ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

சதையும் கதையும் - 2: ‘ஓவியனின் கண்ணீரில் காவியம்!’

சற்றே நீண்ட சிறுகதை. வாசித்து முடிக்கக் கொஞ்சம் பொறுமை தேவை. நீங்கள் கதைப் பிரியராக... வெறியராக இருந்தால் தயங்காமல் கதையில் நுழையலாம்!

யதுக்கு ஒவ்வாத செயலில்தான் நான் ஈடுபட்டிருந்தேன். ஒரு பெரிய அறையின் குறுக்கே தடுப்பாக வைக்கப்பட்டிருந்த ‘கார்டு போர்டு’ அட்டையில் இடம்பெற்றிருந்த சிறிய துவாரத்தில் விழியைப் பொருத்தி அடுத்த அறையில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

புத்தம் புதிய இளம் ஜோடி. படுக்கையில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அவள். தூரிகையும் கையுமாக நின்றிருந்தான் அவன். அருகே ஓவியப் பலகையும் வண்ணக் கலவையும் இருந்தன.

அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவன் திடீரென அவளின் கரம் ஒன்றைப் பற்றி எடுத்து முத்தமாரி பொழிந்துவிட்டு, “எழுந்திருடா. உனக்குத்தான் மல்லிகைப்பூன்னா கொள்ளை ஆசையாச்சே. வாங்கிவந்திருக்கேன். எழுந்து நின்னு வெச்சிக்கோடா” என்று கொஞ்சுமொழி பேசிக் குழைந்தான்.

அவள்...அந்த அழகி சிணுங்கினாள். “ஊஹூம்...தலை ரொம் வலிக்குது. இப்போ வேண்டாங்க. வேணுன்னா நீங்களே வெச்சிவுடுங்க” என்று படுத்த கோலத்திலேயே பின்மண்டையைக் காட்டினாள்.

அவன் முகம் சூம்பியது. “என் ரசனையை நீ புரிஞ்சிக்கவே மாட்டியா? எழுந்து நின்னு இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, தலையைச் சாய்ச்சிகிட்டு மல்லிகைச் சரத்தைக் கூந்தலில் சொருகிக்கொள்ளும் காட்சியிருக்கே, அப்பப்பா, அஜந்தா ஓவியம் தோத்துடும். ஒரே ஒரு படம் மட்டும் வரைஞ்சிக்கிறேன். எழுந்திருடா. பிளீஸ்.....” என்று கெஞ்சியவாறு தூரிகையை ஒரு புறம் வைத்துவிட்டு அவளின் இடையில் கைகளை நுழைத்துக் கிச்சுக் கிச்சு மூட்டினான்.

அவனுடைய குழைவான பேச்சும் செய்கைகளும் என் இளைமைக்கால அனுபவங்களை நினைவுக்குக் கொண்டுவந்தன.

செல்லமாக ஆண்பிள்ளைகளை அழைப்பது போல, “வாடா..போடா” என்றுதான் நானும் என் மனைவியை அழைப்பேன். இவனைப் போல்தான் நானும் அவளைப் படங்கள் வரை விதம் விதமாகப் ‘போஸ்’ கொடுக்கச் சொல்வேன். ஓவியக் கலைஞனான என் தொல்லை பொறுக்காமல் அவள் மூக்கால் அழும்போது அவளைச் சிரிக்க வைக்க இப்படித்தான் கிச்சுக் கிச்சு மூட்டுவேன்.

சுமதி, என் மனைவியும் இவளைப் போலவே பேரழகிதான். எளிதில் என் வேண்டுகோள்களுக்குச் செவிசாய்க்க மாட்டாள். “இந்த உணர்ச்சியை வெளிப்படுத்திச் சிரி; அந்தப் பாவத்தைக் காட்டிப் புன்னகை செய்” என்றெல்லாம் நான் படுத்தும் பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒப்பாரி வைப்பாள். உன்னதப் படைப்புகளுக்காக அவளின் கால்களைப் பிடித்துக் கெஞ்சுவதற்குக்கூட நான் தயங்கியதில்லை.

இதற்கு மேலும் பழைய சம்பவங்களில் என் சிந்தையைப் படரவிட என் மனம் தயங்கியது. காரணம், கலைக்காக வாழ்வை அர்ப்பணித்துவிட்டதாக பெருமிதத்துடன் வாழ்ந்ததன் விளைவு, குடும்பத்தைத் துறந்து, ஊர் துறந்து ஓடும் நிலைக்கு நான் ஆளாகிவிட்டதுதான்.

கடந்தகால நினைவுகளிலிருந்து விடுபட விரும்பி மீண்டும் துவாரத்தில் என் பார்வையைச் செலுத்தினேன்.

இப்போது நான் அங்கு கண்ட காட்சி எனக்கு உவகையை ஊட்டவில்லை. நான் நினைத்தது போல நின்ற கோலத்தில் கூந்தலில் பூச்சூட்டிக்கொண்டு அந்தப்பெண் ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்கவில்லை. அவன் அவளைப் பார்த்து ஓவியம் வரைந்துகொண்டிருக்கவில்லை. மாறாக.....

முகத்தில் சலிப்பைத் தேங்கவிட்டிருந்த அவள், “இன்னிக்கிப் பெங்களூரைச் சுத்தினதில் ரொம்பவே களைப்பா இருக்கு. காலெல்லாம் கடுகடுன்னு வலிக்குது. ஓவியத்தை நாளைக்கு வரையலாங்க” என்று சொல்லி, படுக்கையில் குப்புறக் கவிழ்ந்தாள்.

அவனோ கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை. சட்டென அவளின் கால்மாட்டில் அமர்ந்து கால்களை அமுக்கிவிடத் தொடங்கினான்.
என்னுள் லேசான அதிர்ச்சி. எனக்குள்ள குணங்கள் இவனுக்கும் இருக்கிறதே. ஒரு வேளை.....

அவனுக்குகூட...அவன்தான்  என் மனைவி பெற்ற பிள்ளை -அவனுக்கும் இவன் வயதுதான் இருக்கும். தோற்றத்திலும் செயலிலும் என்னைப் பிரதிபலிக்கும் இவன் என் மகனாக இருப்பானோ? அவன்தான் இவனோ?
என் மனதில் கலக்கம்; ஒருவித நடுக்கம். அந்த நாள்...அந்தச் சம்பவம்...பெருந் துயரமாக உருவெடுத்து என் உள்மனதை உறுத்தியது. படுக்கையில் மல்லாந்து சாய்ந்தேன். மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியைப் போலவே, என் சிந்தனையும் அந்தச் சோக அனுபவத்தைச் சுற்றியே சுழலத் தொடங்கியது.

அப்பொழுது மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் எனக்கு வேலை. ‘மலர்’ தயாரிப்பு சம்பந்தமாக ஒரு நாள் இரவு நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.

“சுமதி, இன்னிக்கி வீடு திரும்ப நேரமாகும். அலுவலகத்திலேயே தங்க வேண்டியிருக்கலாம். என்னை எதிர்பார்க்காம சாப்பிட்டுப் படுத்துடு” என்று சொல்லிவிட்டு அலுவலகம் போய்ச் சேர்ந்தேன்.

எதிர்பாராத வேறு அலுவல் காரணமாக, பத்திரிகை ஆசிரியர் அலுவலகம் வரவில்லை. இருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய பணி அது என்பதால் நானும் வீடு திரும்ப நேரிட்டது.

வீடு உள்ளே தாளிடப்பட்டிருந்தது. வழக்கமாகக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கதவைத் திறக்கும் என்னவள் நீண்ட நேரத் தாமதத்துக்குப் பிறகே கதவைத் திறந்தாள். அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதைவிடப் பேரதிர்ச்சியும் காத்திருந்தது.

சுமதியைத் தொடர்ந்து உள்ளே நான் நுழையும்போது, இருட்டில் சுவர் ஓரம் பதுங்கிப் பதுங்கி முகம் மறைத்த ஓர் உருவம் வெளியேறியது கண்டு நிலைகுலைந்தேன்.

விளக்கைப் போட்டேன். சுமதி முக்காடிட்டுப் படுக்கையில் சரிந்தாள். படுக்கையை ஒட்டிக் கீழே கிடந்த சில சிகரெட் துண்டுகள் எனக்கு என்னவள் செய்த துரோகத்தை உறுதிப்படுத்தின.

நான் ஆவேசம் கொண்டு துரோகம் இழைத்த என்னவளை அடித்து நொறுக்கவில்லை; கழுத்தை நெறித்துக் கொன்றுபோடவும் இல்லை. காரணம், ஓர் ஓவியனுக்குரிய மிக மென்மையான குணங்கள் என்னுள் இரண்டறக் கலந்திருந்ததுதான்.

பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தாலும் சிந்திக்கும் அறிவை நான் இழந்துவிடவில்லை. ஆழ்ந்து சிந்தித்ததன் விளைவாக, சராசரிப் பெண்ணான சுமதியை ‘அது’ விசயத்தில், ‘இது போதும்’ என்று அவள் நினைக்கும் அளவுக்குக்கூட திருப்தி படுத்தாத தவற்றை என்னால் உணர முடிந்தது. 

அவளின் புற அழகைச் சுவைக்கும் ரசிகனாக வாழ்ந்தேனே தவிர, அவளுக்குள் அடங்கிக் கிடந்த அளவிறந்த தாப உணர்ச்சிகளை அறிந்துகொள்ள முயன்றதே இல்லை. ஆகவே, அவளைத் தண்டிக்கும் உரிமை எனக்கில்லை என்பதையும் நான் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆனாலும், சாக்கடையில் விழுந்துவிட்ட மலரைச் சட்டையில் சொருக்கிக்கொள்ளவும் நான் தயாராக இல்லை.

விரக்தி முழுமையாக என் நெஞ்சை ஆக்கிரமிக்க, மனைவியையும் பிறந்து வளர்ந்த ஊரான மதுரையையும் துறந்து சென்னையில் குடியேறினேன்.
கவலையை மறக்க ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டேன். சில ஆண்டுகளில் நாடறிந்த ஓவியனும் ஆனேன்.

கட்டியவளைப் பிரிந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் குடும்ப நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. என்னைக் கண்டதும், “மகிழ்ச்சி...பாராட்டுகள்” என்று கை குலுக்கினார்.

“எதற்கு?” என்றேன் புரியாமல்.

“உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான்” என்றார் அவர். எங்கள் பிரிவுக்கான உண்மைக் காரணம் அவருக்குத் தெரியாது. ஏன், என்னையும் அவளையும் அந்த மூன்றாம் நபரையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

மகிழ்வதற்குப் பதிலாக மனம் கலங்கினேன். பிள்ளை பிறந்திருக்கிறான், அதாவது, நான் தாலி கட்டியவள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறாள். சரிதான். ஆனால், அந்தப் பிள்ளை எனக்கே எனக்குத்தான் பிறந்தான் என்பது என்ன நிச்சயம்?

மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். நிர்ச்சலனமாய் இயங்கிக்கொண்டிருந்தேன்.

அந்தப் பிள்ளையை... நான் தாலி கட்டியவள் பெற்ற பிள்ளையைக் காணும் முயற்சியில் நான் ஈடுபடவே இல்லை. அதற்கான வாய்ப்பும் ஏற்படவில்லை.
பழையவை பற்றிய சிந்தனையிலிருந்து மீண்டும் விடுபட்டேன். என் எண்ணமெல்லாம் அடுத்த அறை வாலிபனைப் பற்றியே இருந்தது. ஒரு நெருங்கிய நண்பரைச் சந்திக்க பெங்களூர் வந்த இடத்தில் இப்படியான ஓர் அனுபவம் வாய்க்கும் என்று நான் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை.

பக்கத்து அறையில் அவன் பேசுவது கேட்டது.

“சரிடா, நீ ரொம்பத்தான் களைச்சுப் போயிருக்கே. ரெஸ்ட் எடுத்துக்கோ. இங்கே ஓவியக் கண்காட்சி நடக்குது. பார்த்துட்டு வர்றேன். திரும்பி வர்றதுக்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும். வரட்டுமா?”
கதவு சாத்தப்படும் ஓசை. 

மல்லாந்து படுத்துச் சிந்தனையில் ஆழ்ந்தேன். என் நினைப்பை முழுமையாக அவன் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தான். 

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. மீண்டும் பக்கத்து அறையில் பேச்சுக்குரல். பெண்ணின் குரலோடு ஓர் ஆணின் குரலும் கேட்டது. செவியைக் கூர் தீட்டினேன்.

“நாங்க இங்க வந்தது உனக்கு எப்படித் தெரிஞ்சுது?” -அவள் ஆவலுடன் கேட்டாள்.

“வியாபார விசயமா வந்து ஒரு வாரம் போல இந்த விடுதியில்தான் தங்கியிருக்கேன். பக்கது அறைதான். நீங்க உள்ளே நுழையும்போதே பார்த்துட்டேன். இப்போ உன் புருசன் வெளியே போறதையும் பார்த்துட்டுத்தான் உன்கூடப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன். ஜாலியா உல்லாசப் பயணம் வந்திருப்பீங்க போலிருக்கு” என்றான் அவன்.

“ஜாலியா இருக்கலாம்னுதான் கூட்டிட்டு வந்தாரு. வந்த இடத்தில் போஸ் குடு குடுன்னு உயிரை எடுத்தார். மாட்டேனுட்டேன். ஓவியக் கண்காட்சி நடக்குதாம் பார்த்துட்டு வர்றேன்னு போயிருக்காரு. ஓவியம் ஓவியம்னு பித்துப் பிடிச்சி அலையுறாரு.”

“பித்தும் வெறியும் இருந்தாத்தானே பெரிய ஓவியராப் புகழ் பெற முடியும்?” என்ற அவனின் குரலில் நக்கல் தொனித்தது.

“இப்படிப் பித்துப் பிடிச்சி அலையறவருக்கு எதுக்குக் கல்யாணம்? இவர் தன் அப்பாவை நினைச்சாவது பாடம் கத்துகிட்டிருக்கணும்.”

“நீ யாரைச் சொல்லுறே?”

“இவரைப் பெத்த அப்பா, அதாவது என் மாமனாரைச் சொல்லுறேன். பிரபல ஓவியர் சந்திரமோகனைச் சொல்லுறேன். கட்டிய பெண்டாட்டியைச் சந்தேகப்பட்டதால ஓடிப்போனவர் அவர். நடந்ததை எல்லாம் இவரோட அம்மாவே சொல்லியிருக்காங்க. சரி...சரி...கண்ட கதையைப் பேசி ஏன் நேரத்தை வீணாக்கணும்? போன அந்த ஆள் திரும்பி வர்றதுக்குள்ளே.....”

அதன் பிறகு இருவருக்கும் இடையேயான சல்லாப மொழிகளைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. அறையைச் சாத்திக்கொண்டு ஓவியக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்த இளைஞனைச் சந்திக்கப் புறப்பட்டேன்.

கட்டிய மனைவியை யோக்கியமானவள் என்று நம்பி ஏமாந்த அந்தக் ஓவியக்கலைப் பித்தன்  என் மகன்தான்...என் மகனேதான். இனி என்னுடனேயே அவன் வாழ்வான்; வளர்வான்; என்னைப் போலவே புகழ் பெறுவான்.
========================================================================