''சிறுமியின் கண்களில் ரத்தம் கசிந்த நிலையிலும், கயவர்கள் 10 வயதுச் சிறுமியைக் கதறக் கதறக் கற்பழித்துக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள்'' - சிறுமியைச் சீரழித்துக் கொன்ற 3 கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இவ்வாறு கண்கலங்கக் கூறினார். கேட்டவர் நெஞ்சங்கள் பதைபதைத்தன[தினத்தந்தி, 05.10.2018].
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரம் என்னும் ஊரில்தான்[01.12.2014இல்] இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.
வயதான தன் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தவள் 5ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த இந்தச் சிறுமி. தனியளாக உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, சோளக்காட்டுக்குக் கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டுக் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள்.
''மிருகங்கள்கூட குட்டிகளிடம் இவ்வாறான ஈனச் செயலில் ஈடுபடுவதில்லை'' என்று வேதனைப்பட்டிருக்கிறார் நீதிபதி.
'உலகம் எத்தனை பொல்லாதது என்று புரியவைத்து அரவணைத்து அன்பு பாராட்டி, வளர்த்து ஆளாக்குவதற்குப் படித்த பெற்றோர்கள் இல்லை; எத்தனை பேர் சேர்ந்து எத்தனை முறை வன்புணர்வு செய்தாலும் ஏனென்று கேட்க எவருமில்லை. ஆதரவுக்கரம் நீட்ட அக்கம்பக்கத்தாரும் இல்லை' என்பது தெரிந்துதான் உள்ளூர்க் காலிகள்{ஓடைப்பட்டிக் காவல்துறையினரின் விசாரணையில், காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்[29], இராபின்[எ]ரவி[27], குமரேசன்[23] ஆகிய மூவரும்} இந்த இழிசெயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் பக்தையான இவள், மாலை போட்டு விரதமும் இருந்திருக்கிறாள். லட்சோபலட்சம் பக்தர்களால் வழிபடப்படும் உலகப் புகழ் பெற்ற சாமியான ஐயப்பன், ஒரு குக்கிராமத்தில், 10 வயதில் தனக்கொரு பக்தை இருப்பதை மறந்துவிட்டார்; அபலையின் கூக்குரல் கேட்டு அபயக்கரம் நீட்டத் தவறிவிட்டார்[கடவுளே ஆயினும் அவ்வப்போது மறதி ஏற்படுவது இயற்கை என்றறிக!].
''ஐயப்பனை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்? இந்த நிகழ்வுக்கும் ஐயப்ப சாமிக்கும் சம்பந்தம் இல்லை. இவள் முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்குக் கிடைத்த தண்டனை இது'' என்று சில புண்ணிய ஆத்மாக்களும் பக்தகோடிகளும் வாதம் புரியக்கூடும்.
அவர்களின் வாதம் மிக மிக மிகச் சரியானதே!
இவளும், இந்நாள்வரை இவளைப் போல வன்புணர்வுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுமிகளும் பெண்களும், முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்கான பலன்களை இப்பிறவிகளில் அனுபவிக்கிறார்கள் என்பது அறியத்தக்க உண்மை.
அனுபவிக்கட்டும். விதிவிலக்காக.....
நம்மில், மேற்கண்ட புண்ணிய ஆத்மாக்களையும், பக்தகோடிகளையும் போலப் பிறவிதோறும் புண்ணியம் மட்டுமே செய்தவர்கள் இருக்கிறார்கள. காமாட்சிபுரத்துச் சிறுமிக்கு நேர்ந்த அவலம் அவர்களின் வீட்டுச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நேராது; ஒருபோதும் நேராது; நேரவே நேராது. காரணம்.....
அவர்கள் வழிபடும் கடவுள் அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதே!!! ஹ...ஹ...ஹ!!!
--------------------------------------------------------------------------------------------------