புதன், 22 ஜனவரி, 2020

தெரியாதய்யா...தெரியாது, தெரியாது!!!

‘கடவுள் தோன்றவில்லை. அவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர்[ஆதியும்
அந்தமும் அற்றவர்]; என்றும் இருப்பவர்’ என்ற கருத்து நிலவுவதை நாம் அறிவோம். இப்போதைக்கு அவர் ‘தோன்றியவர்’ என்றே வைத்துக் கொள்வோம். [‘அது என்ன வைத்துக் கொள்வது?’ என்ற  கேள்வியெல்லாம் இங்கு வேண்டாம்]

சில உண்மைகளைக் கண்டறிய இம்மாதிரி, தற்காலிகமான ஒரு நிலையை ஏற்பது அவசியமாகிறது.

கடவுள் எப்போது தோன்றினார்?
எவ்வளவு ‘காலத்துக்கு’ முன்னால்?

[இப்போதைய ‘ஆண்டுமுறை’ என்பது ஒருவர் அல்லது ஒன்றின் தோற்றத்தைத் தொடக்கமாகக் கொண்டு, மனிதன் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்டது.   மணி, நாள், மாதம் போன்றவை, சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டவை.]

‘காலம்’ என்னும் மகா...மகா...மகா...மகாப் பெரும் வெள்ளத்தோடு ஒப்பிட் டால், மனிதனின் இந்த ஆண்டுக் கணக்கு சிறு கடுகு! கடுகுக்குள் ஒரு துணுக்கு. துணுக்குக்குள் துணுக்கு. அதற்குள்ளும் சிறு துணுக்கு.

உண்மையில் ஆண்டு என்ற ஒன்று இல்லவே இல்லைபொருள்களின் இயக்கங்களை வைத்துத்தான் காலம் வரையறுக்கப் படுகிறது.

வெளியில் எதுவுமே இல்லை என்ற ஒரு நிலையை அனுமானம் செய்து பாருங்கள். [அப்படி ஒரு நிலை சாத்தியமா என்பது மிக ஆழமான, கால வரையற்ற ஆய்வுக்கு உட்பட்டது]. எதுவுமே இல்லை; அதாவது எங்கும் எப்பொருளும் இல்லை எந்தவித இயக்கமும் இல்லை என்னும் போது காலம் என்ற ஒன்றைக் கற்பனை செய்வதும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

திசையும் அப்படித்தான். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்மேற்கு.... எனப்படும் திசைகள் எல்லாம், சூரியனை மையமாகக் கொண்டு மனிதனே ஏற்படுத்திக் கொண்டவை.

சூரியன் இல்லையென்றால் இவையெல்லாம் இல்லை.

நம் ஆய்வுக்கு இந்தத் துக்கடா ஆண்டுக் கணக்கெல்லாம் உதவாது.

ஒரு பெரிய ‘கால அளவு’ தேவை. சூரியன் ஒரு முறை தோன்றி மறைவதற்கான கால இடைவெளியை, ஒரு ‘சூரிய ஆண்டு’ எனக் கொள்வோம்.

கடவுள் எத்தனை சூரிய ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினார்?

நூறு கோடி சூரிய ஆண்டுகளா?.....ஆயிரம் கோடியா?..... லட்சம் கோடி சூரிய ஆண்டுகளா?..... இன்னும் கோடானுகோடியோ கோடி சூரிய ஆண்டுகளா?......என்று மனிதன் தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக்கொண்டே இருந்தாலும் விடை கிட்டாதுதானே?!

அன்பு கொண்டு இந்தக் கால அளவீட்டு முறையைச் சிறுபிள்ளைத்தனம் என்று கருத வேண்டாம். ஆக, ‘காலம்’ என்பதும், ‘வெளி’யின் பரப்பைப் போலவே அளந்து அறிய முடியாத ஒன்று என்பது தெளிவாகிறது அல்லவா?

அதாவது, ‘காலம்’ என்பதன் ‘ஆரம்பம்’ அல்லது ‘முடிவு’ பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

இந்தத் ‘தெரியாது’ என்பதை ஒப்புக் கொள்வதற்குப் ’பெருந்தன்மை’ வேண்டும்.

இது நம் மதவாதிகளுக்கும் ஆன்மிகப் பெரியோர்களுக்கும் இருந்திருந்தால் கடவுள் என்ற ஒருவர் கற்பனையில் உதித்திருக்க மாட்டார். கணக்கற்றகலவரங்களுக்கும் உயிப்பலிகளுக்கும் காரணமான மதங்கள் தோன்றியிருக்கவே மாட்டா.
========================================================================
புதுப்பிக்கப்பட்ட 2011ஆம் ஆண்டுப் பதிவு.