திங்கள், 4 மார்ச், 2019

நீங்கள் பாவியா, புண்ணியவானா?!?!

இந்தக் கலிகாலத்தில், உலக நன்மைக்காகவும், போதிய மழை பெய்வதற்காகவும் சித்தர்களை வழிபட்டு, ஒருவர் 48 நாட்கள் 'மௌனவிரதம்' இருந்தாரென்றால் அவர் நம் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் ஆவர். 

அப்படிப்பட்ட ஒருவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலைப் பகுதியில் ஒரு சித்தர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்[பெயர் வேண்டாம்]. ஊர் மக்களால் 'சித்தர்' என்றே அழைக்கப்படுபவர்.

இவரின் கனவில் தோன்றிய சித்தர்கள்[எண்ணிக்கை தெரியவில்லை], மத்தியப் பிரதேச மாநிலம் வழியாகச் செல்லும் நர்மதை நதியிலிருந்து சிவலிங்கம் கொண்டுவந்து பூஜை செய்யும்படி உத்தரவிட்டார்களாம். 

நம் சித்தரும் அங்கு சென்று, நர்மதையில் கல் வடிவிலான சிவலிங்கத்தைத் தேடி எடுத்துத் தரும் நபர்களைச்[கோரிக்கை வைத்தால் கல் வடிவிலான சாத்தான்கூடக் கிடைக்கலாம்!] சந்தித்துக் கோரிக்கை வைத்தாராம்.

04 ஆண்டுகளுக்குப் பின்னர், நர்மதை ஆற்றுப் பகுதியிலிருந்து பெரிய அளவிலான  சிவலிங்கம் கிடைத்ததையடுத்து, நம்ம ஊர்ச் சித்தருக்கு மேற்படி நபர்கள் தகவல் அனுப்பினார்கள். அவரும் அங்கு விரைந்து சென்று 360 கிலோ எடைகொண்ட சிவலிங்கக் கல்லை[42 அங்குல உயரம் 54 அங்குலச் சுற்றளவு] ரூ60.000 விலை கொடுத்து வாங்கி லாரி மூலம் சென்னிமலைக்குக் கொண்டுவந்துள்ளார்.

பிரதிஷ்டை[!!!]செய்யப்படவுள்ள லிங்கத்தின் படம் கீழே.....

#நர்மதையில் இருந்து சென்னிமலைக்குக் கொண்டுவரப்பட்ட 360 கிலோ எடையுள்ள சிவலிங்க வடிவக் கல்லைப் பயபக்தியுடன் பார்த்துச் சென்ற பக்தர்கள்#
என்று தலைப்புக் கொடுத்து, படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ்[நாளிதழ்கள் பலவும் இச்செய்தியை வெளியிட்டுப் புண்ணியம் தேடிக்கொண்டுள்ளன!]

படத்தை உற்று உற்றுப் பார்த்தேன்; பலமுறை பார்த்தேன். பாலீஷ் செய்யப்பட்ட[இப்படிச் சிறிய அளவிலான கற்கள் நர்மதையில் கிடைப்பதுண்டு என்கிறது பத்திரிகைச் செய்தி]கல்லை மீண்டும் மீண்டும் பார்த்தேன். பார்த்து முடித்து..... 

''சிவலிங்கம் தெரியல; குழவிக்கல்(அம்மிக்கல்)தான் தெரியுது'' என்றேன் அருகிலிருந்த என் மனைவியிடம். என்னை முறைத்துப் பார்த்துவிட்டு அவர் சொன்னார்.....

''நாத்திகம் பேசுற பாவிகளுக்குச் சிவலிங்கம் தெரியாது; குழவிக்கல்தான் தெரியும்.''