Thursday, May 17, 2018

விரிவடையும் பிரபஞ்சங்'கள்'...சில கேள்விகளும் சந்தேகங்களும்!

எச்சரிக்கை: இது அறிவியல் கட்டுரையல்ல; சில அறிவியல்  தகவல்கள் குறித்த சந்தேகங்களின்/கேள்விகளின் தொகுப்பு மட்டுமே. கத்துக்குட்டித்தனமாக நான் உளறியிருந்தால் கண்டுகொள்ளாதீர்!

அண்டவெளியில் 'பிரபஞ்சம்'[All existing matter and space considered as a whole; the cosmos...https://en.oxforddictionaries.com/definition/universeஇடம்பெற்றிருப்பதும், பெருவெடிப்பின் மூலம் உருவான இது விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதாக  அறிவியல் அறிஞர்கள் சொல்லிக்கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே.
விரிவடைந்துகொண்டிருப்பதாக[The universe is believed to be at least 10 billion light years in diameter and contains a vast number of galaxies; it has been expanding since its creation in the Big Bang about 13 billion years ago]ச் சொல்லப்படும் பிரபஞ்சம் ஒன்றல்ல; இது போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் உள்ளன என்னும் கருதுகோளை[multiverse theory] முன்வைத்திருக்கிறாராம்[இறப்பதற்குச் சிறிது காலம் முன்பு?] மறைந்த அறிவியலாளர் 'ஸ்டீபன் ஹாக்கிங்'. உரிய விளக்கங்களுடன் அவர் வெளியிட்ட ஆய்வறிக்கை Journal of High Energy Physics என்னும் அறிவியல் இதழில் வெளியாகியுள்ளதாம்['தினத்தந்தி' நாளிதழ்[14.05.2018]க் கட்டுரை]. 

அதில்.....

'விண்வெளியில் பெருவெடிப்பு நிகழ்ந்தது[இதற்கு ஆதாரமான  அணு/அணுக்கள் பற்றிய ஆய்வெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்]. அதைத் தொடர்ந்து பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கியது. அவ்வாறு விரிவடைவது [அண்ட வெளியில்]சில இடங்களில் தடைபட்டுப்போனது. அத்தகைய தடைபட்ட இடங்களிலும் பெருவெடிப்புகள் நிகழ, புதிய புதிய பிரபஞ்சங்கள் தோன்றலாயின. இதன் விளைவாகப் பிரபஞ்சங்களின் எண்ணிக்கை பலவாக ஆயிற்று' என்னும் விளக்கமும் இடம்பெற்றுள்ளதாம்[இக்குறிப்பு, 14.05.2018 தினத்தந்தி நாளிதழ்க் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது].

கூடுதல் தகவல்களை அறியும்  ஆர்வத்தில் நாம் நான் எழுப்பும் சில கேள்விகளும் சந்தேகங்களும்:

*பெருவெடிப்பிலிருந்து உருவானது பிரபஞ்சம் எனின், பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன்பு அண்டவெளியில் ஆற்றல் மிக்க கடவுள் அணுக்கள்[கடவுளால் படைக்கப்பட்ட அணுக்களா, அல்லது கடவுளே அணுக்களாக இருக்கிறாரா?] மட்டுமே இருந்தனவா? வேறெதுவும் அல்லது எவையும் இல்லையா? இது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்ந்திருக்கிறார்களா? ஆய்ந்துகொண்டிருக்கிறார்களா?

*பெருவெடிப்பிலிருந்து உருவான பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது...சரி, எப்போதிருந்து இது நிகழ்கிறது? எவ்வளவு காலத்திற்கு விரிவடைந்துகொண்டே இருக்கும்? முற்றுப்பெறுவது எப்போது? எந்தவித அளவுகோலுக்கும் கட்டுப்படாத அண்டவெளியில் முற்றுப்பெறுதல் என்பது சாத்தியப்படுமா? 

*ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருப்பதாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். முதலில் உருவான பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருந்தபோது, அதன் விரிவடைதல் தடைபட்டதால், காலியாக உள்ள இடங்களில் எல்லாம் புதிய புதிய வெடிப்புகள் நிகழ்ந்ததன் விளைவாக மேலும் பல பிரபஞ்சங்கள் தோன்றியதாகச் சொல்கிறார் அவர்.

விரிவடைதல் என்பது, கோள வடிவில் [உருண்டையான பலூன் விரிவடைவது போல்?] நிகழ்வதுதானே? சில இடங்களில் மட்டும் தடைப்படுவது எவ்வாறு? அதற்கான காரணங்கள் எவை? விளக்கியிருக்கிறாரா ஸ்டீபன் ஹாக்கிங்?

*பிரபஞ்சங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை என்றால், அவை அத்தனையும் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன என்றால்.....

ஏதோவொரு காலக்கட்டத்தில் அவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே பிரபஞ்சமாக மாறிவிடுவது சாத்தியம்தானே? பல[?] சூரி மண்டலங்களை உள்ளடக்கியுள்ள, நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே இவ்வகையில் உருவானதாக இருக்கக்கூடுமோ?

*பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால்.....

பிரபஞ்சத்தின் சுற்றுவட்ட எல்லைக்கப்பால் அது மேலும் விரிவடைவதற்கான வெற்றிடம் தேவை. அந்த வெற்றிடம் அதி நவீன விஞ்ஞானக் கருவிகளின் மூலம் அளந்து அறிதற்குரியதா?

தங்களால் இயலுமெனின், அன்புகொண்டு இங்குள்ள கருத்துப்பெட்டியிலேயே விளக்கத்தைப் பதிவு செய்யுங்கள். விரும்பாவிடின் தனிப்பதிவு வெளியிடலாம். அது என் போன்ற அறிவியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படுவதாக அமையக்கூடும்.

நன்றி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------


2 comments :

 1. கொஞ்சம் கணக்கு வேலை தெரிய வேண்டும்போல் இருக்கிறது நான் சும்மாவே கணக்குல வீக்லி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நானும் வீக்தான். கொஞ்சம் அறிவியல் தெரியும்னு காட்டிக்கொள்வதில் ஒருவித.....என்ன சொல்றதுன்னு தெரியல... ஒருவகை மகிழ்ச்சின்னு வைத்துக்கொள்ளுங்களேன்.

   நன்றி நண்பரே.

   [பதிவை இணைத்தவுடன் வேறு வேலையில் கவனம் செலுத்தியதால் நன்றி சொல்லத் தாமதம் ஆகிவிட்டது].

   Delete