செவ்வாய், 31 மார்ச், 2020

அம்மம்மா!...அண்டவெளியில் இத்தனை சூரியன்களா!!!

நாம் பார்க்கும் சூரியனிலிருந்து ஒளி நம் பூமிக்கு வந்துசேரப் பத்து நிமிடங்கள்தான் ஆகிறது. பூமிக்குச் சற்றுத் தொலைவில் உள்ள அடுத்த சூரியன் 04[நான்கு] ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அந்தச் சூரியனின் ஒளியானது நம்மை வந்தடைய நான்கு ஆண்டுகள் ஆகும்.

வெகு தொலைவில் இன்னும் பல சூரியன்கள் உள்ளனவாம். அவற்றிலிருந்து ஒளிக்கிரணங்கள் இங்கு வந்தடைய லட்சக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தப் பூமி உருவாவதற்கு முன்னரே வெகு வெகு வெகு தொலைவிலிருக்கும் பல சூரியன்கள் தத்தம் ஒளிக்கிரணங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்தக் கிரணங்கள், பூமி உருவாகி 450 கோடி  ஆண்டுகள் ஆன பிறகும் இங்கு வந்துசேரவில்லையாம்.

அந்தச் சூரியன்களுக்கு அப்பாலும் பல சூரியன்கள் இருக்கக்கூடுமாம். நெடு நெடு நெடு நெடு நெடுந் தொலைவிலுள்ள அவற்றின் ஒளிக்கிரணங்கள் நொடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல்கள் என்ற அளவில் அதிபயங்கர வேகத்தில் பயணம் செய்துகொண்டே இருக்கின்றன. இருந்தும், அவை வந்து சேருவதற்கு முன்னரே இந்தப் பூமி அழிந்தும் போகலாம் என்று அனுமானிக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

இவையெல்லாம் விண்வெளியில் நிகழும் விந்தைகள். 

ஒட்டுமொத்தப் பிரபஞ்ச வெளியில் இம்மாதிரி எத்தனை எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும். அனைத்தையும் மனித அறிவால் அனுமானிப்பதென்பது எக்காலத்தும் சாத்தியமே இல்லை என்கிறார்கள் இந்த அறிஞர்கள். இந்த அற்ப அறிவை வைத்துக்கொண்டுதான் கடவுள், ஆன்மா, பூதம் பேய், பிசாசு, சொர்க்கம் நரகம் என்று கதையளந்துகொண்டிருக்கிறார்கள் நம் அவதாரங்களும் ஆன்மிகப் பிதாமன்களும்!
========================================================================================================================================================================================================================
ஓர் அறிவியல் பருவ இதழிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த குறிப்புரை கொண்டு எழுதப்பட்ட பதிவு இது. இதழின் பெயரைக் குறித்துவைக்கவில்லை.