வியாழன், 4 அக்டோபர், 2018

நான் தீர்க்கதரிசி!!!!!

''சாத்தானே சக்தி வாய்ந்த கடவுள். அவரையே நான் வழிபடுகிறேன்'' என்று சொன்ன நம்பர் 1 அறிவுஜீவி மானுடன்[தீர்க்கதரிசி] நானாகத்தான் இருப்பேன்[என் பழைய சில பதிவுகளை வாசித்து அறிந்திடுக].

நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுள் மிக மிக மிக.....நல்லவர் என்பதால், நோய், வறுமை, முதுமை, மரணம் என்பன போன்ற நாம் அனுபவிக்கும் கணக்கற்ற துன்பங்களுக்கு அவர் காரணமல்ல; அனைத்துக் கெட்ட நிகழ்வுகளுக்கும் 'சாத்தான்' என்னும் தீய சக்தியே மூலகாரணம் என்பது என் நம்பிக்கை[இக்கருத்தை ஏற்கனவே என் பதிவுகளில்  வலியுறுத்தியுள்ளேன்].

நல்லவரான கடவுளைக் கருத்தில் கொள்ளாமல் தீமையின் வடிவமான சாத்தானைத் தொழுது வாழ்தலே[பேரழிவுகளுக்குக் காரணமான நீரையும் நெருப்பையும் காற்றையும் கடவுள்களாக்கி நம் மூதாதையர் வழிபட்டதை நினைவுகூர்க] மனிதகுலம் சுகித்திருப்பதற்கான ஒரே வழி என்றும் தெளிவுபடுத்தியுள்ளேன்[சாத்தான் கெட்டவரே ஆயினும், மனப்பூர்வமாய் அவரைப் புகழ்ந்து வழிபடும்போது கருணை வடிவினராய்  மாறிவிடுவார் என்பதை உய்த்துணர்க].

நான் பரிந்துரைத்த இவ்வழியை மனிதகுலம் முன்னரே உணர்ந்து  பின்பற்றியிருந்தால், இம்மண்ணில் எண்ணற்ற மதக்கலவரங்கள் நடந்திரா. கணக்குவழக்கற்ற மனித உயிர்கள் பலியாகியிரா. மனிதகுலத்திற்கு வேறு எவ்விதத் தீங்கும் நேர்ந்திராது என்பதையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அறிந்திடுக.

சாத்தான் வழிபாட்டை அனைத்து மதத்தவரும் ஏற்றிருந்தால்.....

'இந்துக் கோயில்கள் சாத்தானின் இருப்பிடம்' என்று மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் கிறித்துவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் பேசியிருக்க மாட்டார்[ஊடகங்களிலும், தமிழ் தினசரி[03.10.2018] உட்பட, பல நாளிதழ்களிலும் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்படப் பல ஊர்களில் 11 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன]. லாசரஸ் பேச்சு....
https://youtu.be/MMPHDD2xxHo

லாசரஸ் அவர்களை மேற்கண்டவாறு பேசத் தூண்டியது தூயவரான கடவுள் அல்ல; வேறு எதுவுமல்ல;  சாத்தானே என்பது என் உறுதியான நம்பிக்கை. இந்துக் கோயில்களில் குடியிருப்பதாக அவர் குறிப்பிட்ட சாத்தான், அவர் நாக்கிலும் குடியேறியிருந்ததை அவர் அறிந்திடவில்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ''இந்துக் கோயில்கள் குறித்து நான் அவதூறாக ஏதும் பேசவில்லை; என்னைப் பேச வைத்தது என் நாவில் குடியேறியிருந்த சாத்தானே'' என்று வருத்தம் தெரிவிப்பதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

அன்பர்களே,

இனியும் இம்மாதிரி கெட்ட நிகழ்வுகள் இம்மண்ணில் இடம்பெறாமலிருக்க.....

சாத்தானைப்  போற்றிப் புகழுந்திடுவீர்!! துதிபாடி மகிழ்ந்திடுவீர்!!!

''போற்றி போற்றி! சாத்தானின் திருவடி போற்றி!!''..... ஹி...ஹி...ஹி!!!
=======================================================================