செவ்வாய், 2 அக்டோபர், 2018

கடவுளை மற! 'கக்கன்' அவர்களை நினை!!

#திரு.கக்கன் அவர்களை அமைச்சராகவும் அமைச்சர் பதவியில் இல்லாமலும் நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். எப்போதும் எளியவராகவே வாழ்ந்து காட்டிய பெருந்தகை அவர். அவரிடம் நான் கற்றது இந்த எளிமைதான்.

நானும் அவரும் ஒரு சமயம் ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் முடிந்து மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம்.

நான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன். எலெக்ட்ரிக் ஷேவரில்தான் முகச்சவரம். ஒடிகோலன் கலந்த 'after shave lotion', ஸ்நோ, பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்துக் களங்கமில்லாமல் ஒரு குழந்தைபோல் சிரித்தார் திரு.கக்கன்.

''என்னங்க, சவரம் பண்றதுக்கு இவ்வளவு சிரமப்படணுமா?'' என்று சொல்லி, ஒரு பிளேடை எடுத்தார்; குறுக்கில் பாதியாக உடைத்தார்; ஒரு பாதியால் மழமழவென்று சவரம் செய்து முடித்தார். ஒரு கீரல், ஒரு வெட்டு, சிறு ரத்தக் கசிவு என்று எதுவும் இல்லாமல் அவர் சவரம் செய்த லாகவத்தை நான் பெரிதும் ரசித்தேன்.

அவர் சொன்னார்: ''இது நான் ஜெயிலில் இருந்தபோது பழகினது. அரை பிளேடு போதும். அஞ்சு நிமிசத்தில் சவரம் பண்ணி முடிச்சுடலாம்.''

அவரின் இதமான குரலும், கள்ளமில்லாச் சிரிப்பும் எப்போதும் என்னால் மறக்க முடியாதவை.
மேற்கண்ட நிகழ்வை நினைவுகூர்ந்தவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். நூல்: ஜெயகாந்தனின், 'யோசிக்கும் வேளையில்...'; ஶ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை - 6000 017.
------------------------------------------------------------------------------------------------------------------
பதிவின் தலைப்புக்காக ஜெயகாந்தனைக் கோபிக்காதீர். ''கடவுளை மற. மனிதனை நினை'' என்னும் பெரியோர் வாக்கில், மனிதனை நீக்கி, கக்கன் அவர்களை இணைத்தவன் நான்...நான்தான்! என்னை நீங்கள் கோபிக்கலாம்; நிந்திக்கலாம்!!

முழுச் சோம்பேறியாய், மூக்குப் பிடிக்கத் தின்னுட்டு, வெற்று உபதேசம் பண்ணினவனையெல்லாம் கடவுள் அவதாரம்கிறான்; கடவுள்ங்கிறான்! பெரிய பெரிய பதவி வகித்தும் நேர்மை தவறாம வாழ்ந்த கக்கன் அவர்களை நான் 'மனிதன்' என்கிறேன். இது தவறல்லவே?