“நீ வேலை செய்யுற வீட்டில் எவ்வளவு சம்பளம் தர்றாங்க?” -காய்கறி வாங்க வந்த தவமணியிடம் கேட்டாள் கடைக்காரி அழகம்மா.
“ஆறாயிரம்” என்றாள் தவமணி.
“என் எதிர்த்த வீட்டு மருந்துக் கடைக்காரர் சம்சாரம் வேலைக்கு ஆள் வேணும்னு சொல்லிச்சி. மாசம் ஏழாயிரம் தருவாங்களாம். வந்துடேன்.”
“ஊஹூம்.”
“ஏண்டி, ஆயிரம் ரூபா அதிகம் வருது. மருந்துக் கடைக்காரர் வீட்டுக் காசு கசக்குமா?”
“அதில்லம்மா. இப்ப வேலை செய்யுற வீட்டை விட்டுட மனசில்ல.”
”ஏனாம்?”
“பெரியவங்களும் சரி சிறுசுகளும் சரி, வாங்க போங்கன்னு எனக்கு மரியாதை குடுத்துத்தான் பேசுவாங்க. ரெண்டு நாள் சொல்லாம நின்னுட்டாலும் உடம்பு சுகமில்லியான்னு கேட்பாங்களே தவிர, ஏன் வரலேன்னு எரிஞ்சி விழ மாட்டாங்க. சாப்பிட்ட எச்சில் தட்டுகளைத் தண்ணியில் அலசிட்டுத்தான் கழுவக் குடுப்பாங்க. வீட்டு வேலையைத் தவிர வேறே வேலை எதுவும் தரமாட்டாங்க. வருசம் தவறாம சம்பளத்தையும்....”
குறுக்கிட்டாள் அழகம்மா, “போதும்டி. வேலைக்காரிய இத்தனை கவுரவமா நடத்துற குடும்பத்தை வேற எங்கயும் பார்க்க முடியாது. நீ குடுத்து வெச்சவடி” என்றாள் அழகம்மா.