சபரிமலை ஐயப்பசாமி பிரமச்சாரிக் கடவுள் என்பதால், அவரைத் தரிசனம் பண்ணப் பருவப்பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சபரிமலைக்குப் பத்து முதல் ஐம்பது வயது வரையிலான வயதுடைய பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று பல இந்துமத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆயினும், நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்துவதில் கேரள அரசு மிக உறுதியாக உள்ளது.
நேற்று[17.10.2018], சபரிமலைக் கோயிலின் நடை திறக்கப்பட்ட நிலையில், மேற்குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் ஐயப்பனைத் தரிசிக்கச் சென்றபோது, தீவிர ஐயப்ப பக்தர்களால் அவர்கள் வழிமறித்துத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காவல்துறைப் பாதுகாப்புடன் சென்ற பெண் நிருபர்களும் கல் வீசித் தாக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மீது பக்தர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்த, காவல்துறையினரும் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். மோதல் தொடர்கிறது.
இந்நிலையில், கடவுளின் தேசத்தில் பல்வேறு ஆன்மிக அமைப்புகள் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு [பந்த்] அழைப்பு விடுத்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் என்னும் ஒரு பிரமச்சாரிக் கடவுளைப் பருவப் பெண்கள் நேரில் தரிசித்தல் கூடாது என்பதில் உறுதி காட்டும் பக்தகோடிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தோன்றுகிறது. போராட்டத்தை ஒடுக்குவதில் கேரள அரசும் உறுதியாக உள்ளது.
தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு செய்யுமோ செய்யாதோ, விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து, மலையாள தேசத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே நம் போன்றோர் விருப்பம். மாறாக.....
பிரமச்சாரிக் கடவுளான ஐயப்பன் பொருட்டு நடக்கும் போராட்டம் தொடருமேயானால்.....
''ராமன் ஏகபத்தினி விரதன்; அவர் சீதையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதால் கூட நினைக்கமாட்டார்; வேறு எந்தப் பெண்ணும் அவரை நினைக்கக் கூடாது. ஆகவே, ராமர் கோயிலுக்குள்ளும், அனுமன் பிரமச்சாரி[இராமனின் தொண்டனாக விளங்கிய அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர் என்கிறது தமிழ் விக்கிப்பீடியா. 'ராம லக்ஷ்மணர்களைக் காப்பதற்காக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது, அவரது உடலில் பெருக்கெடுத்த வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது' என்றொரு கதையும் உண்டு] என்பதால், அனுமன் கோயிலுக்குள்ளும் பருவப் பெண்களை அனுமதிக்கக் கூடாது''* என்றதொரு கோரிக்கையை முன்வைத்து, புதியதொரு போராட்டத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்குவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது; மனதில் கவலை படர்கிறது.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
*பதிவொன்றில் வாசிக்க நேர்ந்தது. அதன் முகவரியைச் சேமிக்கத் தவறினேன். பின்னர் தேடியும் கண்டறிய இயலவில்லை. வருந்துகிறேன்.
*பதிவொன்றில் வாசிக்க நேர்ந்தது. அதன் முகவரியைச் சேமிக்கத் தவறினேன். பின்னர் தேடியும் கண்டறிய இயலவில்லை. வருந்துகிறேன்.