கடவுள் நம்பிக்கையை ஒழித்தால்....... அதன் பின்னணியில் உருவான கணக்கிலடங்காத மூடநம்பிக்கைகளும் உருத்தெறியாமல் அழிந்தொழியும்!!!

Thursday, May 10, 2018

இது என் சொந்தக் கதை!!!

நம்புகிறவர்களுக்கு இது ஓர் அனுபவப் பகிர்வு. நம்பாதவர்களுக்கு..... வெறும் கற்பனைக் கதை! இதை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவும்கூடும்!
து நடந்து மிகப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, சென்னைக் கல்லூரி ஒன்றின் மாணவன் நான்.

விடுமுறையைச் சொந்தக் கிராமத்தில் கழித்துவிட்டு, அன்று சென்னை திரும்ப இருந்தேன்.

“பரமு.....” - அப்பா அழைத்தார்.

“சொல்லுங்கப்பா.”

“மெட்றாஸ் போனதும் கடுதாசு போடு. மறக்காம திருப்பதி போயி ஏழுமலையானைத் தரிசனம் பண்ணிட்டு இதை உண்டியலில் போட்டுடு” என்று என்னிடம் இரண்டாயிரம் ரூபாயையும் நீட்டினார்.

அப்பா என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மூன்று பொட்டைக் கழுதைகளுக்கு [அப்பா அடிக்கடி கையாண்ட வசவு வார்த்தைகள் இவை] அப்புறம், அறிந்த, அறியாத அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்துப் பெற்ற ‘தவப் புதல்வன்’ நான் என்பது காரணம்.

அவர் மனம் நோகும்படியாக நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லைதான். இருப்பினும், பள்ளிப் பருவத்திலேயே ஒரு தமிழாசிரியரால் பக்குவப்படுத்தப்பட்ட என் பகுத்தறிவு மூளை இப்படிக் கேட்டது..........

“எதுக்கு உண்டியலில் போடச் சொல்றீங்க? சாமியா செலவு பண்ணுது?”

அப்பாவின் முகம் சுண்டிச் சிவந்துபோனது; சொன்னார்: “லாபம் கிடைச்சா போடுறேன்னு சாமிகிட்ட வேண்டிகிட்டேன். சாமி கருணை காட்டிச்சி. சொன்ன வாக்குத் தவறாம நடந்துக்க நினைக்கிறேன். உனக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு. நானே போய்ப் போட்டுட்டு வர்றேன்” என்று கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கை நீட்டினார்.

நான் தொடர்ந்து வாதம் புரிவதற்கான ஆயத்த நிலையில் இருந்தாலும் பணத்தைத் திருப்பித் தராமல், சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

பரம்பரை விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பா விவசாயத்தை ஆள் வைத்துக் கவனித்துக்கொண்டே பக்கத்து டவுனில் தானிய மண்டி வைத்து வியாபாரமும் செய்து வந்தார்.

அவருக்குத் தெய்வ பக்தி அதிகம். பக்திக்கு முன்னால் ஐந்தாறு ‘மிக’ போடுவது பொருத்தமாக இருக்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ‘லாப நட்ட’க் கணக்குப் பார்ப்பார். கிடைக்கும் லாபத்தில் 5% ஐ ஏழுமலையான் கோயில் உண்டியலில் போட்டுவிடுவார். நான் சென்னையில் இருந்ததால், முதல் தடவையாக அந்தக் கடமையை என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

நான் சென்னை போய்ச் சேர்ந்ததும் தந்தை சொல்படி கடிதம் எழுதினேன்; திருப்பதியும் போனேன்; கோயில் குளமெல்லாம் ‘சுற்றிப்பார்த்துவிட்டு’, லட்டு[லட்டும் எள்ளுருண்டையும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை] வாங்கி ருசித்துச் சாப்பிட்டேன். உண்டியலில் பணம் மட்டும் போடவில்லை! என் பகுத்தறிவு போட விடவில்லை.

பணத்தை என் வங்கிக் கணக்கில் பத்திரப்படுத்தினேன்!

அதற்கப்புறமும் இந்த என் கைங்கரியம் தொடர்ந்தது; தொகையும் பெருகிக்கொண்டே போனது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். வியாபாரத்தில் அப்பாவுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இந்தச் சேமிப்பு உதவும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தத் தப்பான காரியத்தில் ஈடுபட்டேன்.

கடவுள் நம்பிக்கை இல்லயென்றாலும், மனதில் அவர் இருந்த இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் பெற்ற தகப்பனை அமரவைத்து வழிபட்டவன் நான். அவருக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை.

எதிர்பாராத வகையில், நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி மனம் ஒடிந்து போனார் என் தந்தை.

பூர்வீக நிலத்தை விற்றேனும் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடியான நிலையில், பணம் சேமித்த வகையைச் சொல்லி என்னிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னேன்.

நான் செய்தது தப்பா சரியா என்பது பற்றி வாயே திறக்காமல், “சந்தோஷம்ப்பா” என்று பணத்தைப் பெற்றுக்கொண்டவர் சற்றே தாமதித்து, “நான் அப்பப்பக் குடுத்த பணத்தை நீ ஒழுங்கா உண்டியலில் சேர்த்திருந்தா எழுமலையான் நஷ்டம் வராம காப்பாத்தியிருப்பான்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்.

அப்புறம் ஒருநாள், அவரே திருப்பதி சென்று நான் கொடுத்த ஒட்டுமொத்தத் தொகையையும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பினார். 

அதற்கப்புறமும், ஒரு மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்யத் தவறியதில்லை என்றாலும், மனம் திறந்து என்னுடன் பேசியதே இல்லை.

அவருடைய அறுபதாவது வயதில் இது நடந்தது. அறுபத்தைந்தில் காலமானார்.

அவர் சொன்னது போல, உண்டியலில் பணம் போட்டிருந்தால் ஏழுமலையான்  காப்பாற்றியிருப்பார் என்பதில் இன்றளவும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பாசமிகு தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நான் நடந்துகொள்ள இல்லையே என்னும் வருத்தம் என்னுள் உறைந்து கிடக்கிறது.
*************************************************************
12 comments :

 1. மனம் சற்றே சஞ்சலமாகியது நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. இன்றளவும் என் தந்தையை நினைக்கும்போதெல்லாம் மனம் வருந்தவே செய்கிறது.

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. Replies
  1. பாராட்டுக்கு நன்றி பாரதி.

   Delete
 3. ஓ கொமெண்ட் பொக்ஸ் திறந்திருக்கே.. நான் கவனிக்கவில்லை. முடிந்ததை நினைத்து வருந்தக்கூடாது..

  என் கருத்து.. நமக்கு நம்பிக்கை இல்லை எனில் நாம் நம்பாமல் இருக்கலாம் அதில் தப்பில்லை.. ஆனால் அடுத்தவர்களின் நம்பிக்கையைக் கெடுக்கக் கூடாது.

  கடவுளை நீங்கள் நம்பவில்லை... அதனாலோ என்னமோ, அப்பாவுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் பண்ணி விட்டாரே கடவுள்.. பார்த்தீங்களோ கடவுளின் திருவிளையாடலை:))

  ReplyDelete
  Replies
  1. கடவுள் விளையாடுகிறாரோ இல்லையோ, என்னதான் கட்டுப்படுத்தினாலும், பதுங்கியிருந்து தருணம் பார்த்துத் தாக்குதல் நடத்தும் உணர்ச்சிகளுடனும், சக மனிதர்களின் ஆசாபாசங்களுடனும் காலமெல்லாம் நாம் விளையாடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

   நன்றி அதிரா.

   Delete
 4. என் தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதனால் இதுபோல் பிரச்சினை எனக்கு வந்ததில்லை. அவருடைய அறிவுரைதான் என் கடவுள் நம்பிக்கை இல்லாமைக்கு அடித்தளமிடத்துனு கூட சொல்லலாம். அதற்காக அவரிடம் குறைபாடே இல்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. இந்த விசயத்தில் கருத்து வேறுபாடு வந்ததில்லை

  பொதுவாக, விவசாயிகள், வியாபாரிகள், விளையாட்டு வீரர்களுக்கு "கடவுள் நம்பிக்கை" தேவைப் படுகிறதுனு நினைக்கிறேன். எனக்குத் தெரிய எங்க தெருவில் கள்ளக் கடத்தல் பண்ணுகிறவர்கள் இருந்தாங்க (இன்னைக்கு எங்க ஊரில் மிகப் பெரிய பணக்காரர்கள் இவர்களே!!), சரக்கு அடிபடவில்லை எனறால், சரியாக சாமிக்கு கொடுக்க வேண்டியதை உண்டியலில் போட்டுவிடுவார்கள். கடவுளும் அவர்கள் கடத்தலுக்கு உதவுவார்! :) கடவுளின் கிருபையால் இன்று மிகப்பெரிய பண்க்காரராக ஊரை வளைத்துப்போட்டமீன்றும் கடவுள் கிருபையால் கந்துவட்டி கொடுத்து அநியாயமாக சம்பாரிக்கிறார்கள்.

  எனக்கென்ன தோனுதுனா, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு "இல்லாத கடவுள்" உதவத்தான் செய்கிறார். இது ஒரு மனவியாதிங்க. அதற்காக ட்ரீட்மெண்ட் இதுபோல் காணிக்கை செலுத்துவது.

  நம் நம்பிக்கை நமக்கு! தந்தைக்கு அவர் நம்பிக்கை. நான் உங்களை நிலையிலிருந்து இருந்தால், நிச்சயம் உண்டியலில் பணத்தை போட்டு இருப்பேன். நான் யாரு அவர் வாங்கி வரச் சொன்ன மருந்தை சரி தவறென்று சொல்ல? இன்றும் என் வாழ்க்கையில் என் கொள்கை, என் நம்பிக்கை எனக்கு மட்டும்தான் என்றுதான் வாழ்கிறேன். மற்றவரிடம் அதை வலியுறுத்துவதை தவிர்த்து விடுவேன். என்னிடம் அவர்கள் நம்பிக்கையை புகுத்த முடியாத அளவுக்கு பார்த்துக் கொள்வேன்.

  ReplyDelete
  Replies
  1. //பொதுவாக, விவசாயிகள், வியாபாரிகள், விளையாட்டு வீரர்களுக்கு "கடவுள் நம்பிக்கை" தேவைப் படுகிறதுனு நினைக்கிறேன்//

   உண்மைதான். இது இவர்களின் வாழ்தலுக்கான நம்பிக்கை; காலங்காலமாய் வளர்த்தெடுக்கப்பட்டது. சிலரின் வற்புறுத்தலுக்காக இதைப் புறக்கணித்து வாழ்வது எளிதல்லதான்.

   //எனக்கென்ன தோனுதுனா, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு"இல்லாத கடவுள்" உதவத்தான் செய்கிறார். இது ஒரு மனவியாதிங்க. அதற்காக ட்ரீட்மெண்ட் இதுபோல் காணிக்கை செலுத்துவது//

   உண்மை...உண்மை.

   //என்னிடம் அவர்கள் நம்பிக்கையை புகுத்த முடியாத அளவுக்கு பார்த்துக் கொள்வேன்//

   மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து வாழணும்னா இந்த முன்னெச்சரிக்கை அவசியம் தேவைதான்.

   வருகை தந்ததோடு, நம்பிக்கை குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி வருண்.

   Delete
 5. Replies
  1. மிக்க நன்றி ஜெயக்குமார்.

   Delete
 6. I would highly appreciate if you guide me through this.
  Thanks for the article. Really nice one…
  For Tamil News...
  https://www.maalaimalar.com/
  https://www.dailythanthi.com/
  https://www.dtnext.in/

  ReplyDelete