‘துக்ளக்’ பத்திரிகை விழாவில், நடிகர் ரஜினிகாந்து, 1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார் நடத்திய கடவுள் எதிர்ப்பு ஊர்வலத்தில், கடவுள்களாகக் கருதப்படும் ராமன் சீதை முதலானவர்களின் பிறந்தமேனி உருவச்சிலைகள்[படங்களும்?] செருப்பால் அடிக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
தி.க.வினர் முதலான கடவுள் மறுப்புக் கொள்கையுடைய அணியினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றங்களிலும் ரஜினிக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
ரஜினிக்கு ஆதரவாகப் பா.ஜ.கட்சியினரும் ஆன்மிகவாதிகள் சிலரும் தத்தம் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குரல் எழுப்புவோரும் உள்ளனர்.
பெரியார் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை, மக்களிடையே ‘கடவுள் இல்லை’ என்னும் கருத்தைப் பரப்புவதற்காகச் செலவிட்டவர். “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; நம்புகிறவன் அயோக்கியன்...” என்றெல்லாம் அஞ்சாமல் ஆன்மிகவாதிகளையும் பக்தர்களையும் சாடியவர். ரஜினி நினைவுகூர்ந்தாற்போல கடவுள்களை அவமானப்படுத்தியும் இருக்கலாம்.
கடவுள்கள் குறித்த ஆபாசக் கதைகளைப் பரப்புரை செய்ததும் அவர்களின் சிலைகளைச் செருப்பால் அடித்ததும், ‘கடவுள் இல்லை’ என்பதையும், அவரை வழிபடுவதால் எந்தவிதப் பின்விளைவுகளும் இல்லை என்பதையும் மக்களுக்கு உணர்த்துவதற்காகவே.
அவர் மறைந்து மிகப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் அன்று பரப்புரை செய்த கருத்துகளையும், சிலைகளை உடைத்தல் போன்ற அவரின் செயல்பாடுகளையும் மக்களில் பெரும்பாலோர் மறந்திருக்கக்கூடும்.
நடிகர் ரஜினியின் துக்ளக் விழாப் பேச்சு இப்போது நம் மக்களுக்கு அவற்றை நினைவுபடுத்தியிருக்கிறது. எனவே, ரஜினியின் பேச்சுக்குக் கடவுள் மறுப்பாளர்கள் என்றில்லை; மூடநம்பிக்கைகளை ஒழிக்க விரும்புகிற அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
நன்றி ரஜினி!
========================================================================
========================================================================