கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

திங்கள், 2 மார்ச், 2020

மருத்துவர்கள் கைவிட்ட ‘தேறாத கேஸ்’ தேறிய கதை!!!

அந்த நோயைப் போராடி  ஜெயித்து, அதிலிருந்து மீண்டு, உலக சாதனை படைப்பதென்பது சாதாரணமா என்ன? அதன் பின்னேதான் எத்தனை எத்தனை ரணங்கள்!

குடும்பச் சூழ்நிலை, ஆம்ஸ்ட்ராங்கை விளையாட்டு மைதானத்துக்கு விரட்டியது. டிரையத்லான் போட்டிகளில் பிரபலம் ஆகியிருந்தும் அதைப் புறக்கணித்து சைக்கிள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார்.

அடுத்தடுத்து, பத்து டைட்டில்களை வென்ற நிலையில், அவரது மூளையையும் நுரையீரலையும் புற்று நோய் தாக்கியது. கீமோதெரப்பி சிகிச்சையின் விளைவாக அவர் உடல் பலவீனம் ஆனது. ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார்.

எதிர்பாராத நிலையில், உத்வேகம் பெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் மீண்டும் தீவிரப் பயிற்சியில் ஈடுபடலானார்.

21 நாட்கள் நடைபெறும் Tour de France போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.

அந்தப் போட்டியில் பங்கு பெறுவதே பெரிய விசயம். கிட்டத்தட்ட பிரான்ஸ்ஸையே ஒரு சுற்றுச் சுற்றி, 2130 மைல் சைக்கிள் ஓட்ட வேண்டும். செங்குத்தான மேடு, கிடுகிடு பள்ளம் என கடுமையான பாதைகளைக் கடக்க வேண்டும். இதில் பங்கேற்று, கீழே விழுந்து கைகால்களை முறித்துக்கொண்டவர்கள், உயிரை இழந்தவர்கள் ஏராளம்!

ஆர்ம்ஸ்ட்ராங் அதிகம் ரிஸ்க் எடுப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். சக வீரர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அத்தனையையும் மீறி, போட்டியில் கலந்துகொண்டார் ஆர்ம்ஸ்ட்ராங்; வெற்றியும் பெற்றார்!

“நான் சைக்கிள் சாம்பியன் ஆவதற்காகவே பிறந்தவன். புற்று நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பலரும் வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள். அது தவறு.

இந்தப் புற்று நோய், என் மன உறுதியைப் பல மடங்கு உயர்த்தியது. நான் வெற்றியாளனாகத் திகழ்வதற்கு இதுதான் காரணம்” என்று உறுதிபடச் சொல்கிறார் ஆர்ம்ஸ்ட்ராங்.

புற்று நோய் தாக்குவதற்கு முன்பு, ஒரு முறைகூட இந்தப் போட்டியில் இவர் ஜெயித்ததில்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்!
========================================================================
நன்றி:  விகடன்[24.08.2003]