புதன், 29 ஏப்ரல், 2020

நான் ‘பரமசிவம்’ ஆன கதை!

முன்னிரவு.

நான்[‘பசி’பரமசிவம்] அப்போது ஒரு மாதக் குழந்தை.

வயிறு முட்டத் தாய்ப்பால் குடித்து அவர் மடியிலேயே உறங்கிக்கொண்டிருக்கிறேன்.

வாசல் பக்கமிருந்து, “பசிக்குது தாயே. எதுவும் தர்மம் பண்ணுங்க” என்ற குரல். 

என்னைத் தரையில் கிடத்திவிட்டு, அன்று மீதமாகியிருந்த கொஞ்சம் கம்மஞ்சோற்றுடன் வெளியே போகிறார் என் அன்னை. தூக்கம் கலைந்து வீறிட்டு அழுகிறேன் நான்.

“தாயே, குழந்தை அழுகிறதே. ஆணா, பெண்ணா? மாசம் எத்தனை?” என்று விசாரிக்கிறார் நெற்றி நிறையத் திருநீர்ப் பட்டையும், கழுத்து கொள்ளாமல் உருத்திராட்சக் கொட்டையுமாகக் காட்சியளித்த சாமியார்.

“ஆண் குழந்தை. பொறந்து ஒரு மாசம் ஆச்சு” என்கிறார் அன்னை.

“சந்தோசம் தாயே. நான் சிவபக்தன் சொல்லுறேன், குழந்தைக்குப் ‘பரமசிவம்’னு பெயர் வையுங்க” என்கிறார் சாமியார். அம்மா அளித்த சோற்றை உண்டுவிட்டு, “ரொம்பக் களைச்சுப்போயிருக்கேன். இன்னிக்கி ராத்திரி இந்தத் திண்ணையில் படுத்துக்கலாமா?” என்கிறார். 

அம்மா “சரி” சொல்கிறார். விடியற்காலையில் வெளியே வந்து பார்த்தபோது சாமியாரைக் காணவில்லை.

நடந்ததை அம்மா அப்பாவிடம் சொல்கிறார். இருவருமாக, “கடவுளே வந்து எங்க பிள்ளைக்குப் பெயர் சூட்டினார்”னு ஊர் முழுக்கச் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள்.

‘பரமசிவம்’ என்று எனக்குப் பெயர் சூட்டப்பட்டதன் பின்னணி இது.

நீங்கள் நம்பவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.
இவரும் அவதாரம்தான்!
[ரிஷிகள்: இவர்கள் பிரம்மனின் i. கடவுளிடமிருந்து வரும் ஒலிகளைக் கிரஹிச்சி வேதத்தை வடிவமைத்தவர்களாம். முக்காலமும் உணர்ந்தவர்களாம்!]. 

“ஐயா, தங்களுக்கு ‘வேதாத்திரி’ என்ற பெயர் பெற்றோர் வைத்ததா, ஆன்மிகத் துறைக்கு வந்த பிறகு நீங்களே வைத்துக்கொண்டதா?”[நூல்: ‘அருள்தந்தையின்   பதில்கள்’, வேதாத்திரி பதிப்பகம், 2ஆம் பதிப்பு, 1997] என்னும் கேள்விக்கு ‘வேதாத்திரி மகரிஷி’ அளித்த பதில் கீழே.

“ஒரு நாள் சாது ஒருவர் இரவு வேளையில் எங்கள் இல்லத்திற்கு வந்துள்ளார். ஏழ்மையிலும் தங்களுக்கு இருந்த உணவை அவருக்குக் கொடுத்து உபசரித்துள்ளார்கள் என் பெற்றோர். அப்போது உள்ளே குழந்தை அழுவது கேட்டிருக்கிறது. அதை விசாரித்த பெரியவரிடம், ஒரு வாரத்துக்கு முன்பு ஆண் மகவு பிறந்துள்ளதை என் தாயார் கூறியுள்ளார். குழந்தைக்கு ‘வேதாத்திரி’ என்று பெயர் வைக்குமாறு அவர் கூறினார்; திண்ணையில் படுத்துறங்கினார். காலையில் அவரைப் பற்றி விசாரிக்க முனைந்தபோது திண்ணையில் அவரைக் காணவில்லை. அவர் சொன்னபடியே வேதாத்திரி என்று எனக்குப் பெயர் சூட்டப்பட்டது.”

கடவுள் ஒரு சாது வடிவில் வந்து தனக்குப் பெயர் சூட்டிப் போனதாகச் சுற்றிவளைத்துச் சொல்லியிருக்கிறார் வேதாத்திரி. [மகான்கள் குறித்த இம்மாதிரிக் கதைகள் ஏராளம்]. இதை நம்மவர்கள் நம்புகிறார்கள். நான் சொன்ன கதையை[உண்மைக் கதைங்க] நம்ப மாட்டார்களா என்ன?!

நன்றி.
========================================================================