அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 1 மே, 2020

'செக்ஸ்’ சாமியார் ‘ஓஷோ’ ஞானி ஆனது எப்படி?!

//‘ஓம்’ என்பது ஓர் அபூர்வமான சொல். அரிய சொல். அது அற்புதமானது என்பதற்குக் காரணமே இதற்கு எந்தப் பொருளும் இல்லை என்பதுதான். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன. ஆனால், ஓமுக்குப் பொருளில்லை. உலகத்திலேயே பொருளற்ற சொல் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்// 

-இது, ‘ஓம்’ என்னும் ஒலிக்கு, உலக அளவில் ’ஞானி’ என்று புகழப்பட்ட ‘ஓஷோ’ தந்த விளக்கம்[‘நீ நீயாக இரு’ கண்ணதாசன் பதிப்பகம்].

இப்படியொரு சிறு விளக்கம் தந்ததோடு இந்த ஞானி நின்றாரில்லை. 
‘ஓம் என்பது ஒரு கண்டுபிடிப்பு. சொல்லுக்கும் மௌனத்திற்கும் இடையில் ஒரு தொடர்பை[???] அல்லது, பாலத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்கள்தான் இதைக் கண்டுபிடித்தார்கள். ஒலியின் எல்லை முடிந்து மௌனம் ஆரம்பமாகிற இடத்தைச் சுட்டிக்காட்டும் அடையாளம்தான் ‘ஓம்’ என்கிறார்.

இந்த ‘ஓம்’ என்னும் வெற்றொலிக்கு[வெற்றொலியேதான்; சொல் அல்ல] இன்னும் விதம் விதமாய் விளக்கங்கள் தந்திருக்கிறார் இவர்.

இந்தியாவின் மகாஞானம் இந்த ஓம்காரத்தில் வெளிப்படுகிறதாம். [ஞானம் சரி, அதென்ன மகாஞானம்?]

‘நீங்கள் தியானத்திலிருக்கும்போது ‘ஓம்’ஐ உச்சரிக்க வேண்டியதில்லை. அதுவாகவே உங்கள் காதுகளில் அதிரும்[நீங்கள் தியானம் செய்பவரா? எத்தனை முறை அதிர்ந்தது?]’ 

‘இரு கை தட்டினால்தான் ஓசை பிறக்கு. இதுவோ உண்டாக்கப்படாத[???] ஒரு கை ஓசை. மற்ற ஓசைகள் அடங்கிவிட்ட நிலையில் உண்மையான ஓம்காரத்தை நீங்கள் கேட்க முடியும்’  

‘உண்மையான ‘ஓம்’ ஒரு வெடி முழக்கம். உங்களின் உள்ளார்ந்த இருப்பிலிருந்து[???] தோன்றுவது அது’

‘பிற மதங்களிலும் இது ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேசச் சொல் இது’

மேண்கண்ட உரைகளை ஒரு முறைக்கு ஐந்தாறு முறை படியுங்கள். படித்துவிட்டுச் சொல்லுங்கள், “ஏதாவது புரிந்ததா?”

நீங்கள் என்ன சொல்வீர்களோ, என் பதில், “புரியவில்லை” என்பதுதான்.

தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரியாமல் பேசிப் பேசியே ஞானி ஆனவர் இந்த ஓஷோ. இப்படி ஞானி ஆனவர்களும், மகான் ஆனவர்களும், பகவான் ஆனவர்களும், அவதாரம் ஆனவர்களும் எல்லாக் காலங்களிலும் இங்கே இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்.
========================================================================