சனி, 1 பிப்ரவரி, 2020

குடமுழுக்கா, கும்பாபிஷேகமா?...சமரசம் கூடவே கூடாது!!

வெள்ளைக்காரர்கள் 1947 ஆம் ஆண்டில் நமக்குச் சுதந்திரம் தந்துவிட்டுப் போனார்கள். அவர்கள் தந்தது முழுச் சுதந்திரம். இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் உரிமை.

இவ்வாறில்லாமல், “நாங்கள் முன்னூறு ஆண்டுகள் போல உங்களை ஆண்டோம். இப்போது, ஆளும் உரிமையை 100% உங்களிடம் தந்துவிட்டு நாங்கள் வெளியேறுவது முறையல்ல. நீங்களும் நாங்களுமாக இணைந்து இந்த நாட்டை ஆளலாம்” என்று சொல்லியிருந்தால் அதை நம்மவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்களா?

மாட்டார்கள் என்பதில் எள்முனையளவும் ஐயத்திற்கு இடமில்லை.

சங்க காலத்திற்குப் பின்னர், மிகப் பல நூற்றாண்டுகள் போதிய கல்வியறிவு இல்லாமலும், சிந்திக்கும் திறன் மிகக் குறைந்தும் தமிழர்கள் மூடர்களாய் வாழ்ந்த காலங்களில், மன்னர்களின்[பல்லவர் ஆட்சியில் காஞ்சியில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது நினைவுகூரத்தக்கது]. ஆதரவோடு ‘வந்தேறிகள்’ எனப்படுபவர்கள் தமிழகக் கோயில்களில் சமஸ்கிருதத்தை வழிபாட்டு மொழி ஆக்கினார்கள்.

அந்நிலை மாற வேண்டும்; தமிழ், வழிபாட்டு மொழியாக ஆக வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்கள் மிகப் பல ஆண்டுகளாகப் போராடினார்கள். தஞ்சைப் பெரிய கோயிலில் குடமுழுக்கு நிகழவிருக்கும் சூழலில் அந்தப் போராட்டம் தீவிரம் அடைந்தது. 

இது விவகாரத்தில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றக் கிளை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவின்படி, தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்வில் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சமமான முக்கியத்துவம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சமஸ்கிருதம் தேவ பாஷை; அதிர்வுகளைக் கொண்டது; அபூர்வ சக்தி அதிலிருந்து வெளியாகிறது’ என்று பன்னெடுங்காலமாகத் தமிழ் மனனர்களையும் தமிழ் மக்களையும்  மூடர்கள் ஆக்கினார்கள் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ் மன்னரால், தமிழர்களால்[உடல் உழைப்பும் தொழில்நுட்ப உதவியும் வழங்கிய தமிழர்கள்] தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கோயிலில் தமிழர்களின் தாய்மொழியாம் தமிழில்தான் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை தமிழர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.

கோரிக்கையை முற்றிலுமாய் ஏற்று, குடமுழுக்கு நிகழ்வில் தமிழ் மட்டுமே பயன்படுத்தப்படுவதற்கான ஏற்பாட்டைத் தமிழ்நாட்டு அரசு செய்திருத்தல் வேண்டும். பதிலாக.....

தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துருப்பது, நம்மை நாமே என்றில்லாமல், நம்மவரோடு வெள்ளையரும் இணைந்து நம்மை ஆளுதல் போன்றதாகும்.

சமஸ்கிருதம் அந்நியர் மொழி. தமிழுக்குச் சமமான முக்கியத்துவத்தை அதற்குத் தர வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.

இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாகத் தான் எடுத்துள்ள முடிவை மாற்றி, குடமுழுக்கு நிகழ்வு தமிழில் மட்டுமே நிகழ்த்தப்படும் என்று அறிவிப்பதே தமிழர்களை ஆளும் தமிழர்களான ஆட்சியாளர்களின் கடமை ஆகும்.
========================================================================