இன்று[04.05.2020] காலை, ஓங்கு புகழ் மதுரையம்பதியில், அதி அற்புதமான சுபயோக சுபமுகூர்த்தத்தில் திருவளர் இறைவன் சுந்தரேசருக்கும் திருவளர் இறைவி மீனாட்சிக்குமான திருமணம் இனிதே நடந்தேறியது.
புரோகிதர் இருவர், வேதமந்திரம் ஓதிக்கொண்டே தம் திருக்கரங்களால் ஒருசேரப் பற்றிய திருமாங்கல்யத்தை, பலமுறை முன்பின் அசைத்து மணமகன் சுந்தரேசருக்குக் காட்டி, மணமகள் மீனாட்சியம்மைக்கும் காட்சிப்படுத்திய பின்னர் அம்மையின் கழுத்தில் அந்தப் புரோகிதர்கள் அதை அணிவித்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
தம் பிள்ளைகளான பிள்ளையார், முருகப்பெருமான் ஆகியோருடன் கைலயங்கிரியில் வீற்றிருக்கும் அம்மையும் அப்பனும்[மீனாட்சி-சுந்தரேசர்] இக்காட்சி கண்டு புன்னகை புரிந்ததை என் மனக்கண்ணால் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்.
என் இரு கண்களிலும் தாரை தாரையாய் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்திட, மணக்கோலம் பூண்டிருந்த ‘மீனாட்சி- சுந்தரேசர்’ தம்பதியரை, “தீர்க்காயுசுடன் வாழ்க! கோடி கோடி கோடி கோடியோ கோடி ஆண்டுகள் வாழ்க!!” என்று வாழ்த்தி மகிழ்ந்தேன்.
========================================================================
========================================================================