' என்கிறார்களாம் ஆவத்துவாடி கிராம மக்கள்.
''பூசாரியின் கால்களில் மிதிபடுவதால், மிதிபடும் அத்தனை பேரின் குறைகளும் நிவர்த்தி ஆகிறதா? இல்லையெனில், எத்தனை சதவிகிதம் பேர் பயன் அடைகிறார்கள்? பயன் பெறுவோர் நீங்களாக ஏனையோரை மாரியம்மன் புறக்கணித்தது ஏன்?'' என்றிப்படியான கேள்விகளை மக்கள் கேட்க மாட்டார்கள். கேட்கவும் கூடாது என்று நினைப்பவர்கள் இவர்கள்.
இவர்கள் திருந்துவது எப்போது?
எப்போது என்பது எவருக்கும் தெரியாது. ஆயினும்.....
சபல புத்தியுள்ள போலிச் சாமியார்களைச் சரணடைந்து ஏமாறுவதை நோக்க, கோயில் திருவிழாவில், திரளான மக்களின் முன்னிலையில், ஒரு நாள் மட்டும், உள்நோக்கம் ஏதுமற்ற ஒரு கிராமத்துப் பூசாரியின் கால்களில் மிதிபடுவதை இவர்கள் திருந்துவதற்கான காலம் கனியும்வரை பொறுத்துக்கொள்ளலாம்.