பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 29 மார்ச், 2019

காது நோக ஒரு கதை கேட்டேன்!

பேருந்துக்காக நான் காத்திருந்தபோது அது நிகழ்ந்தது.

''சத்தமா சொல்லு'' -சற்றே அதட்டும் குரலில், என் முன்னே நைந்த கைலியும் நரையோடிய தலையுமாக நின்றுகொண்டிருந்த  ஒரு நடுத்தர வயதுக்காரர் சொன்னபோதுதான், அவருக்கு அருகே இருந்த பெண் அவரிடம் ஏதோ சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்தது. கவனத்தை அவர்கள் பக்கம் செலுத்தினேன்.

அவள் சொன்னாள்: ''ஒரு வாரமா புரோட்டா சாப்பிடணும்னு புள்ளைங்க சொல்லிட்டிருக்காங்க. எதுப்பால இருக்குற  ஓட்டலில் சாப்பிட்டுட்டு அடுத்த பஸ்ஸில் ஊருக்குப் போகலாங்க.''

''என்கிட்டயும் சொன்னாங்கதான். மறந்தே போய்ட்டேன்'' என்றவர் வலப்பக்கக் கைலியை இடுப்பளவுக்குத் தூக்கிப்பிடித்து அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்த கொஞ்சம் பண நோட்டுகளை எண்ணிப்பார்த்தார்.

''பஸ் டிக்கட்டுக்குப் போக மிச்சம் பணம் இருக்கு. பத்து புரோட்டா வங்கலாம். நீங்க மூனுபேரும் இங்கயே இருங்க. நான் புரோட்டா பார்சல் வாங்கிட்டு வர்றேன்'' என்று சொல்லி நகர முற்பட்டபோது, ''பார்சல் எதுக்கு? கடையிலியே சுடச்சுடச் சாப்பிட்டுட்டு அடுத்து வர்ற பஸ்ஸில் போயிடலாம்'' என்றாள் அவள்.

''அது வேண்டாம்.''

''ஏங்க?''

''இந்த ஓட்டல் கொஞ்சம் வசதியானவங்க சாப்பிடுற இடம். அவனவன் காடை கவுதாரி ரோஸ்ட், புறா எறா வறுவல், சிக்கன் பிரை, மட்டன் பிரியாணின்னு காசைக் கணக்குப் பார்க்காம இஷ்டப்பட்டதெல்லாம் சாப்பிடுவான். அதைப் பார்த்தா நம்ம புள்ளைங்க ரொம்பத்தான் ஏங்கிப்போயிடும். இப்போ பார்சல் போதும். அடுத்த வாரம் சம்பளம் வந்ததும் பிராய்லர் கறி சமைச்சுடலாம்'' என்று சொல்லி அவளின் பதிலை எதிபாராமல் அந்தச் 'சைவ அசைவ' உணவு விடுதியை நோக்கி நகர்ந்தார் கைலிக்காரர்.
அந்தப் பெண், நான் அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்ததை அனுமானித்திருக்க வேண்டும். சற்றே தலை குனிந்து எட்ட நின்றுகொண்டிருந்த தன் பிள்ளைகளின் பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.

நானும் என் பார்வையைத் திசை திருப்பினேன். பெருஞ்சுமையுடன் எனக்கான பேருந்து வருவது தெரிந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


6 கருத்துகள்:

  1. சற்றே மனம் கனத்து விட்டது நண்பரே...

    இப்படி வாழ்பவர்கள் நிறைய மனிதர்கள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நடந்த நிகழ்ச்சிதான்.

      நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு
  2. இப்படி பல வாழ்க்கைப் பாடங்கள் நம் கண் முன்னர்... வாழ்க்கைப் பாடம் தரும் நிகழ்வுகள். நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு