பக்கங்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2019

எங்கும் இருள்! கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம்!

பிறந்த ஊரில் பிழைக்க வழி இல்லாததால், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மும்பை சென்றவன் கந்தசாமி. அப்போது அவனுக்கு வயது இருபது.

விடுதிகளில் 'ரூம் பாய்', உணவு விடுதிகளில் 'சப்ளையர்' என்று கிடைத்த வேலைகளைச் செய்து, வந்த வருவாயில் கொஞ்சம் சேமித்து, ஒரு 'தேனீர்க் கடை' நடத்தி இரவு பகலாய் உழைத்ததில் ஒரு நடுத்தர உணவு விடுதியின் உரிமையாளன் ஆனவன் கந்தசாமி. தாராவியில் அறிமுகமான ஒரு தமிழ்க் குடும்பத்துப் பெண்ணை மணந்துகொண்டு குடும்பியாகவும் ஆனான். வாழ்க்கை ஓடியது.

பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை மனதில் துளிர்விட,  நான்கு நாட்கள் மனைவியிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் பிறந்த ஊர் வந்து சேர்ந்தான்.

வந்த சில நாட்களிலேயே 'ஏன் வந்தோம்?' என்றாகிவிட்டது.

அப்போது ஏழைகளாக இருந்தவர்களில் பலர் இப்போதும் ஏழைகளாகவே இருந்தார்கள்; அவர்களில் சிலர் 'பரம ஏழை'களாக மாறியிருந்தார்கள். 

ஆனால், விதிவிலக்காக, அப்போது லட்சாதிபதியாக இருந்து 'கந்துவட்டி' கலியமூர்த்தி இப்போது பல கோடிகளுக்கு அதிபதி ஆகியிருந்தான். அப்போதைய எம்.எல்.ஏ.விடம் அடியாளாக இருந்த 'குத்துவெட்டு' குமார் இப்போது எம்.எல்.ஏ. ஆகி, ஏகத்துக்குச் சொத்துச் சேர்த்திருந்தான். அன்று, கள்ளச் சாராயம் காய்ச்சுவதைச் சிறுதொழிலாகச் செய்துகொண்டிருந்த மாரிமுத்து இப்போது பெரியதொரு சாராய சாம்ராஜ்யத்துக்கே அதிபதியாக இருந்தான்.

வாழ்க்கை வெறுத்துப்போனது கந்தசாமிக்கு. மும்பை திரும்பிட நினைத்து ஊர்க்கோடியிலிருந்த பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான்.

அவனைக் கடந்துசென்ற ஒரு கார் வேகம் தணிந்து நின்றது. ''கந்தசாமி, நல்லா இருக்கியா?'' என்று விசாரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கி வந்தார் நல்லதம்பி; அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உதவப்போய் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடியவர்; காவல்துறை விசாரணை, நீதிமன்ற வழக்கு என்று நிறையக் கடன்பட்டவர்.

''அய்யா, நான் நல்ல இருக்கேன். நீங்க?'' என்று பரிவுடன் கேட்டான் கந்தசாமி.

''இருந்த கொஞ்சம் நிலத்தையும் வித்துக் கடனை அடைச்சேன். மீதியிருந்த பணத்தோடு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன். கடுமையா உழைச்சதில் நல்ல வருமானம் வருது'' என்றார் நல்லதம்பி; கந்தசாமியுடன் பேருந்து நிலையம் சென்று அவனை வழியனுப்பி வைத்தார்.

கொஞ்சமாய் மன பாரம் இறங்கிய நிலையில் தன் பயணத்தைத் தொடர்ந்தான் கந்தசாமி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------






4 கருத்துகள்:

  1. வெளிச்சமும், இருளும் அவரவர் போகும் பாதையை சேர்ந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவான வருகைக்கும் தரமான கருத்துரைக்கும் நிறைவான நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. மனமுவந்த பாராட்டுரைக்கு மிக்க நன்றி நண்பர் வெங்கட்.

      நீக்கு