அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 1 ஏப்ரல், 2020

ஆண்மை நீக்கம் அல்லது காயடித்தல்!

மறைந்த நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சிறுமிகளை வன்புணர்வு செய்யும் கயவர்களுக்கு ரசாயன முறையில் 'ஆண்மை நீக்கம்’ செய்ய வேண்டும் என்று பேசியதாகப் பழைய[2013இல் வெளியானது] வார இதழ் ஒன்றில் படிக்க நேர்ந்தது.

கிராமப்புறங்களில், மாடுகளைத் தேடி அலையும் காளைகளை நான்கைந்து பேர் சேர்ந்து தரையில் கிடத்தி, விரை நீக்கம் செய்யும் காட்சி நினைவுக்கு வந்தது. 

திணவெடுத்து அலையும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வது பற்றி அறியும் ஆர்வத்தில் இது குறித்த தகவல்களைக் கூகுளில் தேடினேன். ஏராளத் தகவல்கள் கிடைத்தன. குங்குமம் வார இதழில் வெளியான ஒரு தகவல் தொகுப்பின் சுருக்க வடிவை இங்கே பதிவு செய்கிறேன். வாசித்து மகிழ்ந்திடுங்கள்.
#ஆண்மை நீக்கம் என்பது அறுவை சிகிச்சை, ரசாயன முறை அல்லது பிற வழிகள் மூலம் ஆணின் விரைகளைச் செயலிழக்கச் செய்தலாகும். இப்படிச் செய்த பின், அவர் கலவியில் ஈடுபட முடியாது. குழந்தை பெறவும் இயலாது. ஆங்கிலத்தில் Castration என்பார்கள். 

பழங்காலத்தில் மொத்த பிறப்புறுப்பையும் நீக்குவதன் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. ஆனால், ரத்தப் போக்கால் நிறைய மரணங்கள் நிகழ்ந்ததால் அம்முறை பெருமளவில் கைவிடப்பட்டது.

விரைகளை மட்டும் நீக்குவது ஒப்பீட்டளவில் பாதுகாப்பு. 

கி.மு 2281ல் சீனாவில் யூ ஷுன் என்ற அரசன், ஆண்மை நீக்கத்தை குற்றங்களுக்கு தண்டனையாக அறிவித்தான். கி.மு 950ல் ‘மு’ என்ற அரசனின் குற்றவியல் துறை அமைச்சராக இருந்த மார்க்யூஸ் லூ, மரண தண்டனைக்குப் பதிலாக ஆண்மை நீக்கத்தை அறிமுகம் செய்தார். ஷாங் அரச மரபில், போர்க் கைதிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது வழக்கத்தில் இருந்தது. கிரிமினல் குற்றவாளிகளுக்கு சீனாவில் அளிக்கப்படும் 5 தண்டனைகளில் ஒன்றாக ஆண்மை நீக்கம் இருந்தது. 

ஸோவு மரபில், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு இதைச் செய்தனர்.
ஹான் அரச மரபிலும் இந்த தண்டனை தொடர்ந்தது. அரசுக்கு எதிராகக் கருத்து சொன்னதற்காக, சிமா கியான் என்ற பிரபல சீன வரலாற்றறிஞருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. மற்றொரு நிகழ்வில் அரசு தஸ்தாவேஜுகளை பிரதி எடுப்பவர்கள் எல்லோரும் கும்பலாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டனர். 

சீனாவில் ஆண்மை நீக்கம் என்பது, பிறப்புறுப்பை மொத்தமாக கத்தி கொண்டு துண்டிப்பதாகும்.

கொரியாவில் நாயை ஏவிவிட்டு, கடித்துக் குதறச் செய்து கொடூரமாக ஆண்மை நீக்கம் செய்தனர். 

3ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள், காம இச்சையைத் தடுக்க ஆண்மை நீக்கத்தை ஓர் உபாயமாகக் கையாண்டனர். 


யூத மதம் விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ ஆண்மை நீக்கம் செய்வதை தடை விதித்தது. ஆண்மை நீக்கம் செய்த விலங்குகளை கோயில்களில் பலியிட அனுமதி இல்லை. ஆண்மை நீக்கம் செய்த பாதிரிகள், வழிபாடுகள், பலிகள் மற்றும் கொடைகளில் பங்குகொள்ள தகுதியற்றவர்கள்.

பண்டைய எகிப்தில் கள்ளத்தொடர்புக்குத் தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்தனர். 

தோற்ற நாடுகளின் பெண்களை ‘முழுமையாக’த் தமதாக்கிக் கொள்ளவும் அந்நாட்டு ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தார்கள். 11ம் நூற்றாண்டில் நார்மன்கள் இத்தாலி மற்றும் சிசிலியின் மீது படையெடுத்தபோது, தோல்வியுற்ற வீரர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தனர்.

12ம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் கற்பழிப்புக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்தனர். 

இங்கிலாந்தில் தேசத்துரோகக் குற்றங்களுக்கு ஆண்மை பறிப்பும், ஒரு கண்ணைப் பிடுங்குதலும் தண்டனையாக இருந்தது. 

பிரெஞ்சு தத்துவ ஞானி மற்றும் துறவியான பியரி ஏப்லார்ட், அவரது காதலியின் உறவினர்களால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார்.


16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் பெண்கள் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடத் தடை இருந்தது. அதனால் விடலைப் பையன்களுக்கு இளம் வயதிலேயே - அதாவது, குரல் உடையும் முன் - ஆண்மை நீக்கம் செய்து, அவர்களுக்கு பெண்கள் போன்ற மென்மைக் குரல் வரச் செய்தனர். 


1778ல் வர்ஜீனியாவில் தாமஸ் ஜெபர்ஸன் கற்பழிப்பு, பலதார மணம், ஓரினப் புணர்ச்சி ஆகியவற்றுக்கு மரணதண்டனைக்குப் பதிலாக ஆண்மை நீக்கத்தைத் தண்டனையாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். 

1899 முதலே அமெரிக்காவில் இது புழக்கத்தில் இருக்கிறது.

செக் குடியரசு பாலியல் குற்றங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வதை தண்டனையாக வைத்திருக்கிறது. 

தெற்கு ஆசியா, ஆப்ரிக்கா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில்தான் மத, சமூக காரணங்களுக்காக ஆண்மை நீக்கம் செய்வது பரவலாக இருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு ரசாயன முறையில் தற்காலிக ஆண்மை நீக்கம் செய்வது பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது. சமீபத்திய டெல்லி கற்பழிப்புச் சம்பவத்துக்குப் பின் இந்தியாவிலும் இதைச் செய்யலாம் என நம் முதல்வர் உட்பட பலர் பரிந்துரைத்தார்கள். ஆனால், நீதிபதி வர்மா கமிட்டி, ‘இது அரசியலமைப்புக்கும் மனித உரிமைக்கும் எதிரானது’ என நிராகரித்தது#
====================================================================