பக்கங்கள்

சனி, 17 ஆகஸ்ட், 2019

அத்திவரதரின் அபார சாதனை!?!?!

‘அத்திவரதர் தரிசனம் நிறைவுற்றது. ஒரு கோடி பக்தர்கள் அவரைத் தரிசிக்கும் பேறு பெற்றார்கள்’

‘அத்திவரதர் தன்வசம் ஒரு கோடிப் பக்தர்களைக் கவர்ந்திழுத்துச் சாதனை நிகழ்த்தினார்’

‘இது, இன்றளவும் நிகழ்ந்திராத அதிசயம்’

-இன்று அதிகாலையிலிருந்து, இவ்வகையிலான செய்திகளை ஒளி/ஒலி பரப்பி ஆன்மிகத் தொண்டு புரிந்துகொண்டிருக்கின்றன அனைத்துத் தொலைக்காட்சி ஊடகங்களும்.

அனந்தசரஸ் குளத்துக்குள் கிடத்தப்பட்டிருந்த  சிலையைத் தூக்கிவந்து கோயிலில் படுக்க வைத்து..... 

‘வரதர் எழுந்தருளினார்; அனந்த சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார்; அப்புறம் நின்ற கோலத்தில் காட்சி தந்து கடைத்தேற்றுவார்’

‘இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இன்னும் 40 ஆண்டுகளுக்குத் தரிசனம் செய்ய இயலாது’

‘வரதரைத் தரிசித்தால் அனைத்துத் துன்பங்களும் அகலும்; சொர்க்கத்தில் ஓரிடம் நிச்சயம்’ என்றிவ்வாறு நாளெல்லாம் இடையறாது செய்தி வெளியிட்டு நம்பாதவர்களையும் நம்ப வைத்து ஒரு கோடிப் பக்தர்களின் வரவுக்குக் காரணமாயிருந்தவை[பிரபலங்களும் போட்டிபோட்டுக்கொண்டு தரிசித்துத் தம் பங்கைச் செலுத்தியிருக்கிறார்கள்] ஊடகங்களே.

இந்தச் சாதனை ஊடகங்களுக்கானது. இந்த உண்மைக்கு மாறாக, ஊடகங்கள் ‘அத்திவரதர் சாதித்தார்’ என்று செய்தி வெளியிடுகின்றன.

“தொலைக்காட்சி ஊடகங்கள் உருவாகாத காலக்கட்டத்தில், நாளிதழ்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்த தருணத்தில் லட்சக்கணக்கானவர் வரதரைத் தரிசித்திருப்பார்களா?”

“வரதரே பக்தகோடிகளுக்குத் தன் வரவைக் கனவின் மூலமோ அசரீரியாகவோ அறிவித்திருப்பாரா?”

“வரதர் 40 ஆண்டுகள் இடையறாது ஏன் நீரில் மூழ்கிக்கிடக்கிறார்?” என்றிவ்வாறான கேள்விகளை[இன்னும் பல கேள்விகள் உள்ளன]க் கேட்கத் துணிச்சல் மிக்க புத்திசாலிகள் இல்லாமல் போன சூழலில்.....

போட்டிபோட்டுக்கொண்டு, பெரும்பான்மை மக்களுக்குள்ள கொஞ்சம் பகுத்தறிவையும் சீரழித்துச் சிதைக்கும் ஊடகக்காரர்களே, உங்களின் ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துப் பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்களே, இது நியாயமா?

மனசாட்சியே இல்லாதவர்களா நீங்கள்?!

தமிழ் ஊடகங்கள் க்கான பட முடிவு

தமிழ் நாளிதழ்கள் க்கான பட முடிவு
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக