வெள்ளி, 6 டிசம்பர், 2019

நித்தியானந்தா குற்றவாளியல்ல! அதிபுத்திசாலி!!

நடிகை ரஞ்சிதா புகழ் நித்தியானந்தாவின் கடந்த கால நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரிந்ததே. அண்மைக்கால அவரின் செயல்பாடுகள் நம்மைப் பிரமிக்க வைப்பவை.

திருவண்ணாமலையில்,  காவி உடை உடுத்து, ருத்ராட்ச மாலைகள் சூடி, ஒரு சின்னஞ்சிறிய ஆசிரமத்தில் குடியேறி, 'பரமஹம்ஸ நித்தியானந்த சுவாமிகள்’ என்று தன்னை அறிமுகப்படுத்தி, மிகக் குறுகிய அவகாசத்தில் கடவுளின் அவதாரம் என்று மிக மிகப் பெரும்பான்மை மக்களை நம்பச் செய்த இந்த நித்தி அதிபுத்திசாலி என்பதில் எள்முனை அளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

நடிகையுடன் சல்லாபித்ததற்கான ஆதாரம் வெளியானபோதே, போலிச் சாமியார் வேடம் புனைந்து மக்களை ஏமாற்றியதற்காக இந்த ஆள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை செய்யத் தவறியது மத்திய மாநில அரசுகள் செய்த குற்றம்.

பருவ வயதுப் பெண்கள் சபரிமலைக் கோயிலில் இன்றளவும் அனுமதிக்கப்படாத நிலையில், அழகழகான பெண்கள் இந்த ஆளின் ஆசிரமத்தில் காலவரையறையின்றிப் பக்தைகள் என்னும் பெயரில் தங்கியிருப்பதை அரசுகள் அனுமதித்தது புரியாத புதிராகும். அதன் விளைவு....

இந்த ஆளுக்குச் சொந்தமான ஆசிரமங்களில் இளம்பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவது நிகழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக, குஜராத் மாநிலத்திலுள்ள ஆசிரமத்தில் 2 சிறுமிகள் மாயமானது நாடெங்கும் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது.

குஜராத் மாநில அரசு விழித்துக்கொண்டதன் விளைவாக, இந்த ஆள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டது. நித்தியோ அயல்நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாகச் செய்தி.

தென் அமெரிக்கப் பகுதியில் ஈக்வடார் நாட்டுக்கு மிக அருகில் உள்ள ஒரு தீவைப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து விலைக்கு வாங்கிய நித்தி, அந்தத் தீவின் மன்னராக முடிசூடிக்கொண்டுள்ளாராம். இது இப்போதைய செய்தி.

இந்திய அரசு தன்னைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, தனக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு, கைலாசம்[தீவுக்கு இந்த ஆள் சூட்டிய பெயர்] என்னும் பெயர் கொண்ட தன் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் ஐ.நா. சபையிடம் மனு அளித்துள்ளாராம்[மாலை மலர், 06.12.2019].

இந்தியாவில் உள்ள சில ஆன்மிக அமைப்புகள் தன்னைக் கொல்வதற்கு 100 முறை முயன்றதாகவும். பரமசிவனும் பார்வதியுமே தன்னைக் காத்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறாராம் நித்தி. செய்தி வெளியிட்ட மாலை மலர் நாளிதழ்.....

‘ஒரு தீவையே விலை கொடுத்து வாங்கும் அளவுக்குக் கோடானுகோடி ரூபாயை இவரால் எப்படிச் சம்பாதிக்க முடிந்தது?’ என்ற கேள்வியையும் முன்வத்திருக்கிறது. கேள்விக்குப் பதில் தரவில்லை.

பதிலை நாம் சொல்கிறோம். “நித்தி கோடானுகோடி ரூபாய்களைத் திருடவில்லை; கொள்ளையடிக்கவும் இல்லை. அதை அவருக்கு வாரி வாரி வழங்கியவர்கள், நித்தியின் விதம் விதமான போலி வேடங்களிலும் அதிபுத்திசாலித்தனமான பேச்சிலும் மயங்கிய முட்டாள் மனிதர்கள்தான்!
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக