திங்கள், 6 மே, 2019

நான்.....நானேதான்!!!


இந்தக் கதையில் வரும் 'நான்' நான்தான். 'மனைவி'? என் மனைவிதான். பிச்சைக்காரன், பிச்சைக்காரி? என்னிடம் பிச்சை கேட்டவர்கள்தான். 

நீங்களும் என்னைப் போன்றவர்தானா? தெரிந்துகொள்ளப் படியுங்கள்.

நான் என் மனைவியுடன் பேருந்துக்குக் காத்திருந்தபோது.....

“ஐயா தர்மம் பண்ணுங்க.” -ஒரு பிச்சைக்காரன் கை நீட்டினான்.

சட்டைப் பையை மேம்போக்காகத் தடவிப் பார்த்துவிட்டு, “சில்லரை இல்லப்பா” என்றேன்.

அவன் நகர்ந்ததும், “சட்டைப் பையில் சில்லரை இருக்குதானே? -கேட்டாள் என்னவள்.

“இருக்கு.  உடம்பில் ஒரு குறையும் இல்ல. உழைச்சிப் பிழைக்கலாம். இவனுக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது.”

“போப்பான்னு சொல்லியிருந்தாப் போயிருப்பான். தேவையில்லாம ஒரு பொய் சொல்லணுமா என்ன?”

“இது பொது இடம்.  தர்ம சிந்தனை இல்லாத ஆளுன்னு பார்க்கிறவங்க நினைச்சிடக் கூடாதேங்கிற போலி கௌரவம்தான் இப்படிப் பொய் சொல்ல வைக்குது. இது நம்ம சமுதாயத்தின் பொதுச் சொத்து. இப்படி இன்னும் பல போலி கவுரவங்கள் நம்மை ஆட்டிப்படைக்குது. சுலபமா இதுகளிலிருந்து நாம் விடுபட்டுவிட முடியாது....."

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “ஐயா தர்மம் பண்ணுங்க” என்ற பெண்ணின் குரல்.

எதிரே கைநீட்டி நின்றுகொண்டிருந்தாள் ஒரு பிச்சைக்காரி.

“சில்லரை இல்ல, போம்மா.” -சட்டைப் பையைத் தடவிக்கொண்டே எதிரே வந்து நின்ற எங்களுக்கான பேருந்தை நோக்கி நடந்தேன். என் மனைவி பின்தொடர்ந்தாள். 
============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக