இந்நாள்வரை, கடவுளைக் கண்களால் பார்த்தோ, உடல் உறுப்புகளால் தீண்டியோ, செவிகளால் கேட்டோ, நாவால் சுவைத்தோ, மூக்கால் முகர்ந்தோ அறிந்தவர் அல்லது உணர்ந்தவர் எவருமிலர்[இந்த உண்மையை மறைத்து, “கடவுளைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறாய். கம்பிக்குள் மின்சாரம் இருப்பதை நீ பார்த்ததில்லை. நம்புகிறாய். கடவுளை நம்பு” என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்துபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
ஐம்புலன்களால் அறிந்திராத அல்லது, உணர்ந்திராத எப்பொருள் பற்றியும் சிந்திப்பது சாத்தியமே இல்லை. கடவுளும் இதற்கு விதிவிலக்கல்லர்.
ஆறாவது அறிவின் துணையுடன் ‘அனுமானம்’ செய்வதன் மூலமாகவே கடவுள் என்று ஒருவர் இருப்பதாக ஆன்மிகவாதிகள் சொன்னார்கள்; சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அனுமானம் என்பது ‘உண்மை’யைக் கண்டறிவதற்கான ஒரு ‘வழிமுறை’ மட்டுமே. அதனால் அறியப்படுபவை அனைத்தும் உண்மை ஆகிவிடா.
[கடவுளை அனுமானம் செய்யும் ஆன்மிகவாதிகள், ‘கடிகாரம் ஒரு படைக்கப்பட்ட பொருள். அது ஒரு மனிதனால் படைக்கப்பட்டது. அது போல், பிரபஞ்சம் ஒரு படைப்பு. இதைப் படைத்தவர் கடவுள்’ என்று சொல்லி மிக எளிதாகக் கடவுள் இருப்பதை உறுதிப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
இவர்களின் அனுமானத்தில் பிழைகள் உள்ளன. கடிகாரத்தைப் படைக்கப்பட்ட பொருள் என்று குறிப்பிட்டதே தவறாகும். பல்வேறு மூலப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே கடிகாரம் என்பதை அறியவில்லை அவர்கள்[இவர்களின் நோக்கில், படைப்பு என்பது நொடிப்பொழுதில் மனதால் நினைத்தோ அபயக்கரம் உயர்த்தியோ நிகழ்த்தும் செயல்].
அது போல, பிரபஞ்சம் ஒருவரால் படைக்கப்பட்டது என்று சொல்வதும் தவறு. பிரபஞ்சம் இருந்துகொண்டே இருப்பதா, தானாகத் தோன்றியதா, படைக்கப்பட்டதா என்பவை குறித்தான ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை].
முழு உண்மை அறிவதில் ஈடுப்பாடின்றி, அனுமானங்களின் மூலம் அறியப்பட்ட கடவுள் எனப்படுபவரை இடைவிடாத பரப்புரைகளின் மூலம் மக்களை நம்ப வைத்துவிட்டார்கள் பக்திமான்கள்.
கடவுளை நம்பிய மக்கள், கடவுளைப் போலவே கற்பனை செய்யப்பட்ட ஆன்மா, சொர்க்கம் நரகம், ஆவி, பேய், பூதம் போன்றவற்றையும் நம்பினார்கள்; நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நிகழ்வுக்கான உண்மைக் காரணத்தை ஆராய்ந்து கண்டறிய இயலாதபோதெல்லாம், அது கடவுளால் நிகழ்ந்தது என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள்.
அம்மன் கண்களில் கண்ணீர் வழிவது, அவளின் சீற்றத்தால் அம்மை நோய் வருவது, வேப்ப மரத்தில் பால் வடிவது, வானில் உலாவரும் நட்சத்திரங்களையும் கோள்களையும் கடவுள்களாக்கி வழிபடுவது, உண்டு கழித்து வாழ்ந்து மடியும் மனிதர்களைக் கடவுளின் அவதாரங்கள் ஆக்குவது என்றிப்படி ஏராள நிகழ்வுகளை இதற்கு எடுத்துக்காட்டு ஆக்கலாம்.
கடவுள் நம்பிக்கையை ஒழித்தால் மட்டுமே மேற்கண்ட வகையிலான கணக்குவழக்கற்ற மூடநம்பிக்கைகளை ஒழித்திட முடியும் என்பது உறுதி.
========================================================================