செவ்வாய், 22 மே, 2018

பெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா?

//எனக்கு மோட்சத்திலோ, பாவமன்னிப்பிலோ, கடவுள் ஆட்சியிலோ சிறிதும் நம்பிக்கை கிடையாது. ஆத்மா என்றோ ஜீவன் என்றோ ஒன்று இருப்பதாக நம்புபவன் அல்ல நான். 

எனக்கு மதங்கள் மீதும் நம்பிக்கை கிடையாது; தியானத்திலும் ஈடுபாடு இல்லை.

சாதி, மதம், தெய்வம், தியானம் என்கிற நான்கின் மீதும் உள்ள மக்களின் நம்பிக்கை அழிந்தாக வேண்டும். இவை அழிந்தாலொழிய மனித சமுதாயத்திற்கு அமைதி, மகிழ்ச்சி போன்றவை கிட்டவே கிட்டா.

'மதம் மக்களுக்கு அபினி' என்றார் ஒரு பெரியார். ஆனால், நான் அதைக் கொடிய விஷம் என்பேன்.

மதத்தைப் பின்பற்றுபவனுக்குச் சுயமரியாதையோ சுய சிந்தனையோ இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்வேன்.

மனிதனின் ஒற்றுமைக்கு உலை வைப்பது மதம்; அவனுடைய சிந்திக்கும் அறிவைச் சிதைப்பதும் அதுதான். ஆகையால்.....

நான் எந்தவொரு மதத்தையும் ஆதரிப்பவன் அல்ல; எல்லா மதங்களுக்கும் நான் விரோதிதான்//.

[ஆதாரம்: ஓவியர் தமிழேந்தியின், 'பெரியார் தூரிகைக் கவிதைகள்', வங்கனூர், திருவள்ளுவர் மாவட்டம். நன்றி தமிழேந்தி].
=================================================================================
*பதிவு மிகவும் சுருக்கமாக முடிந்துவிட்டது. எனவே, இணைப்பாக ஒரு [பழைய] மன்மதக் கதை!


ன்னைத் கட்டியணைக்க வந்த  வினோதனின் கைகளைத் தட்டிவிட்டாள் அமுதா.

கட்டிலிலிருந்து இறங்கிப் பத்தடி தள்ளி, கட்டாந்தரையில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

“ஏண்டா இத்தனை கோபம்?” -தயங்கித் தயங்கி அவளை நெருங்கி, பட்டும் படாமலும் அவளின் வழவழத்த இடையில் விரல் பதித்துக் கோட்டோவியம் தீட்டினான் வினோதன்.

“அடச்சீ...” என்று சீறிய அவள், மரவட்டை போல் தன் பொன் மேனியைச் சுருக்கிக் கொண்டு, மேலும் ஓரடி தள்ளிப் படுத்தாள்.
“நான் தப்பேதும் பண்ணலையே. ஏன் தண்டிக்கிறே?” -தழுதழுத்தான் அவன்.

“ஏழெட்டு பொண்ணுகளைக் காதலிச்சிருக்கீங்க. அத்தனை பேரோடவும், பீச், பார்க், ஆத்தங்கரைன்னு டூயட் பாடியிருக்கீங்க. லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கூத்தடிச்சிருக்கீங்க. நினைச்சாலே குமட்டுது.....சீய்.....'' -வெறுப்புடன் நெருப்பு வார்த்தைகளைக் கக்கினாள் அவள்.

 அவன் மருண்டான்; துவண்டான்.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” -கவலை தொனிக்கக் கேட்டான்.

“உங்க டைரியில் படிச்சேன்.”

டைரியை எடுத்து வந்து, அவளிடம் நீட்டி, “முழுசும் படிச்சியா?” என்றான் வினோதன்.

வாங்க மறுத்த அவள்.....

“பாதி படிச்சதும் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சி. தூக்கிக் கடாசிட்டேன்.”

“அமுதா, பெண்கள் விசயத்தில் ‘தில்’ உள்ளவன் கல்யாணத்துக்கு முந்தியே ஆசை தீர விளையாடி முடிச்சுடறான். என்னை மாதிரி நல்லவன்...கோழைன்னு வெச்சிக்கோ, ‘அந்தச் சுகத்தை’க் கற்பனையில்தான் அனுபவிச்சுத் திருப்தி பட்டுக்கிறான். என்னைப் பொருத்தவரைக்கும், டைரியில் குறிப்பிட்ட மாதிரி எந்தப் பெண்ணையும் நான் காதலிச்சதில்ல; கூடிக் களிச்சதும் இல்ல; சும்மா எழுதி வெச்சேன். அதைப் படிக்கிறதில் இனம் புரியாத சுகம்.....

.....நம் கல்யாணம் நிச்சயம் ஆனதும், டைரியில், ‘இவை அனைத்தும் கற்பனையே’ன்னு கடைசிப் பக்கத்தில் எழுதி வெச்சேன். அதை நீ  படிக்கல. இந்த டைரியை எரிக்காம 'கற்பனை'ன்னு குறிப்பு எழுதி வெச்ச நான் ஒரு முட்டாள்.  

.....என் மனசைத் திறந்து நடந்ததையெல்லாம் சொல்லிட்டேன். நம்புவாயா செல்லமே?”

-சொல்லி முடித்த வினோதன், அமுதாவின் முதுகுப் பக்கம் வாகாகச் சரிந்து படுத்து, மென்மையாய் அவளின் கருங்கூந்தலை வருடிக் கொடுத்தான்.

பதில் ஏதும் தராத அமுதா கணப்பொழுதில் புரண்டு படுத்தாள்; அவனுடன் இணைந்தாள்.....இணைந்தார்கள். வெறும் கட்டாந்தரை அதிநவீன சொர்க்கபுரியாக மாறிக்கொண்டிருந்தது!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கதாசிரியர்? 
சொல்லத்தான் நினைக்கிறேன்..... தன்னடக்கம் தடுக்கிறது!

2 கருத்துகள்:

  1. தங்களது தன்னடக்கத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் அதிவிரைவு வருகை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

      ரசிப்புக்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு