செவ்வாய், 21 மே, 2019

தமிழகக் காங்கிரசின் கண்டிக்கத் தக்க 'சண்டியாகம்'!!!

'சண்டி' என்பது, தீய சக்திகளை அழிக்க வல்ல 'சண்டி தேவி' என்னும் பெண் தெய்வத்தைக் குறிக்கும். இந்த யாகத்தை ஏழு பிராமணர்கள் இணைந்து செய்வார்களாம். இந்தவொரு யாகம் இன்று தமிழகக் காங்கிரசுக் கமிட்டி['கட்சி'ன்னு மாத்துங்கய்யா] சார்பாக இன்று சென்னையில் தொடங்குகிறதாம்[இந்து தமிழ் 21.05.2019].

யாகம் செய்வது நினைத்த காரியம் கைகூடுவதற்காக. இந்தச் சண்டி யாகம் எதற்காகச் செய்யப்படுகிறதாம்?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்காக என்கிறது நாளிதழ்ச் செய்தி.
யாகம் செய்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றால் தேர்தல் வரும்வரை காத்திருந்திருக்க வேண்டாமே?!  காங்கிரசார் தேர்தலை எதிர்கொண்டது ஏன்?

இது யாகத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பெரிய பெரிய தலைவர்களான கே.எஸ்.அழகிரி, க.திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்இளங்கோவன், கே.வீ.தங்கபாலு போன்றோருக்குத் தெரியாமல் போனது  ஆச்சரியம்.

இதனினும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்.....

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் 'முடிவு'ம் இருப்பில் இருக்கிறது. எண்ணி முடித்தால் நாட்டை ஆளப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுவதால் எந்தவொரு கட்சியாலும் அறிவிக்கப்படவிருக்கும் முடிவை மாற்ற இயலாது...மாற்றவே இயலாது என்பது உறுதி.

உண்மை இதுவாக இருக்கையில், தமிழகக் காங்கிரஸ் கட்சி சண்டியாகம் நடத்துவது ஏன்?

இவர்களின் யாகத்தை மெச்சி சண்டி தேவியானவள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட  முடிவை மாற்றுவார் என்று நம்புகிறார்களா? அதாவது, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் போடப்பட்ட வாக்குகளையெல்லாம் காங்கிரசுக்கான வாக்குகளாகச் சண்டி தேவி மாற்றுவாரா?

ஆம். மாற்றுவார் என்பது தமிழகக் காங்கிரசாரின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை அறிவுபூர்வமானதா, மூடநம்பிக்கை சார்ந்ததா?

மூடநம்பிக்கை சார்ந்ததே என்பதில் எள்முனையளவும் ஐயத்திற்கிடமில்லை.

ஒருவரல்ல, இருவரல்ல, தமிழகக் காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் அத்தனை பேருமே மிகப் பெரும் மூடநம்பிக்கையாளர்களாக இருப்பதை எண்ணி மிக மிக மிக வருந்துகிறோம்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக