பக்கங்கள்

வெள்ளி, 11 அக்டோபர், 2019

விதியும் கடவுளும் வில்லங்க மனிதர்களும்!!!

இந்தப் பழைய['கடவுளின் கடவுள்' என்னும் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது] பதிவைப் புத்தம் புதிய பதிவாக நினைத்து வாசித்து மண்டை காய்ந்து வதைபட வேண்டும் என்பது உங்களின் நிகழ்கால விதி?!?!

நாம்  விரும்பாதவை, அல்லது எவராலும் விரும்பத்தகாதவை நடந்தால், அவற்றிற்கு  ‘விதி’யைக் காரணம்  காட்டுகிறோம். தீராத நோயின் தாக்குதல்; எதிர்பாராத சாவு; காதல் தோல்வி என்றிப்படி நிறையச் சொல்லலாம்.

நோய்நொடி அண்டாமல் முழு உடல்நலத்துடன் வாழவே நாம் விரும்புகிறோம். கொடிய நோய்கள் நம்மைத் தாக்கும்போது விதியை நொந்துகொள்கிறோம். நம்மைப் படைத்து மண்ணில் வாழப் பணித்தவர் கடவுள் எனின், நோய்களையும் படைத்து[படைப்பாளி அவர் மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்க] நம் மீது தாக்குதல் தொடுப்பவர்  அவரே என்பதால் நம் வாழ்வில் ‘விதி’  புகுந்தது எப்படி?

காதல், காமம், ஆசை, பாசம், நேசம், பொறாமை என்று விதம் விதமான உணர்ச்சிகளுடன் நம்மை நிலவுலகில் உலவவிட்டவரும் கடவுளே. உணர்ச்சிகளுடன் போராடுவதோடு உணர்ச்சியுள்ள மனிதர்களுடனும் போராடுகிறோம். போராட்டத்தில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க இயலாதவை. வெற்றியைத் தழுவும்போது கடவுளைப் போற்றுவதும் தோற்கும்போது  விதியைக் காரணம் காட்டுவதும் அறியாமையின் உச்சமல்லவா?

நிலநடுக்கங்களையும் சுனாமிகளையும், பஞ்சம், தீராத வறுமை போன்றவற்றையும் கோரத்தாண்டவம் ஆடவிட்டுப் பல்லாயிரக் கணக்கில் உயிர்களைச் சாகடிப்பவர் கடவுளாக  இருக்கையில், கண்ணுக்குத் தெரியாத விதியைக் காரணம் ஆக்குவது விந்தையிலும் விந்தையல்லவா!?

புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதற்கான அதிபுத்திசாலித்தனத்தை மனிதனுக்கு அள்ளி அள்ளி வழங்கியவர் கடவுள். இதன் விளைவு.....

வெடி விபத்து, வாகன விபத்து என்று வகை வகையான விபத்துகளில் சிக்கி, வகைதொகையின்றிச் செத்துத் தொலைக்கிறான் மனிதன். விபத்துகளுக்கு மூலகாரணமான கடவுளைப் புறந்தள்ளி, விதியே விபத்துகளுக்குக் காரணம் என்பது அறிவுடைமை அல்லவே!

“நான் மனதாலும் பிறருக்குக் கெடுதல் நினைத்ததில்லை. எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்? எல்லாம் என் தலைவிதி...விதி” என்று நாளும் புலம்புவோர் நம்மில் கணக்கிலடங்காதவர். விதியை வகுத்தவர் கடவுள்[என்று சொல்லப்படுபவர்]  என்கிறார்கள். எல்லாம் கடவுளே என்னும்போது, ‘விதி’ என்ற ஒன்று எதற்கு?

“அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாயிற்றே, அவனா எனக்குத் துரோகம் செய்தான்? நம்ப முடியல. எல்லாம் விதியின் விளையாட்டு” என்று மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கலங்கும்  மாந்தர் நம்மில் மிகப்பலர். கடவுளின் படைப்பில், ரொம்ப ரொம்ப நல்லவனும் இல்லை; ரொம்ப ரொம்பக் கெட்டவனும் இல்லை என்பதை மறந்துவிட்டு, இல்லாத விதியின் மீது பழி போடுவது தவறல்லவா? இவ்வாறாக.....

நல்லவை நடந்தால் கடவுளைத் துதி பாடுவதும், அல்லவை விளைந்தால் அவரை நிந்திக்க மறுத்து, சாத்தானைச் சாடுவதையும், விதியை நொந்துகொள்வதையும் வழக்கம் ஆக்கிக்கொண்டார்கள் மனிதர்கள். 

இது எத்தனை பெரிய தவறு?

இந்தத் தவற்றை இவர்கள் தெரிந்தே செய்கிறார்களா, செய்யும்படிக் கடவுள் தூண்டுகிறாரா?!

பதில் தெரிந்தவர் யார்?
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக