வியாழன், 22 ஆகஸ்ட், 2019

‘கடவுள்’.....ஒரு தேடல்!

இது ஒரு ‘ஜென்’ கதை.


#வயதான ஜென் குரு அவர்.

தனக்குப் பிறகு ஆசிரமத்தைப் பொறுப்பேற்று நடத்துவதற்கான தகுதியுள்ள நபரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.

தன் சீடர்களில் சிறந்த மூவரை அழைத்தார்; “எனக்கு வயதாகிவிட்டது. இந்த ஆசிரமத்தைப் பொறுப்பேற்று நடத்த உங்கள் மூவரில் ஒருவரைத் தேர்வு செய்ய விரும்புகிறேன். நீங்கள் மூவரும் மனம்போன போக்கில் எங்குவேண்டுமானாலும் பயணம் செய்யுங்கள். பயணத்துக்கிடையே இடைவிடாமல் கடவுளைப் பற்றிச் சிந்தியுங்கள். பயணம் முடிந்து ஆசிரமத்திற்குத் திரும்பியதும் கடவுள் குறித்து நீங்கள் உணர்ந்தறிந்த உண்மையை என்னிடம் சொல்லுங்கள்” என்று கூறி மூவருக்கும் ஆசி கூறி வழியனுப்பி வைத்தார்.

ஓராண்டு நிறைவு பெற்றதும் சீடர்கள் மூவரும் ஆசிரமம் திரும்பினார்கள்.

“கடவுள் பற்றி நீங்கள் சிந்தித்தறிந்த உண்மைகளைச் சொல்லுங்கள்” என்றார் குரு.

“குருவே, கடவுளுக்கு உருவமில்லை. ஆயினும், அனைத்துப் பொருள்களிலும் உயிர்களிலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார்” என்றான் ஒரு சீடன்.

“கடவுளுக்கு உருவம் இருக்கிறது. அவரை ஒளி வடிவில் காணலாம். நாம் வடித்தெடுக்கும் சிலை வடிவிலும் கண்டு வணங்கலாம்” என்றான் இரண்டாவது சீடன்.

மூன்றாவது சீடனோ.....

“குருவே, எத்தனை சிந்தித்தும் என் மனதாலோ அறிவாலோ கடவுள் என்று ஒருவர் இருப்பதை என்னால் உணரவோ நம்பவோ இயலவில்லை” என்றான்.

குருவின் முகத்தில் மலர்ச்சி பரவியது.

“உன்னுடைய முடிவே என்னுடையதும். இந்த ஆசிரமத்தில் முற்றும் துறந்த ஒரு துறவியாக இத்தனை காலமும் வாழ்ந்து சிந்தித்த என்னாலும் கடவுளை அறியவோ உணரவோ இயலவில்லை. பொருள்கள், உயிர்கள் என அனைத்தும் உருவாகக் காரணம் எது என்பது எவராலும் அறியப்படவில்லை. அது விடுவிக்க இயலாத ஒரு புதிர். இனி இந்த ஆசிரமத்தை நீயே பொறுப்பேற்று நடத்து” என்றார் குரு#
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கதை... வறுமை, நோய், பகைமை போன்றவற்றால் அளவிடற்கரிய துன்பங்களுக்குள்ளாகித் தவிக்கும் மனிதர்களைப் புறக்கணித்துக் கடவுள், கோயில், கும்பாபிசேகம், திருவிழா என்று அலையும் ஆன்மிகப் பித்தர்களுக்குச் சமர்ப்பணம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ஞானம் தரும் ஜென் கதைகள்’ என்னும் நூலில்[கிளாசிக் பப்ளிகேசன்ஸ், பிராட்வே, சென்ன-600,108] இடம்பெற்ற ஒரு கதையைத் தழுவி எழுதப்பட்டது இக்கதை. நூலாசிரியர் அம்பிகா சிவம் அவர்களுக்கு என் நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக