Thursday, May 10, 2018

நேற்று கும்பாபிஷேகம்! இன்று இடி விழுந்து சிதறிய கோபுரம்!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - சேலம் செல்லும் சாலையில் 'மல்லசமுத்திரம்' என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து சிறிது தொலைவில்  உள்ளது 'கருமானூர்' கிராமம்.

பல ஆண்டுகள் ஊர் மக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கூத்தாண்டேஸ்வரருக்குக் கோபுரத்துடனான கோயில் எழுப்பப்பட்டது.

இரண்டு நாட்கள் முன்பு, வேதமந்திரங்கள் எல்லாம் ஓதப்பட்டுக் குடமுழுக்கு[மகா கும்பாபிஷேகம்] நடத்தி, கூத்தாண்டேஸ்வரர் சிலைக்கு உயிர் கொடுத்து, கோயிலைப் புனிதப்படுத்தினார்கள் அர்ச்சகர்கள். 

இந்நிகழ்வுக்கு மறு நாள் கருமானூரில் இடிமின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. கனமானதொரு இடி இறங்கியதால் கோபுரத்திலிருந்த சில குட்டிச் சாமிகளின் சிலைகள் சேதம் அடைந்தன.

பயங்கர இடிமின்னலுடனான மழையின்போது இடி விழுவது இயற்கை. அது எங்கு விழுகிறதோ அங்குள்ள பொருள் சிதைவுறும் என்பதும் இயற்கை நிகழ்வே. கருமானூர் கோயில் கோபுரத்தின் மீது இடி விழுந்ததால் அந்த ஊர் மக்களுக்குத் தீங்கு விளைவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதை நம்புவது ஆறறிவின் பயனாகும்.

ஆறறிவு வாய்த்திருந்தும், கோயிலின்மீது இடி விழுந்ததால் பெரும் தீங்கு விளையும் என்று நம்புகிற பலவீனம் கருமானூர் மக்களைப் போலவே நம் எல்லோருக்கும் உள்ளது. காரணம், ஏற்கனவே பல மூடநம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்டிருப்பதுதான்.

இப்போதைக்குத் தகர்க்கவே இயலாத சில மூடநம்பிக்கைகள் நம்மவர்களிடம் உள்ளன. அவற்றில், சாமி கும்பிடுவதும் ஒன்று.

கடவுளைக் கண்முன் நிறுத்துவதாக நம்பிச் சிலை வைக்கிறோம். கோயில் கட்டிக் கோபுரமும் எழுப்புகிறோம். அப்புறம் என்ன, மூத்தோர்களை முன் நிறுத்தித்  தமிழில் பக்திப் பாடல்கள் பாடி வழிபாட்டைத் தொடங்கலாம்.  ஆண்டுக்கொரு முறையோ இரு முறையோ ஒருங்கிணைந்து பண்டிகை கொண்டாடலாம். அதற்கு மாறாக.....

கடவுளுக்குப் புரியுமோ என்னவோ, நமக்குப் புரியாத, அவர்களுக்கு மட்டுமே புரிகிற மொழியில் அவர்களால் கற்பிக்கப்பட்ட மந்திரங்களை ஓதச் சொல்லி 'மகா...மகா...மகா...கும்பாபிஷேகம்' நடத்தச் செய்தோமே அப்போதே நாம் மூடர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்.

கிடைத்ததைத் தின்று, கழித்து, மூத்திரம் பெய்து நம்மைப் போல் வாழ்கிற அவர்கள் சொல்லும் மந்திரங்களால் சிலையானது கடவுளாக மாறும் என்று நம்பினோமே, அப்போதே அவர்கள் நம்மைப் படு மூடர்கள் ஆக்கிவிட்டார்கள்.
நாம் முறையிட்டால் கடவுள் கேட்க மாட்டார் என்று நினைத்து, அவர்களைக் கடவுளின் பிரதிநிதிகள் ஆக்கினோமே அப்போதே நாம் படு படு மூடர்கள் ஆகிவிட்டோம்.

இத்தனை கனத்த மூடநம்பிக்கைகளை ஏற்கனவே நாம் சுமந்துகொண்டிருப்பதால்தான் குறைந்தபட்சம் சிந்திக்கும் ஆற்றலைக்கூட நம்மால் பெற்றிட இயலவில்லை.

மழைக்காலங்களில் எங்கெல்லாமோ தற்செயலாக விழுகிற இடி, ஒரு கோயில் கோபுரத்தின் மீது விழுந்ததை எண்ணி அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிற[இன்று ஊடகங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இம்மாதிரி நிகழ்வுகள் மிக எளிதாக மக்களைச் சென்றடைகின்றன.  இதற்கு முன்பும் அவ்வப்போது கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்திருக்க வாய்ப்புள்ளது] நாம்,  சிந்திக்கக் கற்றல் வேண்டும்; இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஆனால், இந்நாள்வரை அது சாத்தியப்படவில்லை.

கருமானூரில் நிகழ்ந்தது போல, தமிழகமெங்கும் ஆங்காங்கே கோயில் கோபுரங்களின் மீது இடி விழுந்தால்தான், வேதமந்திரம் ஓதி, குடமுழுக்குச் செய்வதால் பயன் ஏதுமில்லை  என்பதை நம்மால் உணர முடியுமோ என்னவோ!?

காலம் பதில் சொல்லும்.

3 comments :

 1. இயற்கையின் கண்ணுக்கு கோபுரமும், செல்போன் டவரும் ஒன்றாகவே தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவைத் தமிழ்மணம் இணைத்துக்கொள்ளவில்லை. தலைப்பை மாற்றி இணைத்தும் பயனில்லை.

   என்னுடைய சில பதிவுகளைத் தமிழ்மணம் ஏதோ ஒரு வகையில் மட்டுறுத்தல் செய்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.நான் பொருட்படுத்தவில்லை.

   நன்றி நண்பரே.

   Delete