அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 21 மார்ச், 2020

கரோனாவை ஒழிக்க, ‘சாயி’ பக்தர்கள் காட்டும் வழி!!!

#மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் வாழ்ந்த சாய்பாபா, அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, நன்மைகளைச் செய்தார்.

1910ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் ‘காலரா’ நோய்த் தொற்று வேகமாகப் பரவியதில் பலர் உயிரிழந்தனர்.

இதனை அறிந்த[காலரா பரவுவதற்கு முன்னரே பகவான் இதை ஞானக்கண்ணால் அறிந்து தடுக்கத் தவறியது ஏன் என்று புரியவில்லை] பகவான் சாயிபாபா, மக்களிடம்.....

‘திருகு கல்லில் கோதுமையை அரைத்து, அந்த மாவை ஊரின் நான்கு திசைகளிலும் கொட்டுமாறு கூறினார். மக்களும் செய்தார்கள். காலரா முற்றிலும் காணாமல் போனது#
இப்படிச் சொல்பவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, பகவான் சத்திய சாய்பாபா பக்தர்கள்.

இதை இப்போது நினைவுகூர்ந்த அவர்கள்,  உலகில் வெகு வேகமாகப் பரவிவரும் ‘கரோனா’ வைரஸைக் கட்டுப்படுத்தவும், பாபா காட்டிய இந்த வழிமுறையைப் பின்பற்ற எண்ணினார்கள்.

பாபா கோயிலில், திருகு கல் வைத்துக் கோதுமையை அரைத்து மாவாக்கி, அதனை நான்கு சாலைச் சந்திப்புகளில் தூவியிருக்கிறார்கள். இதன்  மூலம திருச்செங்கோடு வட்டாரத்தில் கரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது!!!

இச்செய்தியை, இன்றைய ‘தமிழ் இந்து’[21.03.2020] நாளிதழ் வெளியிட்டுள்ளது.  இதனை ஆட்சியாளரும் முக்கிய அதிகாரிகளும் வாசித்து அறிந்திருப்பார்கள். உடனடியாக, சாயி பக்தர்கள் காட்டிய இந்த வழிமுறையை உலகெங்கிலும் உள்ள நாட்டு அரசுகளுக்கெல்லாம்  அவர்கள் அறிவிப்பார்களேயானால்.....

அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து, கோதுமை மாவு அரைத்து, விமானங்கள் மூலம் உரிய முறையில் உலகம் முழுதும் தெளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அதன் விளைவாக, ஒட்டுமொத்த உலகையும் நடுநடுங்கச் செய்துகொண்டிருக்கும் கரோனா என்னும் அரக்கன் அழித்தொழிக்கப்படுவான் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!

அறிவிப்புச் செய்வார்களா?
=======================================================================