வியாழன், 8 ஆகஸ்ட், 2019

'அந்த’ ஆறு[7?] பேர் சாவுக்குக் காரணம் அத்தி வரதரா, புத்தி கெட்ட மனிதர்களா?!

காஞ்சிபுரம் அத்தி வரதரைத் தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை[இன்று மட்டும் 3,00,000] இந்நாள்வரை 40 லட்சங்களைக் கடந்திருக்கிறது. விளைந்த பயன்கள் என்ன என்று கேள்வி எழுப்பினால், மனப்பூர்வமாய்ச் சிந்தித்துப் பதில் சொல்ல எவரும் தயாராக இல்லை. 

எத்தனை பேருக்குப் பீடித்திருந்த பிணி நீங்கியது? யாருக்கெல்லாம் வருத்திய வறுமை ஒழிந்தது? எவருக்கெல்லாம் சுமந்து திரிந்த ஆசைகள் நிறைவேறின?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்ல மட்டும் பக்தகோடிகளில் எவரும் தயாராக இல்லை. ஆனால், கேள்வி கேட்பவனை மட்டும் ஆளாளுக்கு மனம்போனபடியெல்லாம் சாடுவார்கள்.

உண்மையில், வரதர் வழிபாட்டால் நன்மைகளுக்குப் பதிலாகத் தீமைகள்தான் விளைகிறது. இதற்கு, அத்தி வரதரைத் தரிசிக்கச் சென்ற பக்தர்களில் ஆறு பேர்[மிகச் சரியான எண்ணிக்கை தெரியவில்லை] உயிரிழந்த நிகழ்வு அசைக்க முடியாத ஆதாரம்.

நெரிசலில் சிக்கி ஆறு பேரும் உயிரிழந்தார்கள். இவர்கள் சாவுக்கும் வரதர் காரணம் இல்லை[பாவ புண்ணியம் அல்லது விதி!!!]என்பார்கள். அவர் காரணம் இல்லை என்றால், ‘இன்னும் 40 ஆண்டுகளுக்கு அவரைத் தரிசனம் பண்ண முடியாது’ என்று பரப்புரை செய்த ஊடகப் புளுகர்கள் காரணம்; மனிதாபிமானம் மறந்து காலமெல்லாம் கற்பனைக் கடவுள்களைக் கொண்டாடித் திரியும்[கடவுள் ஒருவரே; அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்னும் கருத்தாக்கம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது] புத்தி கெட்ட மனிதர்கள் காரணம்.

அத்தி வரதர் என்றொரு கடவுள் இருப்பது உண்மையானால்.....

அத்தி மரத்தில் செய்த சிலையில் மட்டும்தான் அவர் குடிகொண்டிருக்கிறாரா?  கோயிலில் இல்லாமல் குளத்தில் படுத்துக் கிடக்கும்போது வழிபட்டால் அருள்புரிய மாட்டாரா? குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கோயிலில் தரிசனம் தந்துவிட்டு, மற்ற நாட்களில் நீருக்குள் ஊறிக் கிடக்கிறாரே ஏன்?

என்றிப்படியெல்லாம் கேள்விகள் கேட்கவிடாமல் மக்களின் சிந்திக்கும் அறிவை மழுங்கடிப்பவர்கள் கோயில் நிர்வாகிகளும் ஊடகக்காரர்களும்தான்.

‘அந்த’ ஆறு பேரைச் சாகடித்த பழியைச் சுமக்க வேண்டியவர்கள் இவர்கள்தான்!
வரதர் தரிசனம் உயிரிழந்த பக்தர்கள் க்கான பட முடிவு
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக