இன்ன நேரத்தில், இன்ன இடத்தில், இது இதெல்லாம், இப்படி இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது விதி என்கிறார்கள்.
15.07.2013 பிற்பகல் மணி 04.03க்கு இந்தப் பதிவு எழுதி முடிக்கப்படணும்கிறது இந்த ஒரு நிகழ்வுக்கான விதி.
இதைத் தீராத அறிவுப்பசியோடு[!?!?!] அலைகிற நான்தான் எழுதணும்கிறது எனக்கென வகுக்கப்பட்ட விதி.
ஏற்கனவே படிச்சதை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படிச்சித் தொலைக்கணும்கிறது உங்களுக்கான [தலை]விதி.
#எதிர்பாராம மின்சாரம் துண்டிக்கப்படுது[மின் சேமிப்புக்கலம் இல்லீன்னு வெச்சிக்கோங்க]. ''அடச் சே...”ன்னு எரிச்சலோட மேசை மேல ஓங்கித் தட்டுறீங்க. அங்கே உட்கார்ந்திருந்த ஒரு ‘ஈ’ நசுங்கிச் செத்துப் போகுது. இது ஈயோட விதி.
“டாக்டர் எஞ்சினீர்னு யார்யாரோ என்னைப் பெண் கேட்டு வந்தாங்க. ஆளு ஹீரோ மாதிரி இருக்கார்னு இந்த ஆளை ஆசைப்பட்டுக் கட்டிகிட்டேன். இப்போ கல்யாணம் காட்சின்னு போனா கட்டிக்க ஒரு பட்டுப் புடவைகூட இல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கிறோம். எல்லாம் விதி...என் தலை விதி.” -இது என் எதிர்த்த வீட்டு அன்னபூரணியின் புலம்பல். இப்படித் தன் விதியைச் சொல்லிச் சொல்லிக் கண்ணீர் சிந்துகிற அன்னபூரணிகள் எல்லா ஊர்களிலும் இருக்காங்க.
“சென்னைக்குக் கார் எடுத்துட்டுக் கிளம்பினான். ரெண்டு தோசை போடுறேன் சாப்பிட்டுப் போடான்னு சொன்னேன். ஆம்பூர் போயி பிரியாணி சாப்பிடுறேனுட்டுப் போனான். பின்னால போன கார்க்காரன் இடிச்சதுல அந்த நிமிசமே எமலோகம் போய்ச் சேர்ந்துட்டான். தோசை சாப்பிட்டுட்டுப் பத்து நிமிஷம் கழிச்சிப் போயிருந்தா இந்த விபத்து நடந்திருக்குமா? விதி யாரை விட்டுவெச்சுது?” -இப்படிப் புலம்பினது என் சிநேகிதனுக்குச் சினேகிதனோட அம்மா செல்லம்மா. இப்படி ஒரு செல்லம்மாவை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மேலும் பல பேரைக் கேள்விப்பட்டும் இருக்கலாம்.
இப்படி, விதியை நினைக்காத, அதைப் பத்திப் பேசாத மனுசங்க இந்த உலகத்தில் இல்ல; இல்லவே இல்லை.
இப்போ, உங்க பகுத்தறிவு மூளையில், மனுசங்களுக்கு மட்டும்தான் விதியா, மத்த உயிர்களுக்கு இல்லையான்னு ஒரு கேள்வி தலை தூக்கியிருக்கும்.
அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு மான். வயிராறப் புல் மேஞ்சுது. தாகம் எடுத்ததால ஒரு நீர்நிலையைத் தேடிப் போகுது. அந்தப் பக்கத்தில் சிங்கம், சிறுத்தை, ஓநாய் போன்ற கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருப்பது அதுக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையா நாலா புறமும் பார்த்துட்டே நீர்நிலையை அடைந்து, தண்ணீரில் வாயை வெச்சி உறிஞ்ச ஆரம்பிக்குது. தாகம் எல்லை மீறிப் போனதால தண்ணிக்குள்ள முதலை இருப்பதை மறந்துடிச்சி. தண்ணியில் வாயை வெச்ச அடுத்த நொடியே உள்ளேயிருந்து ’சரேல்’னு மேலெழும்பிய ஒரு முதலை மானின் தலையைக் கவ்விப் பிடிச்சி உள்ளே இழுத்துட்டுது. அன்னிக்கி தினத்தில் ஒரு முதலைக்கு இரையாகணும்கிறது அந்த மானுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி. சுவையா மான் கறி சாப்பிடணும்கிறது முதலையோட விதி. இப்படி எல்லா உயிரையும் விதி ஆட்டிப்படைக்குது.
ஜடப்பொருள்களையும் அது விட்டு வைக்காது.
பூமி தன்னைத்தானே சுத்திட்டிருக்கு. சூரியனின் ஈர்ப்புச் சக்தியால அது சூரியனையும் சுத்திச் சுத்தி வருது. என்னிக்கோ ஒரு நாள், சூரியனைச் சுத்துறதை நிறுத்திட்டு, தன்னைத்தானே சுத்துறதும் தடைபட்டுக் கீழே கீழே கீழே சரிஞ்சி துக்கிளியூண்டு புள்ளியா மாறி மறைஞ்சும் போச்சுன்னா, அதுக்கும் விதிதாங்க காரணம். யுக யுகாந்தரங்களுக்கு அப்புறம், சூரியனே வெடிச்சிச் சிதறி, வெட்ட வெளியில் சிறு சிறு தீப் பந்துகளா சுத்தி வர ஆரம்பிச்சா அதுவும் விதியினுடைய சித்து விளையாட்டுதான். ஆக, பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பொருளும் விதியின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பவே முடியாது..........#
''என்னப்பா பரமு, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?
அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே நானும் கேட்க நினைக்கிறேங்க.”
“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.
நான் கட்சியெல்லாம் மாறலீங்க. மேலே நீங்க படிச்சதெல்லாம் ஆன்மிகவாதிகள் சொல்லிட்டுப் போன வியாக்கியாணங்களை அடிப்படையா வெச்சி நான் சொன்னதுங்க. எனக்கு இந்த விதி சதி மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. மனுசனுக்கு ஆறறிவு இருக்கு. தன்னிச்சையாச் சிந்தித்துச் செயல்பட முடியுது. மூளையின் செயல் திறனைப் பொருத்து அவனுக்கு இன்ப துன்பங்கள் நேருதுன்னு நம்புறவன் நான்.
ஒரே ஒரு உதாரணம் மட்டும். [பாதி படிச்சதோட நீங்க ஓடிடக் கூடாதில்ல?]
மழை பெய்து தரையெல்லாம் ஈரமா இருக்கு. காத்தும் வேகமா வீசுது. அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரர் அவசர வேலையா போய்ட்டிருக்கார். ஒரு சாலையைக் கடக்க நேரும்போது, எதிரே ஒரு கார் வருது. ஈரமான தரை வழுக்குங்கிறது அவருக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையாத்தான் நடையை எட்டிப் போடுறார். ஆனாலும், தரையில் கால் சறுக்க, குப்புற விழறார். கார் அவரை மோதித் தள்ளி அரைச்சிட்டுப் போயிடுது.
கட்டஞ்சட்டைக்காரர், அறிவுபூர்வமா செயல்பட்டும் அவர் சறுக்கி விழுந்ததுக்குக் காரணம் திடீர்னு வேகமா வீசிய காத்து. அது அவரை ‘விசுக்’னு பாதையில் தள்ளி விட்டுடிச்சி.”
ஒரு மனிதன் அறிவுபூர்வமா செயல்பட்டும்கூட, எதிர்பாராத சம்பவங்களால் உயிரிழக்கிறான்கிறதுக்கு இந்தச் சம்பவத்தை உதாரணம் காட்டினேன். இந்தச் சம்பவத்தைத் தற்செயலானதுன்னு ஆன்மிகவாதிகள் ஒத்துக்க மாட்டாங்க.
“திடீர்னு அதி வேகத்தில் காத்து வீசிச்சே, அது எப்படி? அதுதான் விதியின் செயல். கட்டஞ்சட்டைக்காரரைக் கொல்வதற்கு இங்கே அதி வேகக் காற்றைப் பயன்படுத்தியது விதி”ன்னு வாதிப்பாங்க.
’காற்றின் வேகத்தை அனுமானித்து, தன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அவர் உயிர் பிழைத்திருந்தால்......’ -இப்படி நாம் மடக்கினா, அதுக்கும் ரொம்பச் சாமர்த்தியமா பதில் சொல்லிடுவாங்க.
அந்தப் பதில், “அவர் அன்னிக்கி சாகக் கூடாதுங்கிறது விதி. ’இதை இப்படிச் செய். அதை அப்படிச் செய்’ என்று மனித அறிவை நெறிப்படுத்துவதே விதிதான். சுருக்கமாச் சொன்னா, ஐந்தறிவு, ஆறாவது அறிவு, பகுத்தறிவு, பகுக்காத அறிவு எல்லாமே விதிக்குக் கட்டுப்பட்டவைதான்” என்பதாக இருக்கும்.
இவங்க வாதத்தைச் சரின்னு ஏத்துகிட்டா, கை அசைக்கிறது, கண் சிமிட்டுறது, ஒன்னுக்கு ரெண்டுக்குப் போறது, பொறாமைப் படுறது, பொய் பேசுறது, புணர்ச்சி பண்றது ...இப்படி எல்லார்த்துக்குமே விதிதான் காரணம்னு சொல்லவேண்டி வரும்.
பிறக்கிற குழந்தைக்குத் தலையில் எத்தனை மயிர் இருக்கணும். வளர்ந்த ஒரு மரத்தில் ஒரு மைக்ரோ வினாடியில் எத்தனை இலை உதிரணும். உலகத்திலுள்ள ஒவ்வொரு உயிரும் பெய்யுற மூத்திரம் என்ன என்ன எடையில் இருக்கணும் என்பதெல்லாம்கூட விதியின் மூலம் நிர்ணயிக்கப் படணும். இல்லையா?
இதெல்லாம் சாத்தியமா? அப்புறம் என்னங்க விதி? வெண்டைக்காய் விதி.
”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னா, மனுசனுக்கு அறிவுன்னு ஒன்னு எதுக்கு?”
இப்படி ஒரு கேள்வியை முன் வைத்தால்?
“மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, அவன் பல பிறவிகள் எடுத்து இன்ப துன்பங்களை அனுபவிக்கணும்கிறது விதி. பிறவித் துன்பத்திலிருந்து விடுபட விதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கணும். அதுக்குக் கடவுளின் கருணை தேவை. கடவுளை உணர ஆறறிவு தேவை” என்பது அவர்கள் பதிலாக இருக்கலாம்.
“என்னதான் பகுத்தறிவுடன் செயல்பட்டாலும், விதிப்படிதான் எல்லாம் நடக்கும்னு சொல்றீங்க. விதியே நம்முடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்னா, நாம் செய்யுற பாவ புண்ணியங்களுக்கும் விதிதானே பொறுப்பு? மனுசன் பொறுப்பாக மாட்டானே! அப்புறம் எதனால் அவனுக்குப் பல பிறவிகள். துன்பங்கள், துயரங்கள் எல்லாம்?
விதியைப் பத்தி ரொம்பவே எழுதிட்டேன். இதுக்கும் மேல எழுதினா, ''இன்னிக்கி, இதைப் படிச்சி மண்டை காயணும்கிறது என் தலைவிதி''ன்னு தலைதலையா அடிச்சுக்குவீங்க. நிறுத்திடுறேங்க.
மிக நல்ல பதிவு. உங்கள் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கிவிட்டேன். உங்கள் பணி மேலும் தொடரட்டும். இப்போது உங்கள் கேள்விக்கான எனது பதில்கள்.
பதிலளிநீக்கு1) விதி என்று ஒன்று இருக்கிறதா?
எனது பதில்: விதி என்பது கண்டிப்பாக இருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, பல நூறு விதிகள். "பூமியைச் சூரியன் சுற்றி வரவில்லை. சூரியனைத் தான் பூமி உள்ளிட்ட பிற கோள்கள் சுற்றி வருகின்றன" என்று கூறிய நிக்கோலஸ் காபர்நிக்கஸின் விதி தொடங்கி இந்த நொடி வரை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் விதிகளே அவை. அவற்றையே நான் நம்புகிறேன். இந்த ஆன்மிகவாதிகள் கூறும் விதிகளை நான் நம்புவதில்லை. ஏனெனில், அந்த விதியை விதிப்பதாகச் சொல்லப்படுபவனையும் நான் நம்புவதில்லை.
2) விதியை எதிர்த்துப் போராடி வெற்றி காண கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் தேவையா?
எனது பதில்: அப்படியே இந்த ஆன்மிகவாதிகள் கூறுவதுபோல விதி என்று ஒன்று இருந்து, நான் போன பிறப்பில் செய்த பாவத்தை, இப்பிறப்பில் கடவுளுக்கு காணிக்கை, பரிகாரம் உள்ளிட்ட வழிபாட்டின் மூலம் வென்றுவிட முடியும் என்றால், அந்தக் கடவுளை நான் கையூட்டு வாங்கிக் கொண்டு கடமை தவறும் அரசு அதிகாரியைவிடக் கேவலமாகத் தான் கருதுவேன். அவனிடம் மண்டியிட்டு என் பாவங்களைப் போக்குமாறு தன்மானம் இழக்க மாட்டேன்.
கடைசிப் பத்தியைத் திருத்தியமைத்துத் தமிழ்மணத்தில் சற்று முன்னர்தான் இணைத்தேன். தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
நீக்குதங்களின் கருத்துரை ஏற்கத்தக்கதே.
இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் பல்வகை நியதி[விதி]களுக்கு உட்பட்டவைதான். இவை குறித்து ஆராய்வது அறிவியலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.அந்த நியதிகளை உருவாக்கியவர் கடவுள் என்பதில்தான் நமக்குக் கருத்துமாறுபாடு.
ஆன்மிகவாதிகளின் தவறான அனுமானங்களும் கற்பனைக் கதைகளும் மக்களின் சிந்திக்கும் அறிவை வளரவிடாமல் தடுக்கின்றன. அவர்கள் செய்யும் தவறுகளை மக்களுக்குப் புரிய வைப்பது மிக அவசியமானது.
என் பொழுதைக் கழிப்பதற்காக எழுதும் பதிவுகள் ஓரளவுக்கேனும் பிறருக்குப் பயன்படுதல் வேண்டும் என்பது என் விருப்பம்.
கடவுளிடம் மண்டியிட்டுத் தன்மானம் இழக்க விரும்பாத தங்கள் கொள்கை போற்றுதலுக்குரியது.
மிக்க நன்றி நண்பர் பாலமுரளி கிருஷ்ணா.
விதி என்பது ஆருடர்களின் வாழ்வை நடத்திச்செல்ல உதவுகிறது.
பதிலளிநீக்கு"விதியை மதியால் வெல்லலாம் வென்றால் அதுவே விதியாகும்"
கேள்வியில் பதிலைக் கொடுக்கும் வாய்ச்சொல் வீரர்கள்.
மதி மன வலிமையைக் கூட்டும். விதியை நம்புவதால் பயனேதும் இல்லை. தன்னம்பிக்கை இறுதிவரை கைகொடுக்கும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே.
விதி என்பதில் நம்பிக்கையில்லை ஐயா
பதிலளிநீக்குநம் மதியை நம்புவோம்
மிக்க நன்றி ஜெயக்குமார்.
நீக்குவிஞ்ஞானிகள் சொல்வதை நம்புவோம். ஞானிகள் சொல்வதை நம்பக் கூடாதா?
பதிலளிநீக்குவிஞ்ஞானிகள் சொல்வனவெல்லாம் நிரந்தர உண்மைகள் ஆகிவிடா. தொடரும் ஆய்வுகள் அவற்றைப் பொய்யாக்கக்கூடும்.
பதிலளிநீக்குதம் கண்டுபிடிப்புகளுக்காக அவர்கள் அலப்பறை செய்வதில்லை.எனவே,அவர்கள் சொல்வதை நம்பலாம்.
மனிதரில் ஞானி என்று எவரும் இல்லை.அறிவு ஆளாளுக்கு மாறுபடும்.
யார் சொன்னால் என்ன, நம் அறிவுக்குச் சரியெனப் பட்டால் நம்பலாம்.
மிக்க நன்றி புதுமுகம்.
நீக்குவிதி என்பது யாருக்காகவும் மாறாது... மாறினால் அது சதி...!
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன்.
நீக்கு